வீட்டிலேயே தயாரிக்கலாம் நச்சில்லாத பேபி பவுடர்!


மார்கெட்டில் விற்கப்படும் கெமிக்கல் நிறைந்த டால்கம் பவுடர்களால் பெரியவர்களே பாதிக்கப்படும்பொழுது, குழந்தைகளின் மிருதுவான சருமத்தை பாதிப்பிலிருந்து காப்பது மிக அவசியம்.
இதற்கு மாற்றாக வீட்டிலேயே 'இயற்கை முறை டால்கம் பவுடர்' தயாரிக்கும் முறை பற்றி சொல்கிறார் அழகுக்கலை நிபுணர் ராஜம்முரளி...நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக் கூடிய உலர்ந்த செண்பகப் பூ, மகிழம் பூ, பன்னீர் ரோஜா இதழ்கள், மரிக்கொழுந்து, சிகப்பு சந்தனம் (Red Sandal) அனைத்தையும், சம அளவில் எடுத்து ஒன்றாக அரைத்து பவுடராக்கிக் கொள்ளவும்.

அதிக அளவு தேவையெனில் மாவு மெஷினிலும், குறைந்த அளவை வீட்டில் மிக்ஸியிலேயே பொடி செய்துகொள்ளலாம்.

தரையில் ஒரு நியூஸ் பேப்பரை விரித்து, அதன் மேல் மாவு சலிக்கும் சல்லடையில் ஒரு மஸ்லின் துணியை விரித்துக்கொண்டு, அதில் அரைத்து வைத்த பொடியை போட்டு ஒரு கரண்டியால் தட்டி தட்டி சலிக்கவும். கீழே உள்ள நியூஸ் பேப்பரில் விழக்கூடிய மிருதுவான பொடியை காற்றுபுகாத டப்பாவில் போட்டு பத்திரப்படுத்தவும்.

இதுதான் இயற்கை முறை டால்கம் பவுடர். இதை குழந்தையிலிருந்தே உபயோகிக்கும்போது, வளர்ந்த பிறகும் சருமம் மிருதுவாகவும், சரும நோய்கள் வராமலும் இருக்கும்.

வாசனை பவுடர்...


ரோஜா இதழ்கள் போட்டு கொதிக்கவைத்து வடிகட்டப்பட்ட தண்ணீரை சிறிதளவு எடுத்து, அரைத்து வைத்துள்ள பவுடரில் தெளித்து நிழலில் உலர்த்தி எடுத்தால் வாசனைமிகுந்த டால்கம் பவுடர் தயார். ரோஜாவிற்கு பதில் மல்லிகை பூக்களையும் உபயோகிக்கலாம்.

இதை பெரியவர்கள் குறிப்பாக டீன் ஏஜ் பெண்கள் முகத்திற்கு உபயோகிக்கலாம். இது முகத்தின் மீது மேக்கப்போட்டது போன்ற தோற்றம் இல்லாமல், சரும நிறத்திலேயே இருக்கும். அதே சமயம் முகத்திற்கு 'பளிச்' பொலிவைத் தரும்.


Similar Threads: