உடற்பயிற்ச்சி செய்வதன் மூலமும் யோகா செய்வதாலும் நல்ல சத்துள்ள உணவு உண்பதாலும் தூக்கத்தினாலும் எமது உடலுக்கு ஓய்வும் நலமும் கிடைக்கிறது. அத்துடன் ஸ்நானம் செய்வதன் மூலம் உடலை சுத்தம் செய்கிறோம். ஆனால் எங்களது ஆன்மா நாளுக்கு நாள் இந்த மானிட பிறப்பிலே ஏற்படும் துன்பங்களாலும் அவசரங்களாலும் ஏமாற்றங்களாலும் வேதனையுற்று நலிவுற்று போகின்றது.

அந்த ஆன்மாவை சுத்தம் செய்யவும் ஆறுதல் படுத்தவும் எமக்கு தியானம் பெரும் உதவி செய்கின்றது. எமது முள்ளந்தண்டு வடத்திலே பின்புறமாக 7 சக்கரங்கள் எமது உடலில் காணப்படுகின்றன. அவைதான் எமது உடலின் செயல்பாட்டை சீராக நடத்தும் சக்தியின் ஊற்றுகள் ஆகும்.

குண்டலினி தியானமும் 7 சக்கரங்களும்அவையாவன:

மூலதாரம்
சுவாதிட்டானம்
மணி பூரகம்
அனாகதம்
விசுத்தி சக்கரம்
ஆக்கினை சக்கரம்
சகஸ்ர நாமம்

எனப்படும் இதிலே மூலதாரம் என்னும் தண்டுவடத்தின் கீழ் பகுதியில் உள்ள சக்கரத்தில்தான் இறை சக்தி குண்டலினி என்னும் பெயரில் பாம்பு வடிவில் சுருண்டு கிடக்கின்றது. இதனால்தான் இந்து மதத்தில் பாம்புகளை தெய்வமாக வழிபடும் ஒரு முறை உண்டாகியது. காரணம் இறை சக்தி நம் உடலிலே பாம்பு வடிவில்தான் சுருண்டு கிடக்கின்றது.

அதனை முறையான தியானத்தின் மூலம் ஒவ்வொரு சக்கரங்களாக மேலே எழுப்பி சகஸ்ரநாமம் என்னும் உச்சியிலிலுள்ள சக்கரத்தை அடைய செய்ய முடிந்தால் அவன் இறை அருளை பெற்றவனாகின்றான். அல்லது ஆக்கினை என்னும் புருவ மத்தியில் உள்ள சக்கரம் வரை அந்த குண்டலினி சக்தியை எழுப்ப முடிந்தால் அவன் கடவுளை உணர கூடியவனாகவும் சகல வல்லமை உள்ளவனாகவும் சக்தி பெறுகின்றான்.

நாம் இதற்கு தினமும் தியான பயிற்சி செய்தாக வேண்டும். தியானத்துக்கு முதல் நாம் எமது மனதிலே உள்ள களவு, பொய், காமம், குரோதம், கோபம், துரோகம் போன்ற தீய குணங்களையும் விட்டு உள்ளும் புறமும் சுத்தமாக இறைவனை நினைந்து தியானம் செய்தல் உகந்ததாகும். தியானம் செய்ய ஒரு உகந்த சுத்தமான இடத்தை தேர்வு செய்து அங்கு யாரும் எம்மை இடையூறு செய்யாவண்ணம் எமது தியானத்தை செய்ய தொடங்கலாம்.

தியானம் செய்யும் இடத்தில் மலர்களின் வாசம் அல்லது சந்தணகுச்சி அல்லது சாம்பிராணி தூபம் இருப்பது மனதுக்கு அமைதியை தர வல்லது. தியானத்தின் போது நிலத்தில் சப்பணம் கட்டி அமர்தலே சிறந்தது. பின் கைகைளை கால் மேலே வைத்து பெரு விரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்த்து மற்ற விரல்களை நிமிர்த்தி வைத்து கண்ணை மூடி எமது சுவாசத்தை நினைந்து ஆரம்பத்தில் தியானம் செய்ய பழகுதல் வேண்டும். எமது மனம் எங்கு எல்லாமோ அலைபாயும்.

முதல் அதனை அடக்கி பழக நாம் மூச்சு காற்றை நினைந்து சுவாசத்தை நன்றாக உள்ளிழுத்து கூடிய நேரம் உள்ளே அடக்கிவைத்து பின் வெளிவிடுகிறோம். இப்போ எமது சிந்தனை மூச்சுக் காற்று உள்ளே போவதும் வருவதிலுமே மட்டும் நிலைத்து நிற்கும். இப்படி உள்ளே காற்றை இழுக்கும்போது ஓம் என்னும் மந்திரத்தை சொல்லி கொண்டு உள்ளிழுத்து மெதுவாக வெளிவிடும்போது எமது மனதிலே உள்ள பாரங்களும் வேதனைகளும் சேர்ந்து வெளியே போவது போலே நாம் ஒரு ஆறுதலை பெறுவோம்.

இப்படி ஒரு அரை மணி நேரமோ அல்லது ஒரு மணி நேரமோ நாம் தியானம் செய்து வரும்போது எமது மனது தூய்மை அடைகிறது. தீய சிந்தனைகளும் துயரங்களும் எம்மை விட்டு விலகி கொண்டு போகின்றன. அடுத்து நாம் மனதை அமைதிப்படுத்தி உடலை தளர்த்தி எமது சிந்தனையை புருவ மத்தியில் வைத்து எமக்கு பிடித்த தெய்வத்தை நினைத்து தியானம் செய்தல் அவசியமாகும்.

எனி நாம் எமது சிந்தனையை ஒருமைபடுத்தி மூலதாரத்தில் சுருண்டு கிடக்கும் குண்டலினி என்னும் இறை சக்தியை சிந்தித்த படி அதனை ஒவ்வொரு சக்கரமாக மேலேழுப்ப முயல வேண்டும். எமது தியானத்தின்போது சிந்தனை கீழிருந்து மேல்நோக்கி ஒவ்வொரு சக்கரத்திலும் ஒரு 5 நிமிடமாவது நிலைநிறுத்தி மேலே போகவேண்டும்.

மேலே போனபின் மீண்டும் கீழே இருந்து மேலே போக வேண்டும். இப்படி பயிற்சி எமது சிந்தனைக்கு கொடுத்து தியானம் செய்து வரும்போது நாம் அந்த குண்டலினி சக்தி மேலே எழுவதை உணரக் கூடியதாக இருக்கும். சுருண்டு கிடக்கும் பாம்பை சீண்டினால் எப்படி அது சர் என்று மேலே எழுமோ அதுபோலே எமது தியானத்தின் மூலம் மூலாதாரத்தில் சுருண்டு கிடக்கும் இந்த இறைசக்தியை நாம் மேல்நோக்கி எழுப்ப வேண்டும். அப்படி செய்ய நாம் முயற்சிக்க வேண்டும். இதுவே குண்டலினி தியானம் எனப்படும்.