யோகாசனம் செய்தால் ஆரோக்கிய வாழ்வை பெறலாம். நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது காலம் காலமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றாகும். இன்று நீண்ட நாட்களாக தீராமல் பெரும் பிரச்சினையாக இருந்து வரும் பல்வேறு விதமான நோய்களுக்கு தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு டாக்டர்கள் கூறும் அறிவுரையும் இதுதான்.

'யோகா பண்ணுங்க... உங்களோட பிரச்சினை படிப்படியாக தீர்ந்து விடும் என்பது தான் அது. இப்படி இன்று பெரும்பாலான டாக்டர்களின் நோய் தீர்க்கும் மருந்தாகவும் யோகா மாறியுள்ளது.
இதனால் இன்று பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே யோகா கற்றுக் கொடுக்க தொடங்கி உள்ளனர். இப்படி யோகாவை முறைப்படி கற்றுக் கொண்டு தினமும் யோகா பயிற்சியை செய்து வரும் குழந்தைகள் உடல் நல பாதிப்பில் இருந்து விடுபட்டு வருவதாகவும் பெற்றோர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில்... இன்று நம்மில் பலர் பாரம்பரிய உணவு வகைகளை மூட்டை கட்டி வைத்து விட்டு துரித உணவுகளையே ருசித்து ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். அதிலும் நகரவாசிகளின் வாழ்க்கை கிட்டதட்ட நரகமாகவே மாறிப் போய் விட்டது என்று கூறலாம்.
எந்த உடற்பயிற்சியும் இன்றி, இருக்கையில் அமர்ந்த படியே ஏ.சி. அறையில் இருந்து வேலை செய்யும் பலர் பணத்துடன், பல்வேறு நோய்களையும் சம்பாதித்தியம் செய்து வைத்துள்ளனர். இதனால் 40 வயதை தாண்டியவுடன், எல்லா நோய்களும் வந்து ஒட்டிக் கொள்கிறது. ஒரு காலத்தில் பணக்காரர்களின் நோய் என்று கூறப்பட்டு வந்த சர்க்கரை வியாதி இன்று நடுத்தர வர்க்கத்தினரையும் பாடாய் படுத்தி வருகிறது. இதனுடன் இரத்த அழுத்த நோயும் சேர்ந்து கொண்டால், வராத நோயும் வந்து எட்டிப் பார்க்கிறது. இப்படி நோய் வாய்ப்பட்டு வாடுபவர்கள் 40 வயதுக்கு பின்னர் ஒரு பக்கம் மருத்துவ சிகிச்சை, இன்னொரு பக்கம் யோகா பயிற்சி என காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
வருகிற 21ந் தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்படும் என்று அறிவித்துள்ள மத்திய அரசு நாடெங்கும் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய அரசு யோகா பயிற்சி என்ற பெயரில் மதத்தை புகுத்துகிறது என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் யோகா பயிற்சி சர்ச்சையில் சிக்கி உள்ளது.
யோகா என்பது உடலும் மனதும் சம்பந்தப்பட்ட விஷயமே என்றும் அது மதங்களை கடந்தது என்றும், மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. யோகா நிபுணர்களும் இதனையே அறிவுறுத்தி வருகிறார்கள்.
யோகா செய்வதால் என்ன பயன்? அதன் சிறப்புகள் என்ன என்பது பற்றி பார்ப்போம்.
யோகா பயிற்சியை 6 வயதில் இருந்து முறைப்படி கற்றக் கொள்ளலாம். அதே நேரத்தில் வீடுகளில் பெற்றோர் யோகா செய்வதை பார்த்து குழந்தைகள் கையை காலை ஆட்டிக் கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட முயற்சி செய்தல் அதில் தவறு இல்லை. உடலும், மனசும் சார்ந்ததுதான் யோகா. இரண்டும் ஒன்றிணைந்து செயல்படும் போது மனசும், உடலும் மேம்படுகிறது.
இதனால் இரண்டுமே ஆரோக்கியம் பெறுகின்றன. நீண்ட ஆயுள் கிடைக்கிறது என்கிறார்கள் யோககலை நிபுணர்கள். மனித உடலில் மொத்தம் 4448 வகையிலான வியாதிகள் வருவதற்கு சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும், இதில் பெரும்பாலான நோய்களை யோகாவின் மூலமாக கட்டுப்படுத்தலாம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
யோகா பயிற்சியை பொறுத்தவரை, ஆரம்பத்தில் மனசும், உடலும் அதற்கு சரியாக ஒத்துழைக்காது. ஆனால் முறைப்படி, சிரமத்தை பார்க்காமல் கற்றுக் கொண்டால், அதன்பின்னர், உடல் வலிமை பெற்று விடும். யோகாவை தினமும் செய்தால்தான் அதற்கான பலனை பெற முடியும். இன்று 40 வயதை தாண்டியவர்கள் யோகா கற்றுக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். மாதவிடாய் பிரச்சினையால் அவதிப்படும் பெண்கள், தொடர்ந்து யோகா செய்வது வந்தால் நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்றும் யோகா ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். காலையில் யோகா செய்தால் உடலில் பித்தம் குறையும் மதியம் யோகா செய்தால் கபம் நீங்கும். மாலையில் யோகா செய்தால் வாதம் கட்டுப்படும் என்கிறார்கள் யோகா பயிற்சியை நன்கு கற்றுத் தேர்ந்தவர்கள்.
எப்போதுமே நம் உடலில் பித்தம் அதிகமானால், புத்தி பேதலிக்கும் என்பார்கள். அது போன்ற ஒரு நிலை ஏற்பட்டால் கோபம் அதிகமாகும். பதட்டம் போன்றவை ஏற்படும். காலை நேரத்தில் யோகா செய்வதன் மூலம் பித்தம் கட்டுக்குள் இருக்கும் என்பது அனுபவ பூர்வமாக உணரப்பட்டுள்ளது என்கிறார்கள். மதியம் செய்யும் யோகாவால், கபம் கட்டுக்குள் இருக்கும் என்பதால் சளி பிரச்சினைகள் அண்டாது. மதியம் யோகா செய்வதால் வாத நோய்கள் விலகி ஓடிவிடும் என்றும் கூறுகிறார்கள்.
இப்படி நமது உடலை ஆரோக்கியமாக வைத்து ஆயுளை அதிகரிக்கும் யோகாவை கற்றுக் கொண்டு நீண்ட நாள்வாழ யாருக்குத் தான் ஆசை இருக்காது. இதன் காரணமாகவே இன்று சென்னை உள்ளிட்ட நகரங்களில் யோகா மையங்களும் அதிகரித்து வருகின்றன. மனித ஆயுள் என்பது 120 ஆண்டுகள் என்று கூறுகிறார்கள் யோகா நிபுணர்கள். முறைப்படி தினமும் யோகா செய்தால் நிச்சயம் வாழ்க்கையில் சதம் அடிக்கலாம். முயற்சி செய்து தான் பார்ப்போமே.....