திடீர் வேலை இழப்பைச் சமாளிப்பது எப்படி?

இன்றைக்கு வேலைவாய்ப்புகள் எப்படி அதிகமோ அப்படி, திடீரென்று வேலை இழக்கும் அபாயமும் அதிகம். அதுபோன்ற ஒரு சூழலில், பொருளாதார ரீதியாக தடுமாறாமல் இருப்பது எப்படி? இதோ சில ஆலோசனைகள்...

* எப்போதும் சொல்லப்படும் விஷயம்தான் என்றாலும், சேமிப்பே நமக்கு ஆபத்து நேரத்தில் கைகொடுக்கும். எனவே அதற்கு முக்கியத்துவம் அளித்து, வேலைக்குச் சேர்ந்தவுடனேயே சேமிப்பைத் தொடங்கிவிட வேண்டும். அப்போதுதான் நீண்ட காலத்தில் சேமிப்பு அதிகம் இருக்கும்.

* மாதச் சம்பளத்தைப் போல 3 முதல் 5 மடங்கு தொகையை எப்போதும் கையில் வைத்திருப்பது நல்லது. உதாரணத்துக்கு, மாதச் சம்பளம் ரூ. 30 ஆயிரம் எனில், ரூ. 90 ஆயிரம் முதல், ரூ. 1.50 லட்சம் வரை வைத்திருப்பது அவசியம். இந்த அளவு தொகையை சேமிப்பாக வைத்தபிறகே, பிற தேவைகளுக்காக பணத்தைச் சேமிக்க வேண்டும். அவசரத் தேவைக்காக சேமித்து வைத்திருக்கும் இந்தப் பணத்தில் 50 சதவீதத்தை தனியாக ஒரு வங்கி சேமிப்புக் கணக்கிலும், 50 சதவீதத் தொகையை ‘லிக்விட் மியூச்சுவல் பண்ட்’ திட்டங்களிலும் வைத்திருப்பது நல்லது.

* மாதமாதம்தான் சம்பளம் வருகிறதே என்று எண்ணாமல், சில முதலீடுகள் மூலம் வருமானம் கிடைக்கக்கூடிய வழிகளை மேற்கொள்வது நல்லது. பலர், தங்கத்தை சிறந்த முதலீடாகக் கருதுகிறார்கள். தங்கத்தின் விலை முன்புபோல் அதிக லாபம் தருவதாக தற்போது இல்லை. தவிர, தங்க நகையை விற்கும்போதும் சேதாரம் என்கிற வகையில் கணிசமான தொகையை இழக்க வேண்டியிருக்கும். ஆகையால், முதலீட்டின் மூலமாக அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளதா என்பதைப் பார்த்து முதலீடு செய்வது நல்லது.

* முதலீடு நல்ல விஷயம் என்றாலும், கடன் வாங்கி எந்த முதலீட்டையும் மேற்கொள்ளக் கூடாது. சிலர், தங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் கூறினார்கள் என்று பெர்சனல் லோன் பெற்று, நிலம் வாங்குவார்கள். இது முற்றிலும் தவறு. காரணம், வாங்கிய கடனுக்கான வட்டியைவிட, முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் குறைவாக இருக்கக்கூடும். கையில் பணம் இருந்தால் மட்டும் முதலீடு செய்வது நல்லது.

* பள்ளி கல்விக் கட்டணம், காப்பீட்டு பிரீமியம் ஆகியவற்றை ஆண்டின் ஆரம்பத்தில் மொத்தமாகச் செலுத்திவிடலாம். இப்படிச் செலுத்தும்போது தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது. இதற்குத் தேவைப்படும் தொகைக்கு தனியாக வங்கியில் ஆர்டி கணக்கு ஆரம்பித்து, அதன்மூலம் சேமிக்கலாம். அப்போதுதான் வேலை இழப்பின் போதும் இதுபோன்ற முக்கியமான விஷயங்களுக்கு பணமின்றி தவிக்க வேண்டியிராது.

* குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் காப்பீடு கிடைக்கும் வகையில் மருத்துவக் காப்பீட்டு பாலிசி எடுத்து வைக்க வேண்டும். அப்போதுதான் எதிர்பாராதவிதமாக ஏற்படும் மருத்துவச் செலவுகளில் இருந்து தப்பிக்க முடியும். ஏனெனில், வேலை இல்லாத நேரத்தில் மருத்துவச் செலவு ஏற்பட்டால் திகைக்க வேண்டிய நிலை ஏற்படும்.

* சம்பளத் தொகை முழுவதுக்கும் செலவுகளைத் திட்டமிடாமல், 60 சதவீதத்துக்குள் செலவுகளை வைத்துக்கொள்வது நல்லது. மீதமுள்ள தொகையை முதலீடு செய்யலாம். தேவையில்லாத ஆடம்பரச் செலவுகளை முடிந்தவரை தவிர்த்துவிட வேண்டும்.

* இன்றைய சூழலில் கடன்களைத் தவிர்ப்பது கடினம் என்றாலும், கூடுமானவரை கடன் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் வீட்டுக் கடன் போன்ற சொத்துச் சேர்க்கும் கடன்களை வாங்குவதில் தவறில்லை. இதற்கு வட்டியும் குறைவு. எளிதாக கடன் கிடைக்கிறதே என்று வாங்கிவிட்டால், பிற்பாடு வேலை இழந்து நிற்கும்போது அசலையும் வட்டியையும் தவறாமல் செலுத்துவது தலைவலியாக இருக்கும்.

* எல்லாவற்றுக்கும் மேலாக, எதற்காக நமக்கு வேலை போனது என்று அலசி ஆராய்ந்து அந்நிலை மீண்டும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வேலை இழந்த காலத்தில் கூடுதல் தகுதியை வளர்த்துக்கொள்வது, மேலும் உயர்ந்த வேலைக்குச் செல்ல உதவும்.
Similar Threads: