அங்குமா சோதனை?
Discuss here on அங்குமா சோதனை? within the General Discussions forums, part of the The Lounge forum; கேரள மாநிலம் அருகே, இந்தியப் பெருங்கடலில் ஒரு மீன்பிடிப் படகு மீது இத்தாலிய வணிகக் கப்பலின் பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்டிருப்பது மிகவும் ...
-
18th Feb 2012, 07:54 PM #1
அங்குமா சோதனை?
கேரள மாநிலம் அருகே, இந்தியப் பெருங்கடலில் ஒரு மீன்பிடிப் படகு மீது இத்தாலிய வணிகக் கப்பலின் பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்டிருப்பது மிகவும் வேதனை தரும் நிகழ்வு.இராமேஸ்வரம் கடல் பகுதியில்தான் இலங்கைக் கடற்படை சுட்டுத் தள்ளுகிறது என்றால், கேரள கடல்எல்லைப் பக்கம் போனாலும் தமிழக மீனவர் மீதுதான் துப்பாக்கி குண்டு பாயும் என்றால், இந்த துர்பாக்கியத்தை என்னவென்பது?
இந்த விவகாரத்தில், அனுமதி இல்லாமல் இந்தியக் கடல் எல்லைக்குள் வந்ததாகக் குற்றம் சாட்டப்படும் இத்தாலிய வணிகக் கப்பல் சிறைப்படுத்தப்பட்டு, கொச்சி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன் கேப்டன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றாலும், இத்தாலிய வணிகக் கப்பல் இந்தத் துப்பாக்கிச் சூட்டை ஒருவித பதற்றத்தில்தான் நடத்தியிருக்குமேயொழிய, சிங்கள ராணுவத்தைப் போல, வெறிகொண்டு நிகழ்த்தியிருக்க வாய்ப்பில்லை என்பது மட்டும் உறுதி.
இந்தியக் கடலோரக் காவல்படையின் கமாண்டர் இதுகுறித்து சொல்லும்போது, இத்தாலிய வணிகக் கப்பலில் இருந்த பாதுகாப்பு வீரர்களின் "தவறான கணிப்பு'தான் இந்த துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணம் என்று கூறியிருக்கிறார்.
தவறான கணிப்பு என்பது சோமாலிய கொள்ளையர்கள் என்பதாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அவர்கள் தங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வருவதாக பீதி கொண்டிருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. கேரளக் கடற்கரையிலிருந்து 14 கடல்மைல்கள் தொலைவில் இந்தச் சம்பவம் நடந்திருப்பதால், இந்திய எல்லையின் மிக நெருக்கத்தில் சோமாலியக் கொள்ளையர்கள் வர முடியாது என்றும், இந்த மீன்பிடிப் படகில் இருந்தவர்களைச் சோமாலியக் கொள்ளையர்கள் என்று தவறாகக் கணிக்க வாய்ப்பே இல்லை என்றும் ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது.
இந்தக் கப்பலில் இருந்தவர்கள் மீனவர்களை எவ்வாறாகக் கருதினார்கள் என்பது குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. அவர்கள் நம் மீனவர்களைச் சோமாலியர்கள் என்று நினைத்தார்களா அல்லது தாக்குதல் நடத்தவரும் தீவிரவாதிகள் என்று நினைத்தார்களா?
துப்பாக்கியில் சரமாரியாகச் சுடும் அளவுக்கு அச்சம் கொண்டது ஏன் என்பது குறித்தெல்லாம் விசாரணையில்தான் தெரியவரும். தங்கள் எச்சரிக்கையை மீறி, ஒரு மீன்பிடிப் படகு தங்களை நோக்கி முன்னேறி வருகிறது என்கின்ற நிலையில், இத்தாலியக் கப்பலில் இருந்த பாதுகாப்பு வீரர்கள் இச்செயலில் இறங்கியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.நடுக்கடலில் வணிகக் கப்பல்களின் எதிரே போய், அவற்றை திசைமாறிச் செல்லும்படி கட்டாயப்படுத்தும் செயல்களில் மீன்பிடிப் படகுகள் ஈடுபடுவதுண்டு என்றும் இந்திய அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
துனா மீன்களுக்கு மிகப்பெரிய வலை விரித்திருக்கும் மீனவர்கள், வர்த்தகக் கப்பல்கள் அந்த வழியில் வரும்போது, அவற்றால் தங்கள் வலைகள் சேதமடையும் என்று பயந்து, மீன்பிடிப் படகுகளைக் குறுக்கே கொண்டுபோய் நிறுத்தி அந்தப் பெரிய கப்பல்களை விலகிப் போகச் செய்வார்கள். இத்தகைய முயற்சியாக இத்தாலிய வணிகக் கப்பலை நோக்கி, இந்த மீன்பிடிப் படகு சென்றிருக்கவும் வாய்ப்பு உள்ளது. இந்திய மீனவர்களின் நடைமுறை யை அறியாத இத்தாலிய வணிகக் கப்பலின் பாதுகாப்பு வீரர்கள் தவறாகக் கணித்திருக்கக் கூடும்.
மீனவர்கள் ஒரு கடற்படையின் கப்பலுக்கு முன்னால் கட்டளைக்கு கட்டுப்பட்டு நிற்பதற்குக் காரணம் அவர்கள் சுட்டுவிடுவார்கள் என்கிற பயம்தான். வணிகக் கப்பல்களில் பாதுகாப்புப் படையினரைப் பார்த்திராத மீனவர்கள், வழக்கம்போல துணிச்சலுடன் குறுக்கே சென்று, திசைமாறிச் செல்ல வற்புறுத்துவது மிக இயல்பானது. அண்மைக்காலங்களில் சோமாலியக் கடற்கொள்ளையர்களின் தாக்குதல் அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டுமே 37 கப்பல்கள் சோமாலியக் கடற்கொள்ளையர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
10 கப்பல்கள் பிடிக்கப்பட்டு அவற்றின் ஊழியர்கள் 159 பேர் பிணைநபர்களாக முன்னிறுத்தப்பட்டுள்ளனர். இத்தகைய போக்கு நிலவுவதால், வணிகக் கப்பல்கள் அனைத்திலும் பாதுகாப்பு கருதி, துப்பாக்கி ஏந்திய காவலர்களை நியமித்துக்கொள்ளவும், சந்தேகப்படும் நபர்கள் மீது தாக்குதல் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்தில் சோமாலியக் கொள்ளையர்கள் நடத்திய தாக்குதல்கள், இந்தியக் கடல் எல்லையில் தீவிரவாதிகள் எளிதில் ஊடுருவும் நிலைமை, நடுக்கடலில் வலை விரித்து வணிகக் கப்பலை திசைமாறிச்செல்லச் செய்யும் மீனவர்களின் போக்கு ஆகிய எல்லாவற்றையும் பார்க்கும்போது, இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அறியாமையாலும், பதற்றத்தாலும் நிகழ்ந்திருக்க முடியுமே தவிர, மீனவர்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல் என்று சொல்லிவிட முடியாது. வணிகக் கப்பல்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தற்காப்பு கருதி துப்பாக்கிச்சூடு நடத்தும் அனுமதி குறித்து மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதா என்றால், அதுதான் இல்லை.
மீனவர்களுக்கு எந்தவிதமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், உரிய தொலைத்தொடர்புக் கருவிகள் வழங்கி, பாதுகாப்பு அளிப்பதிலும் இந்திய அரசு இன்னமும்கூட மெத்தனமாக உள்ளது என்பதற்கு இந்தச் சம்பவம் இன்னொரு எடுத்துக்காட்டு.
இறந்தவர் குடும்பங்களுக்கு கேரள அரசும் தமிழக அரசும் உடனடியாக தலா ரூ.5 லட்சம் கருணைத்தொகை அறிவித்திருப்பது ஆறுதலான விஷயம் என்றாலும், மீனவர்களின் பாதுகாப்பான தொழிலுக்கு உகந்த இடமாக கடல் மாறப்போவது எப்போது?தவறு இத்தாலிய வணிகக் கப்பலின் மீது மட்டுமல்ல, நமது அரசிடமும்தான். இந்திய மீனவர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதும் அவர்களுக்கு முறையான எச்சரிக்கை அளிப்பதும் அரசின் கடமை என்று எப்போதுதான் உணரப்போகிறோமோ தெரியவில்லை.
-dinamaniwith
Regards
Guna (குணா)
வாழு... வாழ விடு..
Similar Threads
-
அன்பா இருங்க, மன அழுத்தம் போகும்!
By sumathisrini in forum TeenagersReplies: 2Last Post: 1st Feb 2012, 09:41 PM -
உங்கள் அந்தரங்கத்தை ஜாலியாக செல்போனில் &
By anitha.sankar in forum Interesting FactsReplies: 0Last Post: 25th Jan 2012, 10:21 AM -
சுனாமி தாக்குதலை அறியும் ஒரு முன்னோடித்
By sudhar in forum Inventions and DiscoveriesReplies: 0Last Post: 23rd Nov 2011, 01:09 PM -
அழகான உதடுகளுக்கு இயற்கை முறை ஆலோசனை
By nayakivel in forum Face CareReplies: 2Last Post: 19th Nov 2011, 02:44 PM -
அஜினோமோட்டோ உபயோகிறீங்களா இதை முதலில் ப&
By revamanian in forum General Health ProblemsReplies: 1Last Post: 26th Jul 2011, 11:07 PM


LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks