பகல் என்ற ஒன்று இருப்பதனால், இரவு என்ற ஒன்று இருக்கிறது. அதைப்போல் விழித்தல் என்ற ஒன்று இருப்பதனால், உறங்குதல் என்ற ஒன்று இருக்கிறது. உறங்குதல், அதாவது தூக்கம் இது இயற்கையானது, இனிமையானது. மனிதன் மற்றும் பல விலங்குகளுக்கு தூக்கம் என்பது கண்டிப்பான வாழ்நாள் முழுவதும் தேவையான ஒரு செயல் ஆகும்.

அதிக நேரம் தூங்குபவனை, கும்பகர்ணன் போல் தூங்குகிறான் என்றும் தூங்காமலிருப்பவனை ஆந்தை மாதிரி விழித்திருக்கிறான் என்றும் ஒப்பிட்டுச் சொல்லுவதுண்டு. பெரும்பாலும் இரவு நேரம் என்பதே தூக்கத்துக்காக ஒதுக்கப்பட்டது தான். ஆனால் இப்பொழுதெல்லாம் இரவு நேரப் பணிகளைப் பார்த்து விட்டு பகலில் தூங்குகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

இவ்வளவு நேரம்தான் தூங்க வேண்டும் என்று ஒரு அளவு கோல் இருந்தாலும், தூக்கம் அவரவரின் பழக்கத்தைப் பொறுத்தே அமைகிறது. இரவில் மிக சீக்கிரமாகப்படுத்து, காலையில் லேட்டாக எழுந்திருப்பவர்கள் உண்டு. இரவு எவ்வளவு லேட்டாகப் படுத்தாலும் காலையில் கரெக்டாக மிக சீக்கிரமாக அதிகாலையிலேயே எழுந்து விடுபவர்களும் உண்டு.

நெல்லை மாவட்டத்திலுள்ள எனது சொந்த ஊரில் நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கின்ற காலத்தில் இரவு ஏழு மணி ஆனாலே, எல்லோரும் சாப்பிட்டு விட்டு படுத்து விடுவார்கள். எட்டு மணிக்கு ஊரே அமைதியாக இருக்கும். ஆள் நடமாட்டமே இருக்காது. ஏனென்றால் அவர்கள் விழித்திருப்பதற்கு எந்த வேலையும் கிடையாது. அதனால் நிம்மதியாக சீக்கிரமே தூங்கப் போய்விடுவார்கள்.

ஆனால் இப்பொழுது ரேடியோ, டி.வி., சினிமா, பீச், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், இரவு நேர கேளிக்கைகள் என்று தூக்கத்தைக் கெடுக்க பல விஷயங்கள் இருக்கின்றன. அதனால் நகரங்களில் மட்டுமல்ல, கிராமங்களில்கூட இப்பொழுதெல்லாம் லேட்டாகத்தான் தூங்குகிறார்கள். சரியான, போதுமான நேரம் தூங்காத ஒருவரை அவரது கண்களைப் பார்த்தே கண்டுபிடித்துவிடலாம்.

சரியாக தூங்காதவர்களை கண்ணில் இன்னும் கொஞ்சம் தூக்கம் மீதி இருக்கிறதே என்று நாம் கேட்பதுண்டு. மனிதனின் மனதைக் கட்டுப்படுத்த, கெட்ட எண்ணங்களை சீர்படுத்த, கோபம், ஆத்திரத்தைக் குறைக்க இயற்கையாக படைக்கப்பட்ட ஒரு செயல் தூக்கம். அவன் எனக்கு துரோகம் பண்ணிவிட்டானே, அவனை சும்மாவிடக் கூடாது.

நாளைக்கு காலையில போய் அவனை என்ன பண்ணப்போறேன் பாரு... என்று கோபமாக ஆவேசமாகக் கத்திவிட்டு போய்ப் படுத்து தூங்கினால், மறுநாள் காலையில் எழுந்திருக்கும்போது அந்தக் கோபம், அந்த ஆத்திரம், அந்த ஆவேசம் எல்லாம் போன இடம் தெரியாது. பாதி மறந்து விடும். மீதி மறைந்து விடும்.

தூக்கத்துக்கு அந்த அளவுக்கு மிகப்பெரிய சக்தி உண்டு. மருத்துவ ரீதியாக தூக்கத்திற்கு விளக்கம் சொல்ல வேண்டுமென்றால், "கொஞ்சமாகவோ அல்லது அதிகமாகவோ தற்காலிகமாகவோ நினைவு இழந்து, உடலின் வெளிப்புறத்திலுள்ள உணரும் தன்மை தற்காலிகமாக தடை பண்ணப்பட்டு, நமது கட்டுப்பாட்டிலுள்ள உடல் தசைகள் (Voluntary Muscles) தற்காலிகமாக செயலிழக்கப்பட்டு, எந்தவித தூண்டுதலுக்கும், எந்தவித ரியாக்ஷனும் காட்டப்படாத பாதி மெய்மறந்த ஒரு நிலை.

இதுவே தூக்கம் ஆகும். இதனால்தான் தூக்கம், `பாதி மரணத்திற்குச் சமம்' என்று சொல்வதுண்டு. பட்டு மெத்தையில் புரண்டு புரண்டு படுத்து தூக்கம் வராதவர்களும் இருக்கிறார்கள். பாய் கூட இல்லாமல் நிம்மதியாக படுத்தவுடனே நன்றாக தூங்குகிறவர்களும் இருக்கிறார்கள். இது அவரவர் உடல், மனம், தேக ஆரோக்கியம், சுற்றுப்புறம், அன்றாடம் பார்க்கும் வேலை ஆகியவற்றைப் பொறுத்தே அமையும்.

நமது உடலில் இரண்டு வகையான தசைகள் இருக்கின்றன. நமது கட்டுப்பாட்டில் உள்ள தசைகள், கை கால்கள், தோள்பட்டை, மார்பு, முதுகு முதலியவற்றிலுள்ள கடினமான தசைகள், நமது கட்டுப்பாட்டிலுள்ள தசைகளாகும். இந்த தசைகளெல்லாம் நாம் நடப்பதற்கும், நகர்வதற்கும், உருண்டு புரள்வதற்கும் உபயோகப்படும் தசைகளாகும்.

ஆண்களின் உடலில் சுமார் 42 சதவீதமும், பெண்களின் உடலில் சுமார் 36 சதவீதமும், கட்டுப்பாட்டில் உள்ள தசைகள் இருக்கின்றன. தூக்கத்தின்போது கட்டுப்பாட்டிலுள்ள தசைகள் பெரும்பாலும் தற்காலிகமாக செயலிழந்து விடுகின்றன. மரக்கட்டை மாதிரி தூங்குகிறானே, என்று சிலரைச் சொல்லுவோமே, அதற்குக் காரணம் தூங்கும்போது ஆடாமல், அசையாமல் கிடக்கும் இந்தக் கட்டுப்பாட்டிலுள்ள தசைகள் தான்.

நமது கட்டுப்பாட்டில் இல்லாத தசைகள் (inVoluntary Muscles) இரைப்பை, இருதயம், உணவுக்குழாய், காற்றுக்குழாய், வயிற்றின் உள்ளே உள்ள உறுப்புகள், சிறுநீர்ப்பை, ரத்தக்குழாய்கள் மற்றும் உடலின் உறுப்புகளுக்கு உள்ளே உள்ள மெல்லிய தசைகள், இவை எல்லாமே நமது கட்டுப்பாட்டில் இல்லாத தசைகளாகும்.

உதாரணத்திற்கு இருதயத்தின் தசைகள் நமது கட்டுப்பாட்டில் இருந்தால் உயிர் என்னவாகும் என்று நினைத்துப் பாருங்கள். அதனால்தான் கட்டுப்பாட்டிலுள்ள தசைகள் மட்டுமே தூங்கும்போது செயலிழக்கப்படுகிறது. கட்டுப்பாட்டில் இல்லாத தசைகள் நாம் தூங்கினாலும் தூங்காவிட்டாலும் நம்மை கண்டு கொள்ளாது. பாலூட்டி, விலங்குகள், பறவைகள், தவளை, மீன் போன்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் தூக்கம் உண்டு.

இதைப் படித்ததும் மீன் எப்படி தூங்கும் என்று உங்களுக்கு ஒரு சின்ன சந்தேகம் வரும். ஆமாம். மீன்களும் தூங்கத்தான் செய்கின்றன. ஆனால் மனிதர்களைப்போல மீன்கள், கண்களை மூடிக்கொண்டு தூங்குவதில்லை. கண்களை திறந்து வைத்துக் கொண்டேதான் தூங்கும். இன்னும் சொல்லப்போனால் `ஷார்க்` என்று சொல்லக்கூடிய சுறாமீன் தூங்கிக்கொண்டே நீந்தும்.

சில நேரங்களில் மீன்கள் தொட்டிக்கு அடியிலே வந்து ஏதாவதொரு சந்து பொந்துகளில் நுழைந்து கொண்டு அங்கே இங்கே நகராமல் ஒரே இடத்தில் செதில்களை மட்டும் ஆட்டிக் கொண்டு நிற்கும். இப்படி இருக்கிறது என்றால் அந்த மீன் தூங்குகிறது என்று அர்த்தம். இதை உங்கள் வீட்டிலுள்ள மீன் தொட்டியிலேயே நீங்கள் கண்டுபிடிக்கலாம்.

வெப்பப் பிரதேசத்தில் வாழும் விலங்குகளைவிட குளிர் பிரதேசத்தில் வாழும் விலங்குகளுக்கு தூக்கம் அதிகமாக இருக்கும். பனி உறைந்து கல் போல் கிடக்கும் குளிர்ப் பிரதேசங்களில் வாழும் கரடிகளை நீங்கள் டி.வி.யில் அனிமல் பிளானெட் நிகழ்ச்சியில் பார்க்கலாம். குளிர் பிரதேச விலங்குகள் எந்தவித அசைவும் இல்லாமல் உடலின் வெப்பநிலை குறைவாகி சுவாசமும் குறைவாகி இடி இடித்தால் கூட கேட்காத மாதிரி, செத்துப்போன மாதிரிதான் தூங்கும்.

இந்த நிலை `ஹைபர்னேஷன்' என்று சொல்வதுண்டு. தூக்கத்தைப் பற்றிய பலவித ஆராய்ச்சிகள், பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமாக இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. 1937-ம் ஆண்டில் முதன் முதலாக ஆல்பிரெட் லூமிஸ் என்பவர் தனது உதவியாளர்களுடன் சேர்ந்து தூக்கத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்தார்.

இதயத்தின் இயக்கத்தைக் கண்டுபிடிக்க எப்படி இ.சி.ஜி என்ற டெஸ்ட் எடுக்கப்படுகிறதோ, அதேபோல மூளை எப்படி இயங்குகிறது, தூக்கத்தின்போது மூளை எப்படி செயல்படுகிறது என்பதை கண்டுபிடிக்க இ.இ.ஜி. டெஸ்ட் இருக்கிறது. விழித்திருப்பதில் இருந்து ஆழ்ந்த தூக்கம் வரை உள்ள நேரத்தில் மூளையின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை இ.இ.ஜி. மூலம் கண்டுபிடித்து அதை ஏ,பி,சி,டி,இ என்று ஐந்து பகுதிகளாகப் பிரித்து தூக்கத்தின் பல்வேறு நிலைகளைப் பற்றி விபரமாக ஆல்பிரெட் லூமிஸ் உலகுக்குச் சொன்னார்.

Similar Threads: