''நேரடியாக சூரியனைப் பார்க்கக் கூடாது என்பதற்கு முக்கிய காரணமே, அதில் ஆபத்தை விளைவிக்கக் கூடிய புறஊதாக் கதிர்கள் உள்ளன என்பதுதான்.

புறஊதாக் கதிர்களின் அலைநீளத்தை அடிப்படையாக வைத்து, அதனை ஏ, பி, சி என்று மூன்று வகைகளாகப் பிரித்திருக்கிறார்கள்.

காலை மற்றும் மாலை நேர சூரிய ஒளியில் நன்மை பயக்கும் புறஊதாக் கதிர்கள் அதிகம் இருக்கும். ஆனால், மதிய நேரத்தில் செங்குத்தாக விழும் சூரிய ஒளியில் கேடு விளைவிக்கக் கூடிய கதிர்கள் அதிகம் இருக்கும். அதனால்தான் மதிய நேரத்தில் சூரியனைப் பார்க்கக் கூடாது என்று சொல்கிறார்கள்.

அப்படிப் பார்க்கும்போது சீக்கிரத்திலேயே கண் புரை தோன்றும் ஆபத்து உள்ளது. மேலும் விழித் திரை மற்றும் கருவிழி ஆகியவையும் பாதிக்கப்படும்.

பொதுவாகக் காலை நேரத்தில் 15 நிமிடம் முதல் 30 நிமிடம்வரை சூரிய நமஸ்காரம் செய்யும்போது கண்களை அகலத் திறந்துகொண்டு சூரியனையே உற்று நோக்குவதில்லை. எனவே, சூரிய நமஸ்காரத்தால் கண்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது.

வீண் பயத்தால் சூரிய நமஸ்காரம் செய்யும் நல்ல பழக்கத்தைக் கைவிட்டுவிடாதீர்கள்.

ஏனென்றால் முன்பெல்லாம் பலருக்கும் வைட்டமின் ஏ குறைபாடுதான் இருக்கும். ஆனால், இப்போது வைட்டமின் டி குறைபாடுதான் அதிகம் இருக்கிறது.

இந்தக் குறைபாடு இருந்தால், கால்சியம் சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டாலும் அதனை நம் உடல் சரியாக கிரகித்துக் கொள்ளாமல், எலும்பு முறிவு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது. குறிப்பாக வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

சூரிய ஒளியில் கிடைப்பதுபோல வைட்டமின் டி வேறு எந்த உணவிலும் கிடைப்பதில்லை. சூரியன் உதித்த நேரத்தில் இருந்து சுமார் ஒரு மணி நேரத்துக்குள் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.

மதிய நேரத்தில் கூடுமானவரை சூரிய ஒளி நேரடியாகக் கண்களில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

உச்சி வெயிலில் வேலை பார்ப்பவர்கள், தொப்பி, தலைப்பாகை, கூலிங்கிளாஸ் என்று தங்கள் தொழிலுக்கு எது பொருந்துமோ அதனை அணிவது நல்லது.''

Similar Threads: