சிறுநீரகத்தில் சிக்கல் வராமல் தடுப்பது எப்படி?

மனிதனின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உடலில் இருந்து பெரும்பான்மையான கழிவுகளை வெளியேற்றும் வேலையை சிறுநீரகங்கள் செய்கின்றன. ஏதாவது காரணத்தால் சிறுநீரகங்களின் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டு வேலையை செய்ய முடியாமல் பழுதாகி போனால், உடல் கழிவு நீர் தேங்கிய குட்டை போல் மாறிவிடும். அடுக்கடுக்கான நோய்கள் நம்மைத் தாக்க துவங்கும். இதனால் சிறுநீரகங்கள் பழுதுபடாமல் பாதுகாப்பது மிகவும் முக்கியம் என்கிறார் டாக்டர் சசிக்குமார். அவர் கூறியதாவது:

சிறுநீரகம் பழுதடைந்து விட்டால் வெளியேற்றப்படாத கழிவு நீர் உடலின் கால், முகம், கை மட்டுமில்லாமல் உள் உறுப்புகளான நுரையீரல், இதயம் போன்றவற்றை சுற்றியுள்ள சவ்வுகளிலும் தேங்கத் துவங்கும். இதனால் மூச்சுவிடுவதில் சிரமம், நடக்க முடியாத நிலை, அமைதியின்மை போன்ற பிரச்னைகள் வரும். அடுத்து மூளையில் பாதிப்பு, ரத்தத்தில் அதிக உப்பு சேர்வதால் யுரீமிக் கோமா என்ற நினைவிழக்கும் நிலை ஆகியவை ஏற்படும். சிறுநீரகம் பழுதுபட துவங்கியதும் கை, கால் வீக்கம், கட்டுப்படாத உயர் ரத்தஅழுத்தம், மூச்சுவாங்குதல், தலைவலி, உடல் சோர்வுடன் குளிர் காய்ச்சல், சிலருக்கு வாந்தி மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும்.

இது போன்ற பிரச்னை உள்ளவர்கள் உடனடியாக ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். சர்க்கரை நோயாளிகளில் முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு இந்த பாதிப்பு வரும் வாய்ப்பு அதிகம். உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ள நோயாளிகள், வலி நிவாரணி மாத்திரையை அடிக்கடி பயன்படுத்துபவர்கள், கெமிக்கல் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், மருத்துவரின் ஆலோசனை இன்றி மருந்து எடுத்துக் கொள்பவர்கள், குறைவாக தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், அடிக்கடி உண்ணாவிரதம் இருப்பவர்களை சிறுநீரகப் பிரச்னை வெகு எளிதில் தாக்குகிறது.

இதற்கு எந்த சிகிச்சையும் மேற்கொள்ளாத பட்சத்தில் ரத்தத்தில் உப்பின் அளவு அதிகரிக்கும். ரத்தத்தில் உப்பின் அளவு 7 மில்லி கிராமைவிட அதிகரிக்கும்போது அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுகிறது. சிறுநீரகம் செயல் இழந்து விட்டால் ரத்தம் சுத்திகரிக்கப்படாமல் அசுத்தமாக இருக்கும். தேவையற்ற நீரின் அளவு ரத்தத்தில் அதிகரிக்கும். இந்நிலையில் ரத்தத்தை செயற்கை முறையில் சுத்திகரிக்கும் டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுகிறது. ஒருமுறை டயாலிசிஸ் செய்தால் 2 நாட்கள் மட்டுமே சுத்தமான ரத்தம் நீடிக்கும்.

இதனால் வாரத்தில் இரண்டு நாட்கள் டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இதற்கு மாற்று வழியே கிடையாது என்பது மறுக்க முடியாத உண்மை. இதனால் சிறுநீரகம் கெட்ட பின் மருத்துவம் செய்வதைவிட கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம். ஆரம்ப நிலையில் கண்டறிந்து மருத்துவம் செய்தால் பிரச்னையின் தீவிரத்தைக் குறைக்கலாம்.

பாதுகாப்பு முறை

சிறுநீரக செயல் இழப்பு வராமல் தடுக்க அதிக தண்ணீர் குடிப்பது அவசியம். வெளியில் சென்றுவிட்டு வரும் போதும், உடற்பயிற்சி முடித்த பின்னரும் தேவையான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். தண்ணீர் குடிப்பதை தள்ளிப்போடுவது தவறானது. தேவையற்ற தாதுக்களை உடலில் சேர்க்கும் துரித உணவுகளை தவிர்ப்பது மிகவும் அவசியம். சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் தண்ணீர் குடிக்கும் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். 1 லிட்டருக்கும் குறைவான நீர் ஆகாரங்கள் எடுத்துக் கொள்வது முக்கியம்.

காய்கறிகளை வேகவைத்து தண்ணீரை வடிகட்டிய பின்னர் மிளகுத்தூள், மிளகாய்த்தூள், மிகச்சிறிய அளவில் உப்பு சேர்த்து சாப்பிடலாம்.
உப்பையே மறந்து விட்டாலும் நல்லதுதான். அதிகபட்சம் ஒரு நாளைக்கு ஒன்றரை கிராம் உப்பு மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். மட்டன், சிக்கன், முட்டை போன்ற அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. இதில் சேர்க்கப்படும் மசாலா சிறுநீரகப் பழுது உள்ளவர்களுக்கு எதிரி.

இதே போல் கெமிக்கல் கலந்த பாக்கெட் உணவு வகைகளையும் தவிர்த்து விட வேண்டும். பருப்பு வகைகள் குறைவாக சேர்த்துக் கொள்ளவும். சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் சிறுநீரகம் பழுதடைவதை தள்ளிப் போடலாம். எளிய உடற்பயிற்சி, நடைப்பயிற்சி அவசியம்.

ரெசிபி

பாகற்காய் மஞ்சூரி: பாகற்காய் கால் கிலோ, மைதா மற்றும் கான்பிளவர் மாவு 50 கிராம், மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், எலுமிச்சை சாறு 1/2 டீஸ்பூன், வெங்காயம் 1, தக்காளி 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போன்றவை தேவை. பாகற்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மைதா, கான்பிளவர் மாவு, மிளகாய்த்தூள், லெமன் சாறு ஆகியவற்றை பாகற்காயில் போட்டுப் பிரட்டி கால் மணி நேரம் ஊற விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு பாகற்காய் கலவையை வறுத்துக் கொள்ளவும். பின்னர் இஞ்சி, பூண்டு பேஸ்ட், நறுக்கிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றை தனியாக வதக்கி அதோடு வறுத்த பாகற்காய் சேர்த்து கெட்டியாக கிளறவும். இப்போது பாகற்காய் மஞ்சூரி ரெடி.

கத்தரிக்காய் உப்புமா: கத்தரிக்காய் கால் கிலோ, தேங்காய் துருவல் ஒரு டீஸ்பூன், வெள்ளை ரவை ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். சீரகம், மிளகு, துவரம்பருப்பு ஆகியவை ஒவ்வொரு டீஸ்பூன் எடுத்து வறுத்து அரைத்து கொள்ளவும். குக்கரில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, கருவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பின், தேங்காய்த் துருவல், துண்டாக்கிய கத்தரிக்காய், வறுத்து பொடி செய்ததை சேர்த்து வதக்கவும். இத்துடன் ரவைக்கு தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்க்கவும். கத்தரிக்காய் பாதி வெந்த பின்னர் ரவை சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்த பின் இறக்கவும்.

பிரட் வெஜ் ஆம்லெட்: உப்பு இல்லாத ரொட்டித் துண்டுகள் & 6, கடலை மாவு ஒரு கப், பெரிய வெங்காயம், குடைமிளகாய், கேரட் ஆகியவற்றை பொடியாக நறுக்கி இரண்டு கப் அளவு எடுத்துக் கொள்ளவும். கடலை மாவை பஜ்ஜி மாவுப் பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். ரொட்டித் துண்டுகளை கடலை மாவில் நனைத்து இரண்டு புறமும் காய்கறி துண்டுகளை தூவவும். முட்டையில் வெள்ளைக் கருவை மட்டும் தனியாக அடித்து வைத்துக் கொண்டு, காய்கறியின் மேல் வெள்ளைக் கருவை தடவி தோசைக் கல்லில் ஆம்லெட் போல வேக வைத்து எடுக்கவும்.

பாட்டி வைத்தியம்

இசங்கு இலையுடன் சீரகம் சேர்த்து அரைத்து ஐந்து கிராம் அளவுக்கு காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 21 நாட்களுக்கு சாப்பிட்டால் ரத்தம் சுத்தம் ஆகும்.

உளுந்தை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊற வைக்கவும். அந்தத் தண்ணீரை மறுநாள் காலையில் குடித்தால் சிறுநீரகம் தொடர்பான நோய்களில் இருந்து விடுபடலாம்.

எலுமிச்சன் துளசி, பெருஞ்சீரகம் இரண்டையும் சம அளவில் சேர்த்து பொடி செய்து சாப்பிட்டால் சிறுநீரக கல் கரையும்.

கடுக்காய், அதிமதுரம், வெள்ளரி விதை மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக நோய்கள் குணமாகும்.

கருவேப்பிலையை பொடி செய்து தினமும் சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படும். சிறுநீரகம் பழுதடைவதும் தடுக்கப்படும்.

காசினி கீரையை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் சிறுநீரக கல் கரையும்.

கீழாநெல்லி இலைச்சாற்றுடன் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் சிறுநீரக பாதிப்பு சரியாகும்.

சாணாக்கி கீரையை கஷாயம் வைத்துக் குடித்தால் சிறுநீரக கோளாறுகள் குணமாகும்.

சோம்பு, பார்லி, மஞ்சள் மூன்றையும் ஒன்றாக சேர்த்து கஷாயம் காய்ச்சி குடித்தால் நல்லது.

டர்னிப் கீரையுடன் சீரகம், சோம்பு, சதகுப்பைக் கீரை, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயமாக்கி குடித்தால் சிறுநீரக நோய்த்தொற்று குணமாகும்.

டயட்

கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கே சிறுநீரகப் பழுது ஏற்படுகிறது. தவறான உணவு முறையும் இதற்கு ஒரு காரணம். சிறுநீரகத்தில் கல் மற்றும் சிறுநீரக தொற்று உள்ளவர்களுக்கும் சிறுநீரகம் செயல் இழக்கும் பிரச்னை எளிதில் தாக்கும். சரிவிகித உணவு முறையை மேற்கொண்டாலே போதும். சிறுநீரக பழுதை தடுக்கலாம். உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியமானது. சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் புரதம் அதிகம் உள்ள பருப்பு, பயறு வகைகள், முழு தானியங்களான கோதுமை, ராகி, கம்பு, சோளம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

தண்ணீர் கூட அதிகளவில் குடிக்கக் கூடாது. பழங்கள், கீரைகள் தவிர்க்கலாம். அரிசி உணவுகள், வெள்ளை ரவை மற்றும் சேமியா போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். பூமிக்குள் விளையும் கிழங்கு வகைகளை சாப்பிடக் கூடாது. முருங்கைக் காய், நீர்க்காய்களான புடலங்காய், பீர்க்கன், சுரைக்காய் போன்றவையும் வேண்டாம். பொட்டாசியம் அதிகம் உள்ள வாழைப்பழம், மாம்பழம், மாதுளை, இளநீர் ஆகியவற்றையும் தவிர்ப்பது முக்கியம்.

அசைவம் சாப்பிட விரும்புபவர்கள் கோழிக்கறி மட்டும் வாரத்துக்கு 50 கிராம் எடுத்துக் கொள்ளலாம். முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் வாரத்துக்கு 3 முறை சாப்பிடலாம். உப்பு குறைவாக சேர்த்துக் கொள்வது முக்கியம். பழங்களில் ஆப்பிள், பப்பாளி சாப்பிடலாம். கருப்பு திராட்சை 50 கிராம் மட்டும் சாப்பிடலாம் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

Similar Threads: