சாம்பல் ருசிக்குதா? கால்சியம் உஷார்!

இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் சி குறைபாடு காரணமாக பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகள் ஏராளம். இந்த சத்து குறைபாட்டினால் சிமென்ட், சாம்பல், பல்பம், மண், புளி, பாக்கு, அரிசி போன்றவற்றை சாப்பிடுவது தூண்டப்படுகிறது. சத்துகளை நிவர்த்தி செய்யும் வரை இந்த பழக்கத்தை கைவிட முடியாது. பொருத்தமான உணவுகளை சாப்பிட்டால், இப்படி ஒவ்வாத பொருட்களை சாப்பிடும் பழக்கத்தை விட்டொழிக்கலாம். மாறாக இதனை கண்டுகொள்ளாமல் விட்டால், சிறுநீரகம், எலும்பை பாதித்து பெரிய பிரச்னைகளுக்கு வழிவகுத்து விடும் என்கிறார் ஹோமியோ மருத்துவ நிபுணர் சசிக்குமார். அவர் கூறியதாவது:

சத்துக் குறைபாடு பிரச்னை வெப்ப நாடுகளில் அதிகளவில் காணப்படுகிறது. அதுவும் குளிர் காலத்தைவிட வெயில் காலங்களில் தான் அதிகமாக இருக்கும். பெண்களுக்கு கால்சியம் குறைபாட்டின் காரணமாக சாம்பல், சிமென்ட் உள்ளிட்ட பொருட்களை சாப்பிட பிடிக்கிறது. பொதுவாக கர்ப்பகாலத்தில் குழந்தை வயிற்றில் வளரும் போது ஏற்படும் கால்சியம் சத்துக் குறைபாட்டினால் இது போன்ற பழக்கம் சிலருக்கு ஏற்படும். ஆனால் குழந்தை பிறந்த பிறகு இந்த நிலை மாறிவிடும்.

தைராய்டு பிரச்னை உள்ள பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் சத்துக் குறைபாடு காரணமாகவும் இந்தப் பழக்கம் ஏற்படலாம். வயிற்றில் பூச்சி தொல்லை உள்ள குழந்தைகளும் ஒவ்வாத பொருட்களை விரும்பி சாப்பிடும். பழங்கள் சாப்பிடாதவர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். கண்டு கொள்ளாமல் விடும்போது உடலில் பல பெரிய பாதிப்புகளையும் ஏற்படுத்தும். சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு உடல் சோர்வு மற்றும் மனச்சோர்வு இருக்கும். கண்ணுக்கு கீழே கருவளையம் தோன்றும். எப்போதும் டல்லாக இருப்பார்கள். தூங்கிக் கொண்டே இருக்கலாமே என்ற எண்ணம் ஏற்படும். ரத்த அழுத்தக் குறைபாடு ஏற்பட்டு அடிக்கடி மயக்கம் வரவும் வாய்ப்புள்ளது.

சத்து குறைபாட்டின் காரணமாக, சிறுநீரகம் சரிவர செயல்பட இயலாமல் போகலாம். இதனால் சிறுநீர் வெளியேறுவதில் பிரச்னை உண்டாகும். கை, கால்களில் வீக்கம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. உணவிலும் கவனம் செலுத்தாமல், மருத்துவ சிகிச்சையும் எடுக்காமல் இருந்தால் எலும்புகள் உறுதி இழந்து போகும் ஆபத்து உள்ளது. இதனால் எங்காவது லேசாக இடித்துக் கொண்டால்கூட எலும்புகள் உடையும். இதற்கு கால்சியம் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். மருத்துவரின் ஆலோசனை இன்றி கால்சியம் மாத்திரைகள் சாப்பிடுவதும் தவறு. ஏனெனில் அவற்றால் சிறுநீரகத்தில் கல் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. சாம்பல், சிமென்ட், செங்கல் என எதையாவது சாப்பிடப் பிடித்தால் உடனே உஷாராகி மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.

ரெசிபி

பருப்பு கொழுக்கட்டை: கொள்ளு, கொண்டைக் கடலை, சோயா, மொச்சை, கருப்பு உளுந்து, பச்சைப் பட்டாணி அனைத்தையும் சேர்த்து ஒரு கப் எணீடுத்துக் கொள்ளவும். பருப்பு வகைகளை நன்றாக ஊற வைக்கவும். ஊறிய பின்னர் தண்ணீரை வடித்து விட்டு அத்துடன் சிவப்பு மிளகாய் 5, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை, வெங்காயம் தாளிக்கவும். இத்துடன் பெருங்காயத் தூள் சேர்த்து அரைத்த மாவையும் சிறிது தண்ணீர் சேர்த்து கிளறிக் கொள்ளவும். பின்னர் இந்த மாவை கொழுக்கட்டையாகப் பிடித்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும். இந்தக் கொழுக்கட்டையில் புரத சத்து நிரம்பியுள்ளது. இது சோர்வினை விரட்ட உதவும்.

மிக்ஸ்டு புரூட் ஷேக்: பைனாப்பிள் ஜூஸ் 5 கப், ஆரஞ்சு ஜூஸ் 2 கப், இஞ்சி பேஸ்ட் ஒரு டேபிள் ஸ்பூன், சோடா வாட்டர் 4 டம்ளர் ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். தேவையான அளவு சர்க்கரையை கலந்து கொள்ளவும். இதில் ஆரஞ்சு சுளைகள், வெட்டப்பட்ட ஆப்பிள், பைனாப்பிள் துண்டுகளையும் சேர்க்கவும். இக்கலவையை பிரிட்ஜில் வைத்துக் கொண்டால் இரண்டு மாதங்கள் வரை பயன்படுத்தலாம். தேவைப்படும் போது இந்த புரூட் ஷேக்கில் தண்ணீர் கலந்து குடிக்கலாம். இந்த பழக்கலவை மூலம் இரும்புச் சத்து, வைட்டமின் சி சத்துகள் கிடைக்கின்றன.

ராகி அல்வா: முழு ராகி கால் கிலோ எடுத்துக் கொள்ளவும். நெய் கால் கிலோ, சர்க்கரை அரைக் கிலோ, முந்திரி 50 கிராம், ஏலக்காய் 5 ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும், ராகியை முதல்நாள் இரவே ஊற வைக்கவும். நன்கு ஊறிய ராகியை மிக்சியில் அரைத்து அதிலிருந்து இரண்டு மூன்று முறை பால் எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். மேலே சேர்ந்திருக்கும் தண்ணீரை வடிகட்டி விட்டு கீழே உள்ள கெட்டி பாலை சேகரிக்கவும். சர்க்கரையை தண்ணீரில் ஜீரா போல கரைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய், ராகிப்பால், சர்க்கரைக் கரைசல் சேர்த்து கிளறவும். அல்வா பதத்துக்கு வந்த பின்னர் ஏலக்காய், முந்திரி சேர்த்து சாப்பிடலாம். இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது.

டயட்

பெண்களுக்கு 16 வயது முதல் 35 வயது வரை சத்து குறைபாடு பிரச்னை வர வாய்ப்புள்ளது. மாதவிலக்கு மற்றும் பிரசவ காலங்களில் உடலில் இருந்து ரத்தம் வெளியேறுவதால் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படுகிறது. உடலில் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது. இதன் காரணமாக உடல் சோர்வு, மனச்சோர்வு, காய்ச்சல், சளி என உடலில் ஏதாவது ஒரு பிரச்னை எப்போதும் இருக்கும். சத்துக் குறைபாட்டின் ஒரு அறிகுறியாக சாம்பல், சிமெண்ட், ஓடு, கல், மண் என எதையாவது சாப்பிட தோன்றும்.

இந்த அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக தங்களுக்கு உள்ள சத்துக் குறைபாட்டினை அறிந்துகொண்டு அதற்கான மருந்துகள் மற்றும் உணவு முறைகளைப் பின்பற்ற வேண்டும். இரும்புச் சத்து மற்றும் புரதம் அதிகம் உள்ள உணவுகளையும் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். பசியின்மை, எடை குறைதல், வயிற்று வலி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம். எனவே இரும்புச் சத்து உள்ள உணவுகளை தினமும் சாப்பிட வேண்டியது அவசியம். பேரிச்சை, பெரிய நெல்லி, அவல், கொள்ளு, ராகி, முருங்கைக்கீரை, சுண்டைக்காய், தேன், முட்டை, ஆட்டு ஈரல், மீன் ஆகியவை சாப்பிடலாம்.

இரும்புச் சத்து உள்ள உணவு வகைகளை உண்ணும் போது அதனை உடல் உட்கிரகித்துக் கொள்ள வைட்டமின் சி உள்ள பழ வகைகள் சாப்பிட வேண்டியதும் அவசியம். எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, கருப்பு திராட்சை, நெல்லிக்காய், கேரட் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
புரதம் உள்ள உணவுப் பொருட்களும் கட்டாயம் இடம்பெற வேண்டும். இந்த உணவு முறையை கடைபிடித்தால் உடலுக்கு தேவையான இரும்புச் சத்து கிடைத்து விடும். பின்னர் பல்பம், சாம்பல், மணல் மற்றும் சிமென்ட் உள்ளிட்ட பொருட்களை சாப்பிட வேண்டும் என்ற எண்ணமே வராது என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

அரைக் கீரையை சிறு பருப்பு சேர்த்து தொடர்ந்து 21 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்த உற்பத்தி அதிகரித்து புத்துணர்ச்சி ஏற்படும்.

அரைக் கீரை சாற்றில் ஒரு கிராம் ஏலரிசியை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும்.

ஆதொண்டை இலைச்சாறில் திப்பிலியை ஊற வைத்து பிறகு காய வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். இரண்டு கிராம் பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் நன்றாக பசி எடுக்கும்.

ஆளி விதையினை தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும். சில நாட்களில் விதைகள் முளைத்து வரும் தளிரை சாப்பிட்டால் ரத்த சோகையால் இளைத்த உடல் பெருக்கும். உடல் வலிமை அடையும்.

இசங்கு இலையுடன் சீரகம் சேர்த்து அரைத்து, ஐந்து கிராம் அளவுக்கு காலையில் வெறும் வயிற்றில் 21 நாட்களுக்கு சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும்.

இசப்கோல் விதையை பொடி செய்து கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கிடைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவினால் அடிக்கடி தலைவலி, ஜலதோஷம் ஏற்படும். இதற்கு இஞ்சியை காய வைத்து பொடியாக்கி தண்ணீரில் குழைத்து நெற்றியில் தடவினால் தலைபாரம், ஜலதோஷம் குணமாகும்.

பாற்சொரிக் கீரையை துவரம்பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் ரத்த விருத்தி உண்டாகும்.

பிண்ணாக்கு கீரையுடன் பார்லி சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் கால் வீக்கம் குறையும்.

வைட்டமின் சி குறைபாட்டினால் சிறுநீர் பிரிவதில் சிரமம் உள்ளவர்கள், புதினா இலையுடன் ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து எண்ணெய் விட்டு வதக்கி உப்பு சேர்க்காமல் சாப்பிட்டால் சிறுநீர் நன்றாகப் பிரியும்.

புளியாரை கீரையுடன் வேப்பந்தளிர், மிளகு 3, மஞ்சள் தூள் 2 சிட்டிகை ஆகியவற்றை சேர்த்து அதிகாலையில் சாப்பிட்டால் ரத்தம் தூய்மையாகி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பொன்னாங்கண்ணி கீரை சாற்றில் ஐந்து கிராம் சீரகத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.

Similar Threads: