மறதி என்ற ஒன்று மட்டும் இல்லையெனில், மனித வாழ்க்கையே நரகமாகிவிடும். அவமானம், சோகம், இழப்பு, வருத்தம் போன்ற துயரங்களை, அவ்வப்போது மறந்து விடுவதால் தான், நம்மால் இயல்பாக வாழ முடிகிறது.
அதே சமயம், எல்லாவற்றையும் மறந்து விட்டாலும், வாழ்க்கை நரகமாகிவிடும். மனைவி, மக்களின் பெயரை மறக்கும் நிலை ஒருவருக்கு ஏற்பட்டால், அதைவிட கொடுமை என்ன இருக்க முடியும். அல்சைமர் எனும் ஞாபக மறதி நோய், அப்படிப்பட்ட கொடுமையான நோய் தான். சாப்பிட்ட 10 நிமிடம் கழித்து, என்ன சாப்பிட்டோம் என சொல்ல முடியாத பரிதாப நிலை ஏற்படும். மிக மோசமான ஞாபக மறதி நோயே, அல்சைமர் என அழைக்கப்படுகிறது. ஜெர்மன் விஞ்ஞானி அலோஸ் அல்சைமர் இந்த நோயை கண்டுபிடித்ததால், அவரது பெயரால் அல்சைமர் என அழைக்கப்படுகிறது.
அல்சைமர் நோய் பாதிப்பு எந்த வயதில் ஏற்படும்?
பொதுவாக, அல்சைமர் நோய் 60 வயதுக்கு மேற்பட்டவர்களையே பாதிக்கும். ஆனால், மிக அரிதாக 30 வயதிலும் வரலாம். பாரம்பரியத்தில் தாத்தா, தந்தை, சகோதரருக்கு அல்சைமர் இருந்தால், குடும்பத்திலுள்ள இளம் வயதினருக்கும் நோய் வர வாய்ப்புண்டு. ஆண்களை விட, பெண்களுக்கு இந்த நோய் வரும் வாய்ப்பு அதிகம்.இந்தியாவில் சராசரி ஆயுள் அதிகரித்து வருவதால், 60 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு உள்ள பாதிப்புகள் குறித்து, போதிய விழிப்புணர்வு இல்லை.
அல்சைமர் பாதிப்பு ஏற்பட காரணம் என்ன?
மூளையின் பக்கவாட்டு பகுதி, பாதிக்கப்படுவதால் டிமென்ஷியா எனும் ஞாபக மறதி நோய் வருகிறது. டிமென்ஷியா நோயில் அல்சைமர் ஒரு வகை. அல்சைமர் மறதி நோய் வருவதற்கு, மரபணு குறைபாடு முக்கிய காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரபணு குறைபாடு காரணமாக, மூளையின் பக்கவாட்டு பகுதியிலுள்ள, ரசாயன பொருள் சுரக்காததால், அல்சைமர் ஏற்படுகிறது. குறைந்த படிப்பு படித்தவர்கள், அதிக குண்டாக இருப்பவர்கள், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் ஆகியோருக்கு, அல்சைமர் பாதிப்பு வரும் வாய்ப்புள்ளது. உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் மற்றும் ஹார்மோன் மாத்திரை எடுத்து கொள்பவர்களுக்கு, இந்த நோய் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு.
ஞாபக மறதி நோயை, முழுமையாக குணப்படுத்தக் கூடியது, குணப்படுத்த முடியாதது என, இரண்டு வகையாக பிரிக்கலாம். வைட்டமின் பி சத்து குறைவு காரணமாக வரும் ஞாபக மறதி நோய், முழுமையாக குணப்படுத்தக் கூடியது. ஆனால், அல்சைமர் மறதி நோயை, முழுவதுமாக குணப்படுத்த முடியாது.
அறிகுறிகள் என்ன?
எல்லோருக்கும் மறதி இருப்பது சகஜம் தான். ஆனால், மறதி இருக்கும் எல்லோருக்கும் அல்சைமர் நோய் பாதிப்பு என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. பேச்சில் மாறுபாடு தெரியும், சிலர் திக்கி திக்கி பேசுவர். பெயர்களை மறப்பது, உறவினர், நண்பர்களை யார் என சொல்ல முடியாமல் போய், இறுதியில் தான் யார் என்றே சொல்ல முடியாத நிலை ஏற்படும். பல் துலக்குவது எப்படி என தெரியாமல் போய்விடும். உடை அணிய தெரியாது. வீட்டின் குளியலறை எங்கிருக்கிறது என்பது மறந்து விடும்.
மாய நிலை: சிலருக்கு நோய் முற்றிய நிலையில், இல்லாத ஒன்று, கண் எதிரே இருப்பது போன்று பேசுவர். காதில் ஏதோ சத்தம் ஒலித்து கொண்டிருப்பதை போன்று உணருவர். ஏதோ பிதற்றுவர். மனநோயாளி போல் நடந்து கொள்வர்.
பாதுகாப்பு தேவை: இந்நோயால் பாதிக்கப்பட்ட பலர், வீட்டிலிருந்து காணாமல் போய்விடுவர். எனவே, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பது அவசியமாகிறது. அவர்களை எங்கும் தனியாக அனுப்பக் கூடாது. அவர்கள் கையில் முகவரி, தொலைபேசி எண் போன்வற்றை எப்போதும் கொடுத்துவிடுவது நல்லது.
சிகிச்சை என்ன?: பத்து ஆண்டுகளுக்கு முன் வரை, அல்சைமர் நோய்க்கு சிகிச்சை கிடையாது. ஆனால், இப்போது நல்ல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே நோயை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், நல்ல கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம். இதற்கு அறுவை சிகிச்சை செய்ய தேவையில்லை.
தடுக்க வழி என்ன?: மூளைக்கு வேலை கொடுத்து, எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தம், சோர்வுக்கு இடம் கொடுக்கக் கூடாது. கொழுப்பு நிறைந்த உணவை தவிர்க்க வேண்டும். இது ஒரு நோய் என்றே தெரியாமல், முற்றிய நிலையில் தான் சிகிச்சைக்கு வருவார்கள். ஞாபக மறதி அதிகமாக இருந்தால், ஆரம்ப நிலை யிலேயே டாக்டரிடம் சென்று பரிசோதித்து கொள்வது நல்லது.
டாக்டர் சி. முத்தரசு
நரம்பியல் பேராசிரியர்
ராஜிவ் காந்தி அரசினர் மருத்துவமனை,
சென்னை.
நன்றி-தினமலர்

Similar Threads: