வயிற்று பிடிப்பு - ஜலதோஷம், தலைவலி போலத்தான் இந்த பாதிப்பும் எல்லா வயதினருக்கும் ஏதாவது ஒரு காரணத்தால் ஏற்படும். ஆனால், சமீப காலமாக, இளம் தலைமுறையினருக்கு பரவலாக வருகிறது. வயிற்றில் உள்ள தசைப்பிடிப்பு, வயிற்று வலி, மலச்சிக்கல், வாந்தி, பேதி, வயிறு உப்பி காணப்படுவது போன்ற குறைபாடுகள் எல்லாம் சாதாரணமாக வருபவை என்று நினைக்கக்கூடாது.
இந்த பாதிப்பின் ஒட்டுமொத்த பெயர், இர்ரிடபிள் பவல் சிண்ட்ரோம் (ஐ.பி.எஸ்.,) நேரத்திற்கு சாப்பிடாமல், வேலை பளு என்று ஏதாவது ஒரு காரணத்தை கூறி, கண்ட கண்ட நேரத்தில் சாப்பிடுவதால் ஏற்படும். அதுபோல, அதிக காரம், கொழுப்பு சார்ந்த உணவுகளை சாப்பிடுவதால், ஏற்படும் வாழ்க்கை முறை மாறுவதால் இப்போதுள்ள இளைய தலைமுறையினருக்கு அடிக்கடி வருகிறது. இதற்கு காரணம், அவர்களிடம் தொற்றியுள்ள மேற்கத்தியபாணி உணவுமுறை மட்டுமல்ல; வேலை பளு, தனி நபர் குணங்களை பொறுத்து ஏற்படும் மன அழுத்தமும் ஒரு முக்கிய காரணம். சரியான நேரத்தில், சரியான உணவை சாப்பிடாததுடன், மன அழுத்தமும் இருந்தால், அப்படிப்பட்டவர்களுக்கு ஐ.பி.எஸ்., கோளாறு அதிகமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் இப்போது உறுதி செய்துள்ளனர்.
மூன்று வகை:
வயிற்று வலி, தசைப்பிடிப்பு போன்றவற்றால் அடிவயிற்றில் 'சுரீர்' என்று பெரும் வலி ஏற்படும். தொடர்ந்து வலிக்கும் போது எரிச்சலும் வரும்; சாப்பிட்ட உணவு ஜீரணிக்கவும் செய்யாது. இதையடுத்து வயிற்று, குடல் பகுதியில் பிரச்சினை தொடரும். ஐ.பி.எஸ்., கோளாறை மூன்றாக மருத்துவ நிபுணர்கள் பிரிக்கின்றனர்.
* அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படும் அடிவயிற்றில் வலி நீடிக்கும்.
* சிலருக்கு பேதி மட்டும் அடிக்கடி ஏற்படும். இதுவும் ஐ.பி.எஸ்., தான்.
* சிலருக்கு மலச்சிக்கல், பேதி இரண்டும் சேர்ந்தே இருக்கும். இது மூன்றாவது வகை.
அறிகுறிகள்:
அடிவயிற்றில் லேசாக 'சுரீர்' என்று வலி ஏற்படும். வயிறு உப்பியது போல தோன்றும். அடிக்கடி காஸ் பாதிப்பு இருக்கும். காரணமில்லாமல் திடீரென பேதி ஏற்படும்; மலச்சிக்கலும் நீடிக்கும். பாதிக்கப்பட்டவர் போகும் மலத்தில் சளி கலந்திருக்கும். உடல் எடை சிலருக்கு குறையும். வாந்தியும் ஏற்படும். ஏதாவது சாப்பிட்டபடியே இருக்கத் தோன்றும். காரணம் என்ன?
வயிற்றில் குடல்பகுதியில் செல்லும் உணவை ஜீரணிக்கச் செய்யும் போது, அவற்றை மலக்குடலில், தள்ளுவதற்கு தசைகள் உதவுகின்றன. சாப்பிடும் உணவு ஜீரணிப்பதற்கேற்ப, வயிற்று சுவரில் உள்ள தசைகள் விரிந்து சுருங்கியபடி செயல்படும் வயிற்று பிடிப்பு உள்ளவர்களுக்கு இந்த தசைகள் விரிந்து, சுருங்கும் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படும்.
சில சமயம் மிக பொதுவாக இருக்கும். சில சமயம் வேகமாக இயங்கும். இதனால் தான் மலச்சிக்கல், வாந்தி, பேதி ஏற்படுகிறது.
முன்னெச்சரிக்கை:
நேரத்திற்கு சாப்பிடுவதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். ஏதோ காரணம், சொல்லி தாமதப்படுத்துவது, சில சமயம் அதிகம் சாப்பிடுவது கூடவே கூடாது.
நார்ச்சத்து உட்பட எல்லா சத்துக்களும் உள்ள வகையில் தினமும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும். கொழுப்பு, எண்ணெய் சமாச்சாரங்களை அறவே தள்ளி விட வேண்டும்.
சில உணவுகள் செரிமானம் ஆக நேரம் பிடிக்கும்; காய்கறி, நார்ச்சத்து உள்ள உணவுகள் சீக்கிரம் ஜீரணம் ஆகும்.
வந்த பின்....
* அடிக்கடி பேதி ஏற்பட்டால், நார்ச்சத்து உணவுகளை தவிர்க்க வேண்டும்.
* மலச்சிக்கல், பேதி ஏற்பட்டால், டாக்டர் சொன்னபடி உணவு உட்கொள்ள வேண்டும்.
* எந்த வித வயிற்றுக்கோளாறும் வராமல் தடுக்க, சரியான நேரத்தில் சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்து வந்தால் போதும்.
மன அழுத்தம்:
நாம் சாப்பிடும் உணவுகளால், ஏற்படும் பாதிப்பு தான் ஐ.பி.எஸ்., என்று தான் இதுவரை டாக்டர்கள் கூறிவருகின்றனர். ஆனால் மன அழுத்தமும் முக்கிய காரணம் என்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மன அழுத்தம்தான் சர்க்கரை, ரத்த அழுத்தத்துக்கு முக்கிய காரணம் என்று ஏற்கனவே நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில், வயிற்று பிடிப்புக்கும் அதுதான் காரணம் என்பது தெரியவந்துள்ளதால், ஐ.பி.எஸ்.,க்கான அறிகுறி ஏற்பட்டால், உடனே டாக்டரிடம் காட்டி விடுவது நல்லது.
உணவு நிர்வாகம்:
வயிற்றுக் கோளாறு எதுவாக இருந்தாலும், அதற்கு அடிப்படை ஐ.பி.எஸ்., ஆகத்தான் இருக்கும். உணவு நிர்வாகம் சரியில்லாவிட்டால், இதில் ஆரம்பித்து, பெரிய கோளாறில் கொண்டு விடும் ஆபத்து உள்ளது. பால் போன்ற சில பொருட்கள், சில காய்கறிகள், பழங்கள் சிலருக்கு அலர்ஜியாக இருக்கும். அப்படி அலர்ஜி ஏற்பட்டாலும், ஐ.பி.எஸ்., ஏற்படும். அதனால், அந்த உணவுகளை தவிர்ப்பது தான் சரியானது.
லைப் ஸ்டைல்:
இளைய தலைமுறையினரின் வாழ்க்கை முறை, உணவு முறை அடியோடு மாறியுள்ளதால், பெண்களில் பத்தில் ஆறு பேர், ஆண்களில் நான்கு பேருக்கு இந்த பாதிப்பு காணப்படுகிறது என்று சமீபத்தில் நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது.

Similar Threads: