நீங்கள் வழக்கமாக பால் குடித்துக் கொண்டிருந்து அதை சமீபகாலமாக நிறுத்தி விட்டீர்களா? அப்படியானால் உங்களின் உடல் எடை அதிகரிக்கலாம். வயிற்றில் மடிப்புகள் உருவாகலாம். தொப்பையும் அதிகமாகலாம். பாலில் உள்ள கால்சியம் சத்தும் மற்ற பல சத்துக்களும் உடல் எடை கூடுவதைத் தடுக்கின்றன.

பால் பொருட்களில் உள்ள கால்சியம் சத்து நமது உடலின் எடை கூடாமல் தடுக்கிறது. அதிகமான உடல் எடை கொண்டவர்களுக்கு அதை குறைக்கவும் உதவி புரிகிறது. அதே நேரத்தில், அவர்கள் மற்ற கொழுப்புச் சத்துக் கொண்ட, கலோரி அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களையும் அதிக அளவில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை பருவ வயதினர் சாப்பிடுவதால் அவர்களுக்கு எடை அதிகரிக்காமல் உடல் "சிலிம்" ஆக இருக்க உதவுகிறது. மத்திய தர வயதில் உள்ளவர்களுக்கு உடல் பெருத்து அசிங்கமாவதை தடுக்கிறது.

"பால் பொருட்கள் உடல் எடை குறைப்பை ஊக்கப்படுத்துகின்றன" என தெரிவித்துள்ள பிரபல ஆராய்ச்சியாளர் ஒருவர் இதற்காக பேடன்ட் உரிமையும் கோரியுள்ளார்.

பெரும்பாலான ஆய்வுகள் "குறைந்த அளவில் கால்சியம், பால் பொருட்கள் அல்லது இரண்டையும் எடுத்துக் கொள்வதற்கும், அதிகப்படியாக உடல் எடைக்கும் தொடர்பு உண்டு" என்பதை நிரூபித்துள்ளன. உடல் எடை குறிப்பிட்ட அளவைத் தாண்டும் போது அது வாழ்க்கைக் காலத்தை குறைக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இருபது வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றிலும், "குறைந்த அளவில் கால்சியம் எடுத்துக் கொள்வதற்கும், அதிகமான உடல் எடைக்கும் தொடர்பு உண்டு" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மையங்கள் நடத்திய ஆய்வில், "கால்சியம் சத்து குறைவாக உள்ள உணவு வகைகளை சாப்பிடுவதற்கும், உடலில் கொழுப்பு அதிகரிப்பதற்கும் தொடர்பு உள்ளது. குறிப்பாக தொப்பை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் வயிற்றுப் பகுதியிலும் கொழுப்பு அதிகரிக்கலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வில் கூறப்பட்டுள்ள இந்த முடிவுகள் குழந்தைகளுக்கும், இளம் வயதினருக்கும், முதியோர்களுக்கும் பொருந்தும். அதிக அளவில் பால் பொருட்களை சாப்பிட்டால் உடலில் கொழுப்புச் சத்து குறைவாகவே இருக்கும் என்பதை பல ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.

இளம் வயதினர் அதிக அளவில் சோடா போன்ற பானங்களை குடித்தால், உடல் எடை அதிகரிக்கும். ஆனால் பாலினால் எந்த பாதிப்பும் இல்லை. உயிருக்கு ஆபத்தான பல பிரச்னைகளில் இருந்து பால் பொருட்கள் நமக்கு பாதுகாப்பு அளிக்கின்றன.

மேலும், இன்சுலின் சுரப்பது அதிகரிப்பதற்கும் பாலுக்கும் தொடர்பு இருக்கிறது. குறைந்த அளவில் பால் சாப்பிடுவோர் சீக்கிரம் சர்க்கரை நோய்க்கு ஆட்படலாம். இன்சுலின் சுரப்பது அவர்களுக்கு குறையலாம். அதே நேரத்தில், அதிக அளவில் பால் சாப்பிடுபவர்களுக்கு இன்சுலின் சுரப்பது அதிகரிப்பதோடு, இருதய நோய்கள் வராமலும் பாதுகாக்கப்படுகிறது என்றும் சில ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ஆறு வருடங்களுக்கு மேலாக கொழுப்புச் சத்து குறைவான பாலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தவர்களுக்கு உடல் எடை கச்சிதமாக இருப்பதோடு, உடல் ஆரோக்கியமாக இருப்பதும் பல்வேறு சோதனைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. அதேநேரத்தில் பால் சாப்பிடாதவர்களுக்கு உடல் எடை அதிகரித்துள்ளது.

இவை தவிர வேறு பல பிரச்சனைகளையும் தீர்க்க பால் பொருட்கள் உதவியாக இருக்கின்றன. அதனால், கொழுப்புச் சத்து அதிகம் இல்லாத பாலை நாம் தினமும் ஒரு முறையாவது சாப்பிடுவது நல்லது.

Similar Threads: