மழைக்காலத்தில் நமது உச்சி முதல் பாதம் வரை ஏற்படக் கூடிய பொதுவான சில நோய்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

மழையில் நனைவதாலோ அல்லது தலைமுடியில் நீர் கோர்த்து இருப்பதாலோ, தலைமுடியின் வேர்களின் சின்ன சின்ன கொப்பளங்கள் வரக்கூடும்.

மழைக்காலங்களில் அவ்வளவாக யாரும் தலைக்கு குளிக்க மாட்டார்கள்.

இதனால் உருவாகும் அழுக்கும், வியர்வையும், தலையில் தடவிக் கொள்ளும் எண்ணெய்யும் சேர்ந்து தேமல், படை போன்றவைகளை தலையில் உருவாக்கலாம்.

அதனுள் நீர் கோத்துக் கொள்வதால் தலைகனம், ஒற்றைத்தலைவலி போன்றவை வர வாய்ப்புள்ளது.

மழைக்காலத்தில் சூரியனின் வெப்பம், மிகமிக குறைவாக இருப்பதால் காற்றில் பல நுண்கிருமிகள் பரவி இருக்கும். இவற்றை சுவாசிப்பதால் தொண்டை கரகரப்பு, இருமல், சளி, நிமோனியா போன்ற வியாதிகள் வரலாம்.

நுண்கிருமிகளின் தாக்குதலால் விஷக்காய்ச்சலும் தோன்றலாம். நுளம்பினால் வரும் நோய்களான மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல்கள் அதிக அளவில் தாக்கக்கூடும்.

பல இடங்களில் சாக்கடை அடைத்துக் கொண்டு கழிவு நீரும், குடிநீரும் ஒன்றாக கலந்து விடுவதால் வாந்தி, பேதி, காலரா போன்ற வியாதிகள் மழைக்காலத்தில் அதிகம் ஏற்படும்.

மழைக்காலத்தில் திறந்த நிலையில் இருக்கும் திண்பண்டங்களை உண்ணக்கூடாது. குறிப்பாக கிராம்பு, ஏலக்காய், முந்திரி, பாதாம், சர்க்கரையில் செய்யப்பட்ட இனிப்பு வகைகளில் காற்றில் உள்ள பூஞ்சைக்காளான் படிவதற்கு வாய்ப்புள்ளது.

இதை கவனிக்காது சுகாதாரமற்ற இனிப்புகளை சாப்பிட்டால் மயக்கம், வாந்தி, பேதி போன்ற கோளாறுகள் ஏற்படும்.

ஈரத்துணிகளையோ, சரியாக உலராத உள்ளாடைகளையோ அணியக்கூடாது. அணிந்தால், உடலில் பல இடங்களில் தேமல், பூஞ்சைத் தொற்று வர வாய்ப்புள்ளது. மழைக்காலத்தில் காற்றில் பிராணவாயு குறைவாக இருக்கும். இதனால் சுவாசக் கோளாறுகள் ஏற்படும்.

மழைக்கால நோய்கள் வராமல் தடுப்பது எப்படி?


 • மறக்காமல், தயங்காமல் குடை எடுத்துச் செல்லுங்கள். மழையில் நனைவதை முழுவதுமாக தவிர்த்து விடுங்கள்.
 • ஈரமான ஆடைகளை உடனே களைந்து விட்டு உலர்ந்த, சுத்தமான ஆடைகளை அணியுங்கள்.
 • வீட்டைச் சுற்றி மழை நீர் தேங்காத அளவிற்கு பார்த்துக்கொள்ளுங்கள்.
 • கழிவு நீர் பாதைகளில் அடைப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
 • மிதமான, எளிதாக ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளை உண்ணுங்கள்.
 • சுட்டாறிய நீரைப் பருகுங்கள்.
 • கூடியவரையில் வெளி இடங்களில் உணவு உண்பதை தவிர்த்து விடுங்கள். அப்படி சாப்பிட்டே ஆகவேண்டுமென்றால் சூடாக இருக்கும், எளிதாக ஜீரணம் ஆகக் கூடிய உணவுகளை உண்ணுங்கள்.
 • டின்னில் அடைத்து வைக்கப்பட்டுள்ள, கெட்டிய காகிதத்தில், பாக்கெட்டில் சுற்றி வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை உண்ணாதீர்கள்.
 • எந்த நோயாக இருந்தாலும் நோயின் அறிகுறி தெரிந்த உடனே மருத்துவரை அணுகுங்கள்.
 • எந்தக்காரணத்தைக் கொண்டும் மருத்துவர் ஆலோசனையின்றி நீங்களாகவே கடைகளில் மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிடாதீர்கள். அது மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கிவிடும்.
 • தன்னுடைய சுகாதாரம், தன்னைச்சுற்றியுள்ள சுற்றுப்புற சூழலின் சுகாதாரம், பொது நலத்தில் அக்கறை, விழிப்புணர்ச்சி இவை இருந்தால் மழைக்கால நோய்கள் உங்களை தாக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.


Similar Threads: