வாயுவின் குணங்கள்...

அன்றாட வாழ்வில் சிலருக்கு அடிக்கடி உடலில் ஏதாவது ஒரு உறுப்பில் பிடிப்பு அல்லது சுளுக்கு ஏற்படும். அதாவது கால், இடுப்பு, தோள்பட்டை என்று எந்த உறுப்பு அதிகம் பயன்படுத்தப்படுகிறதோ அங்கு இந்த பிடிப்பு ஏற்பட்டு அவதிப்படுவார்கள். இதற்கு காரணம் வாயு தான். இந்த வாயுவின் குணங்கள் குறித்து ஆயுர்வேத டாக்டர் பி.எல்.டி. கிரிஜா கூறியதாவது:

இன்றைய உணவு, பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை ஆகியவை தான் தசைகளில் பிடிப்பு, சுளுக்கு போன்ற கோளாறுகள் ஏற்பட முக்கிய காரணம். சாதாரணமாக இத்தகைய கோளாறுகள் வயதான காலத்தில் அல்லது நடுத்தர வயதில் தோன்றலாம். ஆனால், இன்றைய நவீன யுகத்தில் சிறுவர், சிறுமியருக்கு கூட உடம்பு வலி, தசைகளில் பிடிப்பு போன்ற வாத நோய்கள் தோன்றுகின்றன.

வாயுவின் குணங்கள் இயற்கையில் காற்றின் குணங்களுக்கு சமம். அது வறட்சி, இலகு தன்மை, குளிர்ச்சி போன்ற குணங்களைக் கொண்டது. வாயுவின் முக்கிய குணம் வறட்சி.
அதனால், எண்ணெய் பசையற்ற வறட்சியான உணவை உட்கொண்டால் வாயு வளர்ந்து நோயை உண்டாக்கும். "நெய் வெறும் கொழுப்புச் சத்து. அதை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகமாகும். உடலில் எண்ணெய் தேய்க்கும் பழக்கமே கிடையாது" என்று சொல்பவர்களுக்கு வெகு சீக்கிரமாகவே வாயுவின் தொல்லை உண்டாகும்.

பொதுவாக மழைக் காலங்களில் வாத நோய்கள் அதிகமாக காணப்படும். பருவங்கள் மாறும் போது, இயல்பாகவே உடலில் வாத, பித்த, கபங்கள் வளரவும், குறையவும் செய்யும். கோடைக் கால வறட்சியில் வாயு அதிகமாகும். அதன் பிறகு, குளிர்ந்த ஈரமான மழைக் காலத்தில் வாயு சீற்றமடைவது இயற்கையின் நியதி.

எனவே, கோடையிலும், மழைக் காலத்திலும் வாயு சீற்றமடைவதை தடுக்க முயற்சி செய்ய வேண்டும். குளிர், மழைக் காலங்களில் வெந்நீர் அருந்துவது, எண்ணெய்ப் பசையுள்ள உணவுகளை சாப்பிடுவது, வறட்சி மற்றும் காரம் உள்ள உணவுகளை தவிர்ப்பது, தைலங்களை உடலில் தேய்த்துக் குளிப்பது ஆகிய பழக்கங்களை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

இவை அனைத்தையும் நாம் சிரமமின்றி கடைப்பிடிக்கலாம். அதன் மூலம், வாயுவினால் ஏற்படும் சுளுக்கு, பிடிப்பு போன்ற தொல்லைகள் இல்லாமல் சுகமாக வாழலாம்.

பிராண வாயு, வியான வாயு, உதான வாயு, சமான வாயு, அபான வாயு ஆகிய ஐந்தும், உடலில் வெவ்வேறு பகுதிகளை இருப்பிடங்களாக்கி இயங்குகின்றன.

வாயு உடல் முழுதும் பரவி இருக்கிற போதும், அதன் முக்கிய இருப்பிடம் தொப்புளுக்குக் கீழுள்ள இடுப்புப் பகுதியாகும். பொதுவாக ஜீரணப் பை, இடுப்பு, தொடைகள், கால்களின் எலும்புகள், காது, தோல் இவற்றை வாயு இருப்பிடமாகக் கொண்டது.

குறிப்பாக பெருங்குடல் பகுதியை இருப்பிடமாகக் கொண்டுள்ளது. வாயு சரியாக இயங்குவதை "வாத அனுலோமனம்" என்கிறோம். வாயு சரியாக இயங்கவில்லை எனில் பல நோய்கள் நம்மை தாக்குகின்றன.

Similar Threads: