நிறம் மாறும் கண்கள்

நாற்பதை தாண்டியும் இளைஞர்களை கவர்ந்து கொண்டிருக்கும் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் ஸ்பெஷலே அந்த பச்சை நிற விழிகள்தான். அந்த கண்களின் நிறம் இயற்கையாக அமைந்தது.

அது போல வித்தியாசமான நிறம் கொண்ட கண்களை விரும்புபவர்களா நீங்கள்?

ஒரு சிறிய அறுவை சிகிச்சை மூலம் கண்களின் நிறத்தை மாற்றிவிடலாம் என்கிறார் கண் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஷிபு வர்க்கி. இந்தியாவில் இந்த அறுவை சிகிச்சையை செய்கிற ஒரே மருத்துவரும் இவரே!


கண்களை நிறம் மாற்றும் இந்த புதிய சிகிச்சையின் பெயர் ‘ப்ரோஸ்தட்டிக் ஐரிஸ் இம்பிளான்டேஷன்? இந்தியாவிலே முதன்முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இருக்கும் டாக்டர் ஷிபு வர்க்கியிடம் இது குறித்து பேசினோம்...


‘‘மேலை நாடுகளில் அழகுக்காக பயன்படும் இந்த சிகிச்சை இந்தியாவில் பெரும்பாலும் அவசியத்துக்காக மட்டுமே செய்யப்படுகிறது.

கண்ணில் 3 பாகங்கள் முக்கியமானவை. கார்னியா எனப்படும் கருவிழி, அதன் பின்னால் உள்ள ஐரிஸ். அதற்கு அடுத்து உள்ள ரெட்டினா. இந்த அறுவை சிகிச்சையில் கார்னியாவில் 2.8 மி.மீக்கு கீறல் போடப்பட்டு உண்மையான ஐரிஸுக்கு முன்னால் சிலிக்கானால் செய்யப்பட்ட செயற்கை ஐரிஸை பொருத்தி விடுவோம். இந்த செயற்கையான ஐரிஸ் பல நிறங்களில் கிடைக்கிறது. சிகிச்சை பெறுபவர்கள் தங்களுக்கு விருப்பமான நிறத்தில் கண்களை இதன் மூலம் மாற்றிக் கொள்ளலாம்.

பல மாடல்களும் நட்சத்திரங்களும் இந்த சிகிச்சையை செய்து கொள்கிறார்கள். சைரஸ் கே என்னும் கனடா நடிகர் ‘வேம்பையர் ஸ்டோரிஸ்’ என்னும் பேய் தொடரில் நடித்து வருகிறார். அதற்கு நீல நிற கண்கள் தேவைப்பட்டதால், கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தி இத்தனை காலம் சமாளித்து வந்துள்ளார். ஒரு கட்டத்துக்கு மேல் வலி, எரிச்சல் அதிகரிக்கவே என்னிடம் வந்தார். இந்த அறுவை சிகிச்சையின் மூலம் அவரது கண்களை நீல நிறத்துக்கு மாற்றினேன். இப்போது கான்டாக்ட் லென்ஸ் அணியும் பிரச்னை அவருக்கு இல்லை’’ என்கிறவர், இந்த அறுவை சிகிச்சையின் சாதக, பாதகங்களையும் தெளிவாக்குகிறார்.

‘‘கண்ணில் ஐரிஸ் பகுதியில் ஏதாவது காயம் ஏற்பட்டு தழும்பு ஏற்பட்டு இருந்தால் இந்த சிகிச்சையின் மூலம் அதை மறைத்து விடலாம். கருவிழியின் மையப்பகுதியான பாப்பாவில் ஏதேனும் மாறுபாடுகள் இருப்பின் இதன் மூலம் சரி செய்யலாம்.

‘ஆல்புனிசம்’ என்ற நோய் உள்ளவர்களுக்கு மெலனின் நிறமிகள் உடலில் தேவையான அளவு இருக்காது. இதனால் ஐரிஸ் பகுதி வெள்ளையாக காணப்படும். புகைப்படம் எடுத்தால் கூட விழிகள் வெள்ளையாக தெரியும். இந்த அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் அக்குறைபாட்டை நிவர்த்தி செய்ய முடியும்.

‘அனிரீடியா’ எனும் பிறவிக் குறைபாட்டில் கண்ணில் ஐரிஸ் இல்லாமலே இருக்கும். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கும் இந்த சிகிச்சை அவசியம் தேவைப்படும்.


பொதுவாக இந்த சர்ஜரியை செய்யும் முன், அந்த நபர் இதற்கு தகுதியானவரா என்று பரிசோதித்த பின்னர்தான் செய்ய முடியும். கண்புரை நோய் உள்ளவர்கள், கிளைக்கோமா என்னும் கண் திரவ அழுத்த நோய் உள்ளவர்கள், கண்களில் போதுமான அளவு எண்டோதீலிய செல்களின் எண்ணிக்கை இல்லாதவர்களுக்கு இந்த சிகிச்சை செய்ய முடியாது.

கார்னியாவுக்கும் ஐரிஸுக்கும் குறைந்த பட்சம் 2.75 மி.மீ. இடைவெளி இருக்கவேண்டும். இதற்கு குறைவான இடைவெளி உள்ளவர்களுக்கு இந்த சர்ஜரியை செய்ய முடியாது.

டெல்லி, மும்பை மற்றும் பெங்களூர் இளைஞர்கள் இந்த சிகிச்சையை ஆர்வமாக செய்து கொள்கிறார்கள். ஐரோப்பாவில் உள்ள டூனிசியா நாட்டில் செய்கிறார்கள். பிரேசிலிலும் இந்த சர்ஜரி செய்யப்படுகிறது.

அமெரிக்காவில் இதைச் செய்வதற்கு Food and Drug administration சான்றிதழ் வாங்க வேண்டும். பிரான்ஸ், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளில் செய்வதற்கு C Equality approval mark சான்று வாங்க வேண்டும். அதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.


பிரான்ஸில் தயாராகி, ஜெர்மனியில் ஆய்வுக் கூட தர பரிசோதனை செய்யப்பட்டு அமெரிக்கா சென்று அங்கிருந்து இந்த சிலிக்கான் ஐரிஸ் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இருகண்களுக்கும் இந்த சர்ஜரியை செய்ய தோராயமாக 5 முதல் 6 லட்சங்கள் வரை செலவாகும் என்கிறவரிடம் கடைசியாக அந்தக் கேள்வியை முன் வைத்தோம்.


இந்த சிகிச்சையால் பார்வை பறிபோகும் அபாயம் உண்டா?

‘இந்த சர்ஜரியில் மட்டும் இல்லை... எல்லாவிதமான கண் அறுவை சிகிச்சைகளிலும் இந்த அபாயம் உள்ளது. எளிய சர்ஜரியான கண்புரை அறுவை சிகிச்சை செய்த சிலருக்கு பார்வை பறி போனதை செய்தித்தாளில் படித்திருப்பீர்கள்.

சரியான முறையில் சர்ஜரி செய்யாததால் வந்த விளைவு. இதை யாருக்கு செய்யக்கூடாது என்பதும் ஒரு நிபுணருக்கு தெரிய வேண்டும். நான் செய்த நூற்றுக்கு மேற்பட்ட சர்ஜரிகள் வெற்றிகரமாகவே அமைந்துள்ளன. ஒருவருக்கும் பார்வை குறைபாட்டு பிரச்னை ஏற்படவில்லை. அதனால், கவலைப்படத்தேவையில்லை!’’