அக்கறையற்ற ஆண்களின் ஆரோக்கிய குணம்!

நம்மில் பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்கள், புத்திசாலிகள். நமக்கு, நமது வாழ்வினை எவ்வாறு வழிநடத்தி செல்ல வேண்டும் என அனைத்தும் தெரியும். ஆனால், ஒன்றை தவிர. ஆம், உடல்நலன் தவிர்த்து மற்ற அனைத்திலும் நாம் மிக சரியாக, கவனமாக இருக்கிறோம். இதனால் பின் நாட்களில் ஏற்பட போகும் விளைவுகளை மறந்து, உடல்நலத்தின் மீது அக்கறைக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

நாம் சின்ன சின்ன விஷயங்கள் தானே என்று எண்ணி சாதாரணமாக விட்டுவிடுபவை தான் பின்னாளில் பெரிய ஆபத்துகளை உருவாக்குகின்றன. ஒவ்வொரு நாளையும், நம் உடல்நலனை விட்டுக்கொடுத்து தான் ஆரம்பித்துக் கொண்டிருக்கின்றோம்.

அதிலும் ஆண்கள் தான் தாராள மனதுடன் விட்டுக் கொடுக்கின்றனர் என மருத்துவர்கள் கூறுகின்றனர். காலை படுக்கையில் இருந்து எழுவதில் இருந்து இரவு படுக்கைக்கு செல்லும் வரை சின்ன சின்ன விஷயங்களில் ஆண்கள் தங்கள் உடல்நலன் மீது அக்கறை எடுத்துக் கொள்ள மறுக்கின்றனர்....

மருத்துவரிடம் ஆலோசனை
ஆண்கள் மருத்துவரை அணுகுவதில், மிகவும் குறைவாக இருக்கின்றனர். எல்லாம் எங்களுக்கு தெரியும், இதெல்லாம் சாதாரண பிரச்சனை என அவர்கள் எண்ணுவது சில சமயங்களில் பெரிய ஆபத்துகளுக்கான அறிகுறிகளாக அமைந்து விடுகின்றன. அதனால், எந்த விஷயமாக இருப்பினும், மருத்துவரிடம் கலந்து ஆலோசிப்பது நல்லது ஆகும்.

உடல் நல பரிசோதனை

வீட்டில் உள்ள அனைவருக்கும் மருத்துவ காப்பீடு, மருத்துவ பரிசோதனை என எல்லாம் செய்யும் ஆண்கள். தாங்கள் மருத்துவ பரிசோதனை செய்ய செல்வதில்லை. பொதுவாக நடுவயது ஆண்களுக்கு தான் நிறைய கோளாறுகள் ஏற்படுகின்றன. அதிலும், இப்போதெல்லாம் ஆண்களுக்கு விரைப்பை புற்றுநோய் வெகுவாக தாக்குகிறது. எனவே, வருடம் ஒரு முறையாவது உடல் நல பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது.

மதுப்பழக்கம்
ஆண்களிடம் இருக்கும் மிகவும் தவிர்க்க வேண்டிய தீயப் பழக்கம், மது அருந்துவது. அதுவும் சிலர், மூக்குமுட்ட குடித்துவிட்டு சுயநினைவின்றி இருப்பார்கள். அது மிகவும் ஆபத்தான விஷயமாகும்.

அளவிற்கு மீறி மது அருந்துவதனால் புற்றுநோய் மற்றும் நரம்பியல் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனால் தான் பெருமளவில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. உடல் நலம் பாதுகாக்க ஆண்கள் மது பழக்கத்தை கைவிடவேண்டியது கட்டாயம் ஆகும்.

உணர்வுகளை பகிராதிருப்பது
ஒட்டுமொத்த ஆண்களும் செய்யும் ஒரு தவறு, தங்களது உணர்வுகளை தங்களுக்கு உள்ளேயே பூட்டி வைத்துக்கொள்வது. பெண்கள் பெரும்பாலும் தங்களது கவலையை கொட்டி தீர்த்து அழுது விடுவர். ஆனால், ஆண்கள் தங்குளுக்குள் அதை மறைத்து வைத்து உடல் நலத்தை பாதித்துக் கொள்கிறார்கள்.

இதனால் ஆண்களுக்கு மன சோர்வும், மன அழுத்தமும் ஏற்படுகின்றன. இவை இரண்டும் தான் பல தீயப் பழக்கங்களுக்கும், தற்கொலை முயற்சிகளுக்கும் துணை நிற்கிறது. எனவே, ஆண்கள் தங்களது உணர்வுகளையும், கவலைகளையும், குறைந்தது தங்களது தாய் அல்லது மனைவியிடம் ஆவது பகிர்ந்துக்கொள்வது அவசியம்.

வேலை அழுத்தம்
ஆண், பெண் என இருபாலரும் அலுவலகங்களில் வேலை செய்யினும். ஆண்களுக்கு தான் அதிகம் மன அழுத்தம் ஏற்படுகின்றது. இவ்வாறு வேலை இடங்களில் ஏற்பாடும் மன அழுத்தங்களினால் ஆண்களுக்கு நிறைய இதய கோளாறுகள் மற்றும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

எனவே, ஆண்கள் கட்டாயம் வேலைகளுக்கு இடையே ஓய்வெடுப்பது அவசியம். அப்படி ஓய்வின்றி வேலை பார்த்து உடல் நலத்தை கெடுத்து கொள்வதற்கு பதிலாய், வேலையிடத்தை மாற்றிக்கொள்வது மிக நல்லது.

சுடுநீர் குளியல்
ஆண்கள் நீண்ட நேரம் சுடுநீரில் குளிப்பதை விரும்புவார்கள். அதிலும் ஷவர் குளியல் என்றால் ஆண்களுக்கு அலாதி பிரியம். ஆனால், நீண்ட நேரம் சுடுநீரில் குளிப்பதால் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியில் பாதிப்பு எற்படுத்துப்கிறது என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர். எனவே ஆண்கள் சுடுநீரை அதிக அளவில் பயன்ப்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

சன் ஸ்க்ரீன் லோஷன்
ஆண்கள் சரும பராமரிப்பில் மிகவும் சோம்பேறிகள். சுட்டெரிக்கும் சூரியன் வாட்டி எடுத்தாலும். எந்த வகை தற்காப்பும் இன்றி தான் ஊர் சுற்றுவார்கள். ஆனால், இது முற்றிலும் தவறு. சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதா கதிர்கள் சருமம் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தும் எனவே சன் ஸ்க்ரீன் லோஷனை பயன்ப்படுத்துவது அவசியம்.

சுகாதாரம்
ஆண்களுக்கு சுகாதாரம் பற்றி உட்கார வைத்து வகுப்பு எடுத்தாலும் பத்தாது. அவ்வளவு சுகாதாரமின்மையில் மூழ்கிக் கிடப்பவர்கள் ஆண்கள். ஆண்களுக்கு தான் அடிக்கடி அதிக அளவில் சளி, காய்ச்சல் போன்றவை வரும்.

காரணம், பாத்ரூம் சென்று வந்தால் சரியாக கைக் கழுவாமல் இருப்பது. மற்றும் உணவருந்தும் முன் சரியாக கைக் கழுவாமல் இருப்பது போன்றவை தான் இதற்கு காரணமாய் இருக்கின்றன. எனவே, கைகளை நன்கு கழுவுவது முக்கியம்.

பல் துலக்குவது
ஆண்களிடம் இருந்து தான் பொதுவாக நிறைய பற்கள் சார்ந்த பிரச்சனைகள் வருகின்றன என பல் மருத்துவர்கள் கூறுகின்றனர். பற்கள் மற்றும், ஈறுகளின் பிரச்சனைகள் அதிகரிப்பதால், நச்சுகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உடலில் மற்ற பாகங்களுக்கும் பிரச்சனை ஏற்பட காரணமாய் இருக்கின்றன.எனவே, காலை மற்றும் இரவு இரண்டு வேலைகளும் நன்கு பல் துலக்குவது அவசியம்.

துரித உணவுகள்
இந்நாட்களில் துரித உணவுகள் உட்கொள்வது ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது. பெரும்பாலும் ஆண்கள் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் போது துரித உணவுகளை உண்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள். இந்த பழக்கம், உடல் எடை அதிகரிக்க செய்கிறது.

உடல் எடை அதிகரிப்பதால் இதய நோய்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. எனவே பீட்டில் சமைத்த உணவுகளை அதிகம் உட்கொள்ள ஆண்கள் பழக வேண்டும். அதையும் தாண்டி இடையிடையே உண்ணும் துரித உணவுப் பழக்கங்களை நிறுத்த வேண்டும்.