செயற்கை இரைப்பை தயார்!

இரைப்பை... இந்த நாலெழுத்துச் சமாச்சாரம் மட்டும் நம் உடலில் இல்லாவிட்டால், வாழ்க்கையே ‘ருசி’க்காது! இரைப்பை என்று ஒன்று இருப்பதால்தான் நமக்குப் பசிக்கிறது. பசிப்பதால்தான் உணவைச் சாப்பிடுகிறோம்.

அந்த உணவுக்காகத்தான் உழைக்கிறோம். உழைப்பால் வாழ்க்கையில் உயர்வைப் பெறுகிறோம். இப்படி நம் வளர்ச்சிப்படியின் அடித்தளமாக விளங்குகின்ற இரைப்பையை முதலில் தெரிந்துகொள்வோம், அதற்குப் பிறகு அது குறித்த மெடிக்கல் சுவாரஸ்யத்துக்குப் போவோம்.

இரைப்பை என்பது உணவு தங்கும் இடமாகவும் உணவு செரிமானமாகும் இடமாகவும் செயல்படுகிறது. இது வயிற்றின் மேல் பகுதியில் அமைந்திருக்கிறது; விரிந்து கொடுக்கும் தன்மை கொண்ட தசைகளால் ஆனது.காலியாக இருக்கும் இரைப்பையின் கொள்ளளவு சுமார் 50 மி.லி. மட்டுமே. அதேவேளையில் உணவுக்குழாய் வழியாக உணவு இரைப்பைக்குள் வர வர... இந்தத் தசைகள் விரிந்து கொடுத்து ஒன்றரை லிட்டரிலிருந்து இரண்டரை லிட்டர் வரை உணவு தங்குவதற்கு இடம் தருகின்றன.

பல மடிப்புகளாக இருக்கிற மியூக்கஸ் எனும் திசுப்படலம் இரைப்பையின் உட்பரப்பைப் பாதுகாக்கிறது. இதிலுள்ள சீஃப் செல்கள் பெப்சினோஜென் (Pepsinogen) எனும் என்சைமையும் ஆக்சின்டிக் செல்கள் (Oxyntic cells) ஹைட்ரோகுளோரிக் அமிலத்தையும் சுரக்கின்றன. இரைப்பையின் அடிப்பகுதியில் உள்ள ஜி செல்கள் (G Cells) காஸ்ட்ரின் (Gastrin) எனும் ஹார்மோனைச் சுரக்கின்றன. இதுதான் ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் பெப்சினோஜென் சுரப்பைக் கட்டுப்படுத்துகிறது.

இரைப்பை ஒரு மிக்ஸி மாதிரி வேலை செய்கிறது. இதன் மெல்லிய அசைவுகள் உணவுப் பொருள்களை நன்கு கலந்து பிசைந்து கொடுக்கின்றன. அப்போது ஹைட்ரோகுளோரிக் அமிலம் உணவுடன் கலந்து அதை உடைத்து சிறு துண்டுகளாக்குகிறது.

இதனால் உணவு ஒரு கூழ்போல் ஆகிறது. அதே வேளையில் இந்த அமிலம் பெப்சினோஜெனை பெப்சின் என்கிற என்சைமாகவும் மாற்றுகிறது. இதுதான் உணவிலுள்ள புரத மூலக்கூறுகளைச் செரிக்கிறது. சாதாரணமாக திட உணவு சுமார் 4 மணி நேரம் இரைப்பையில் தங்குகிறது. பிறகு முன்சிறுகுடலுக்குச் செல்கிறது. ஆனால், திரவ உணவு 40 நிமிடங்களில் காலியாகி விடுகிறது.

இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலமும் பெப்சின் என்சைமும் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது இரைப்பையில் உள்ள மியூக்கஸ் படலம் வீங்கிப் புண்ணாகிறது. இதுதான் ‘அல்சர்’ என்று அழைக்கப்படுகிற இரைப்பைப் புண்.

காரம், புளிப்பு, மசாலா மிகுந்த உணவு, எண்ணெயில் வறுத்த உணவு ஆகியவற்றை அதிகமாக உண்பது; மது அருந்துதல், புகைபிடித்தல், ஸ்டீராய்டு மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடுவது; நேரம் தவறி சாப்பிடுவது, அதிக சூடாகச் சாப்பிடுவது போன்ற தவறான உணவுப் பழக்கங்கள் இரைப்பைப் புண்ணை வரவேற்கின்றன.

‘ஹெலிக்கோபாக்டர் பைலோரி’ (Helicobacter pylori) எனும் பாக்டீரியா இந்த நோய் ஏற்பட முக்கிய காரணம். மன அழுத்தம், கோபம், தூக்கமின்மை போன்ற காரணிகளும் இரைப்பைப் புண் வருவதைத் தூண்டுகின்றன. இரைப்பைப் புண் வந்தவர்களில் 100ல் 2 பேருக்கு அது புற்றுநோயாக மாறிவிடுகிறது. புற்றுநோய் காரணமாக நேரும் இறப்புகளில் இரைப்பைப் புற்றுநோய் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இரைப்பைக் கோளாறுகளுக்கு இன்றைக்கு மருத்துவ வசதிகள் நிறைய இருக்கின்றன என்றாலும், அவை தற்காலிக நிவாரணங்களை மட்டுமே தருகின்றன. இவற்றுக்கு நிரந்தரமாகத் தீர்வு காணும் வகையில் சிகிச்சைமுறைகளைக் கண்டுபிடிப்பதில் மருத்துவ உலகம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்துவருகிறது. அதற்கு இடைஞ்சலாக இருப்பதும் நம் இரைப்பைதான். எப்படி?

எந்த ஒரு புதிய மருந்தையும் விலங்குகளுக்கு முதலில் கொடுத்துப் பார்த்த பிறகுதான் மனிதர்களுக்குக் கொடுப்பது வழக்கம். ஆனால், விலங்குகளின் இரைப்பை அமைப்பு வேறு; உணவு முறை வேறு. அவற்றுக்கு ஏற்படுகிற நோய்களின் தன்மை வேறு; மனிதர்களுக்கு ஏற்படுகிற இரைப்பை நோய்களின் தன்மை வேறு.

இதன் காரணமாக, புதிய மருந்துகளை மனிதர்களுக்கு நேரடியாகக் கொடுத்துப் பரிசோதிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஆனால், இம்மாதிரியான ஆராய்ச்சிகளுக்கு முன்வரும் மனிதர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். எனவே, மனித இரைப்பையைப் போலவே செயல்படுகிற செயற்கை இரைப்பையைக் கண்டு பிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு இப்போது வெற்றியும் கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் ஓகியோ மாநிலத்தில் சின்சின்னாட்டி குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர்கள் இந்தச் சாதனையைச் செய்திருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சிக்குழுவின் இயக்குநர் ஜேம்ஸ் வேல்ஸ், ‘‘உலகில் பாதிப்பேருக்கு இரைப்பை நோய் இருக்கிறது. அசுத்த உணவினாலும், மாசடைந்த குடிநீரினாலும் ‘ஹெச்.

பைலோரி’ கிருமி பரவியுள்ளது. இவர்களுக்கு இரைப்பையில் புற்றுநோய் தாக்கும் ஆபத்து மிக அதிகம். ஆனால் அதைத் தடுப்பதற்கான சிகிச்சை முறைகள் இப்போது மிகவும் குறைவு. அப்படி புதிய சிகிச்சைகளைக் கண்டுபிடிக்க செயற்கை இரைப்பை தேவைப்பட்டது. அதைத்தான் நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம்.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு உழைப்பின் பயன் இது. முதலில் மனிதக் கருவிலிருந்து எப்படி இரைப்பை உருவாகிறது என்பதைத் தொடர்ந்து கண்காணித்து வந்தோம். பிறகு ‘புளூரிபொட்டன்ட் ஸ்டெம் செல்களிலிருந்து நமக்குத் தேவைப்படுகிற உறுப்பின் செல்களை வளர்க்க முடியும்’ என்கிற அடிப்படைத் தத்துவத்தை உபயோகித்து, புதிய இரைப்பையை வளர்க்க முடிவு செய்தோம். அந்த செல்களை எடுத்து ஒரு பெட்ரி டிஸ்ஸில் வைத்து இயற்கையாக இரைப்பை வளர்கிற பாணியிலேயே வளர்த்தோம்.

ஒரே மாதத்தில் 3 மி.மீ. விட்டத்தில் ஒரு இரைப்பை உருவானது. அதற்குள் ‘ஹெச்.பைலோரி’ கிருமியை அனுப்பினோம். அடுத்த 24 மணி நேரத்தில் அந்தக் கிருமிக்குரிய எதிர்வினை மனித இரைப்பையில் ஏற்படுவது போலவே செயற்கை இரைப்பையிலும் ஏற்பட்டது. இது எங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி. இன்னும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்யும்போது இந்தக் கிருமி எப்படி இரைப்பையில் புண்ணையும் புற்றுநோயையும் தோற்றுவிக்கிறது என்கிற சூட்சுமத்தை முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியும்.

அதை வைத்து இந்த நோயைத் தடுக்கவும் குணப்படுத்தவும் புதிய வழிகளைக் கண்டுபிடிக்க முடியும். இதன் பலனால், எதிர்காலத்தில் இரைப்பையில் ஏற்படுகிற எல்லா நோய்களுக்கும் நிரந்தரத் தீர்வு தரமுடியும்’’ என்கிறார் நம்பிக்கையுடன்.டாக்டர் கு.கணேசன்


Similar Threads: