எக்ஸ் ரே
பெயர் தெரியாத நபரையோ, விஷயங்களையோ நினைவு வைத்துக் கொள்ள எக்ஸ் என்று தற்காலிகமாகப் பெயர் வைப்பது வழக்கம். எக்ஸ் ரேவுக்குப் பெயர் வைக்கப்பட்டதும் இப்படி ஒரு அவசர கதியில்தான்!

வில்ஹெம் ரான்ட்ஜென் ஓர் இயற்பியல் பேராசிரியர். ஜெர்மனியைச் சேர்ந்த இவர், 1895ல், ஒரு சுபயோக சுபதினத்தில் தன்னுடைய பரிசோதனைக் கூடத்தில் சில வாயுக்களை ஆராய்ந்து கொண்டிருந்தார். அப்போது, அறை முழுவதும் இருட்டாக இருந்தது.


கருப்புக்காகிதத்தால் கேத்தோடு குழாயையும் (Cathode Ray Tube) மூடி வைத்திருந்தார். ஆனாலும், அந்தக் குழாய்க்கு அருகிலிருந்த ஒரு படிகம் வெளிச்சம்பட்டு மின்னியுள்ளது. குழாயிலிருந்து ஏதோ ஒரு கதிர் வெளிப்பட்டு, மூடி வைத்திருந்த கருப்புக் காகிதத்தையும் தாண்டி வந்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டார்.

இந்தக் கதிர்களில் என்னமோ இருக்கிறது என்று ஆர்வமாகி, இன்னும் தீவிரமாக ஆய்வு செய்தார். அப்போது தன்னுடைய குறிப்புகளில் நினைவு வைத்துக் கொள்வதற்காக வைத்த பெயர்தான் எக்ஸ் ரே! கணவர் தீவிர ஆராய்ச்சியில் இருப்பதைப் பார்த்து கலவரமான ரான்ட்ஜெனின் மனைவி அன்னா பெர்த்தா, பரிசோதனைக் கூடத்துக்குத் தேடி வந்திருந்தார். விளையாட்டாக மனைவியின் கை மீது அந்தக் கதிர்களை செலுத்தியபோது, அருகில் இருந்த கருப்புக்காகிதத்தில் மனைவியின் கை எலும்புகளும் விரலில் அணிந்திருந்த மோதிரமும் தெரிந்தன.

என்னுடைய மரணத்தை நானே நேரில் பார்ப்பதுபோல திகிலாக இருந்தது என்று இந்த சம்பவம் பற்றியும் எக்ஸ் ரே பற்றியும் ஆஸ்திரிய செய்தித்தாளில் கட்டுரை எழுதினார் ரான்ட்ஜென். தொடர்ந்து எக்ஸ் ரே என்றே குறிப்பிட்டு எழுதியும் பேசியும் வந்த ரான்ட்ஜென், இந்தப் பேரே நல்லாதானே இருக்கு என்று அப்படியே விட்டுவிட்டார்.

இந்த எக்ஸ் ரேதான் உடலுக்குள் மறைந் திருக்கும் எலும்புகளைப் படமெடுப்பதற்கும் விமான நிலையங்களில் கடத்தி வரும் ஆபரணங்களைக் கண்டுபிடிப்பதற்கும் இன்று
பெரிதும் உதவிக் கொண்டிருக்கிறது.

வில்ஹெம் ரான்ட்ஜெனின் இந்த அபாரக் கண்டு பிடிப்புக்காக இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசு 1901ல் வழங்கப்பட்டது. அவரோ, பரிசுத் தொகையை பல்கலைக்கழகத்துக்கு நன்கொடையாக வழங்கிவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கக் கிளம்பிவிட்டார். தன் கண்டுபிடிப்புக்காக பேடன்ட்உரிமையையும் அவர் வாங்கி வைத்துக் கொள்ளவில்லை.

எக்ஸ் ரே கதிர் வீச்சுகள் ஆபத்தானவை என்பது இப்போது நமக்குத் தெரியும். ஆனால், அதைக் கண்டுபிடித்த ரான்ட்ஜெனுக்கு துரதிர்ஷ்டவசமாக அப்போது தெரியவில்லை. குடல் புற்றுநோயால் 1923ம் ஆண்டு ரான்ட்ஜென் இறந்ததற்கு, அதே எக்ஸ் ரே கதிர்வீச்சு தான் காரணம் என்பது இதில் மறக்க முடியாத சோகம்!

என்னுடைய மரணத்தைநானே நேரில் பார்ப்பதுபோல திகிலாக இருந்தது என்று எக்ஸ் ரே பற்றி ஆஸ்திரிய செய்தித்தாளில் கட்டுரை எழுதினார் ரான்ட்ஜென்.


Similar Threads: