ஆரோக்கியத்தின் அழகு நகத்தில் தெரியும்!
அறிவோம்
‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது பழமொழி. ‘ஆரோக்கியத்தின் அழகு நகத்தில் தெரியும்’ என்பது புதுமொழி. நகத்தின் நிறம் மற்றும் மாற்றங்களை வைத்தே உடலில் உள்ள நோய்களை கண்டுபிடிக்கலாம்! ‘‘நகங்கள் தொடர்ந்து உடைந்தாலோ, இயல்பான நிறம் மாறிக் காணப்பட்டாலோ, அதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

ஆனால், நகங்களில் காணப்படுகிற அந்த திடீர் மாற்றங்கள், உங்களுக்கு வரப்போகும் நோயின் அறிகுறிகளுக்கான எச்சரிக்கையாகவும் இருக்கலாம்’’ என்கிறார் சரும நல மருத்துவர் முருகுசுந்தரம். நகங்கள் பற்றிய பல ஆச்சரியங்களையும் அதிர்ச்சிகளையும் தொடர்ந்து அடுக்குகிறார் அவர்.
‘‘‘அடுத்தது காட்டும் பளிங்கு போல கெடுத்தது காட்டும் நகம்’ என்று புதுக்குறளே சொல்லலாம். ஒருவரின் நகங்கள் மிகவும் வெள்ளையாக ஸ்பூன் மாதிரியான குழிவுடன் இருந்தால் அவருக்கு ரத்தசோகை இருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம். நகத்தின் அடியில் காணப்படும் பிறை போன்ற அமைப்புக்கு ‘லுனுலா’ (Lunula) என்று பெயர்.

இதில் சிவப்புப் புள்ளிகள் காணப்பட்டால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருக்கலாம். ‘லுனுலா’ முழுமையாக வெள்ளையாக இருந்தால் அது மிகத் தீவிரமான ஒரு நோயின் அறிகுறியாகக்கூட இருக்கலாம்.

நகத்தின் மேல்பகுதி வழக்கமான நிறத்திலும் கீழ்ப்பகுதி வெள்ளையாகவும் காணப்பட்டால் அது கல்லீரல் நோயின் அறிகுறி. நகங்களில் வெள்ளைப்பட்டைகள் காணப்பட்டால் சிறுநீரக நோய்கள் வரும் என்று அர்த்தம். நகத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகள் தென்பட்டால் வெறும் சத்துக்குறைவாக இருக்கலாம் அல்லது ஆபத்தான வைரஸ் தாக்குதலாகவும் இருக்கலாம். புரதச்சத்து குறைபாடு இருந்தாலும் பாதி நகம் முழுக்க வெண்மையாக இருக்கும்.

கிளி மூக்கு போல நகங்கள் வீங்கிக் காணப்பட்டால் நுரையீரல் நோய்கள் இருக்கும். இதை ‘க்ளப்பிங் நெயில்ஸ்’ என்று அழைப்பார்கள். புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு இந்தக் குறைபாடு வரும். நகம் மஞ்சள் நிறமாகவோ, வெளிர் மஞ்சள் நிறமாகவோ காணப்பட்டால் மஞ்சள் காமாலையின் அறிகுறி. நகத்தில் புள்ளி புள்ளியாக குழிகள் காணப்பட்டால் ‘சோரியாசிஸ்’ எனப்படும் சரும நோய் ஏற்படும். நகம் உடைந்து போய் காணப்பட்டாலோ, நகம் தடித்து கரடு முரடாக காணப்பட்டாலோ பூஞ்சை தொற்று ஏற்பட்டு இருக்கும்.

நகங்களின் அடியில் எண்ணெய் விட்டதுபோல காணப்படும். இதற்கு ‘ஆயில் ட்ராப் சிண்ட்ரோம்’ என்று பெயர். இதுவும் சரும நோயான சோரியாசிஸின் ஆரம்ப அறிகுறியே. கால்சியம், வைட்டமின், இரும்புச்சத்து குறைபாடுகள் இருந்தாலும், நகம் உடைந்தோ, குறுக்கே கோடுகளுடனோ காணப்படும். சரும மருத்துவரை ஆலோசித்தே பிரச்னையை அறிய வேண்டும்.

சமையல் வேலைகள், பாத்திரம் கழுவுவது போன்று தண்ணீரில் அதிக நேரம் வேலை செய்பவர்கள், சரியாக உலரச் செய்யவில்லை எனில் பூஞ்சை தொற்று ஏற்படும். இதை அப்படியே விட்டால் பாக்டீரியா தொற்றும் சேர்ந்து கொள்ளும். ஓட்டலில் வேலை செய்பவர்கள் கைகளை சரியாக கழுவாமல் சமையல் செய்வதால், அங்கு சாப்பிடுபவர்களையும் பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்று தாக்கி, வாந்திக்கும் வயிற்றுப்போக்குக்கும் வழிவகுக்கும். சமையல் வேலை செய்பவர்கள் கைகளை கழுவிய பின் சுத்தமான துணி கொண்டு ஈரத்தைத் துடைத்த பிறகுதான், அடுத்த வேலையில் ஈடுபட வேண்டும்.

நகத்தில் கருப்பு கோடுகள் காணப்பட்டால் ஏதோ மச்சம் என நினைத்து இருந்து விடக்கூடாது. ‘சப்உங்குவல் மெலனோமா’ (Subungual melanoma) எனும் விரல்களில் வரும் அரிய வகை கேன்சராக கூட இருக்கலாம்.

இவ்வகை கேன்சர் வந்தால் நோயாளியின் ஆயுள் காலம் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் மட்டுமே என்பது அதிர்ச்சியூட்டும் செய்தி. போட்டோ பிரின்ட் ரசாயனத்தில் அதிக நேரம் வேலை செய்பவர்கள், தடயவியல் துறை நிபுணர்கள் போன்ற வர்களின் நகங்கள் பழுப்பாக மாற அதிக வாய்ப்புண்டு. இவர்கள் ஆரம்பத்திலேயே மருத்துவரைப் பார்ப்பது நல்லது.

ஆட்டோமொபைல் மெக்கானிக்குகள் பெட்ரோல் மற்றும் கார்பன் கரித்தூள் சூழலில் அதிகம் வேலை செய்ய வேண்டியிருக்கும். இவர்கள் கையுறை அணிந்து வேலை செய்வது அவசியம். உள்ளே துணியில் செய்த கையுறை அணிந்து அதன் மேலே ரப்பர் கையுறைகளை அணிவது நல்லது. இதன்மூலம் வியர்வை வந்தால் துணியே உறிஞ்சிக்கொள்ளும். நகங்களை கிருமிகளில் இருந்து பாதுகாக்கலாம். வேலை முடிந்தவுடன் சோப்பு போட்டு சுத்தமாகக் கழுவி விட வேண்டும்.

முடி சாயங்களில் உள்ள ‘பாராபினைலின் டையமின்’ (Paraphenylenediamine) எனும் வேதிப்பொருள் நக இடுக்கில் படிந்து புற்றுநோயை உருவாக்கும் அபாயம் கொண்டது. அதனால், தரம் குறைவான முடி சாயத்தைப் பயன்படுத்த வேண்டாம். அடிக்கடிக் கையை கழுவுவது கூட தவறுதான்! இதனால் நகங்களில் பூஞ்சை எளிதில் படியும். சில அழகு நிலையங்களில் நகங்களை வெட்டுகிறோம் என்ற பெயரில் நகத்தின் முக்கியமான கியூட்டிகிள் உயிர்ப் பகுதியை வெட்டி விடுகின்றனர்.

இப்படி செய்வது கிருமிகள் பரவ வழி வகுக்கும். அடிக்கடி நெயில் பாலீஷ் உபயோகிப்பதும் தவறு. 6 மாதங்களுக்கு ஒருமுறை ஆசைக்குப் போட்டுக்கொள்ளலாம். அடிக்கடி நெயில் பாலீஷ் போடுபவர்கள், பாலீஷை அகற்றுவதற்கு பாலீஷ் ரிமூவர் திரவத்தைப் போட்டு அகற்றுவார்கள். நெயில் பாலீஷை விட அதை அகற்றப் பயன்படும் திரவம் நகங்களுக்கு மோசமான விளைவுகளை தரக்கூடியது. அதனால், பாலீஷ் ரிமூவர் திரவத்தைப் பயன்படுத்தக் கூடாது’’ என்று எச்சரிக்கிறார்.

நெயில் பாலீஷை விட அதை அகற்றப் பயன்படும் திரவம் நகங்களுக்கு மோசமான விளைவுகளை தரக்கூடியது. அதனால், பாலீஷ் ரிமூவர் திரவத்தைப் பயன்படுத்தக் கூடாது...