அலட்சியம் தவிர்த்து அலர்ட் அலர்ட்
வருமுன் அறிவோம்
நீண்ட நாட்கள் நாம் சந்தோஷமாக வாழ நோயின்றி இருத்தல் முக்கியம். சில நோய்கள் வரும் முன்னரே பல அறிகுறிகளைக் காட்டும். அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல்,
உடலைக் கவனிப்பதற்கான அலாரமாக நினைத்து மருத்துவரை அணுகினால், ஆயுளும் ஆரோக்கியமும் நீடிக்கும்.

முகம், கால், கைகளில் வாதம்,தற்காலிக பார்வை குறைபாடு, தற்காலிக மறதி நோய் போன்றவற்றில் ஏதேனும் ஓர் அறிகுறி தென்பட்டால் மூளைத்தாக்கு நோய் வருவதற்கான சாத்தியம் உண்டு. உடனடியாக நரம்பியல் மருத்துவரை பார்ப்பது நல்லது.

குரலில் கரகரப்பு ஏற்பட்டு வாரக்கணக்கில் நீடித்தால், உங்கள் குரல்வளையில் கட்டி இருக்கலாம் என்பதற்கான எச்சரிக்கை. கரகரப்புடன் தொண்டையை அறுக்கும் இருமலும் தென்பட்டால் நுரையீரல் புற்றுநோயாகக் கூட இருக்கலாம். அலட்சியம் தவிர்த்து அலர்ட் ஆகுங்கள்.

எச்சில் துப்பும் போதோ, சிறுநீர் அல்லது மலம் கழிக்கும் போதோ ரத்தம் தென்பட்டால், உங்கள் உடலில் பிரச்னைக்குரிய கட்டி இருக்கலாம். உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

கண்களில் வலி, எரிச்சல், சிவந்து இருத்தல், மங்கிய நிலையில் பொருட்கள் தெரிவது, இரவில் சரியாக பார்வை தெரியாமல் இருப்பது போன்றவை கிளைகோமா என்ற கண் நோயின் அறிகுறிகள். ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் முழுப்பார்வையும் பறிபோகும் அபாயம் உண்டு.

45 வயதுக்கு பிறகு நெஞ்செரிச்சல் ஏற்படுவது, செரிமானக் கோளாறு, நெஞ்சில் பிடிப்பு, வலி போன்றவை,உங்களுக்கு இதய நோய் வருவதற்கான ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம். உடனடியாக உங்கள் இதய நலத்தை பாதுகாக்க வேண்டிய நிலையில் உள்ளீர்கள்.