காது குடையலாமா?
கேளுங்களேன்
அடிக்கடி காதை சுத்தம் செய்வதும் பிரச்னைதான்... சுத்தம் செய்யாமலே விட்டு வைத்திருந்தாலும் சிக்கல்தான்!உடலில் ஏற்படும் அழுக்கு, வியர்வை, துர்நாற்றத்தை போக்கி, சுறுசுறுப்பாகச் செயல்படுவதற்காகவே தினமும் குளிக்கிறோம். அதேபோன்று, நமது காதின் வெளிப்பகுதியில் மஞ்சள் நிறத்தில் மெழுகு சுரப்பதையும் சுத்தம் செய்ய வேண்டும். அப்படி சுரக்கும் மெழுகு கூட ஒரு வகையில், நம் ஆரோக்கியத்துக்கு நல்லதுதான்.

உண்மையில் காதில் பரவும் பாக்டீரியா மற்றும் காளான்களை மெழுகு அழிக்கிறது. கிருமிகள் அதிகரிக்காமல் தடுக்கும் ஒரு வகை மருந்தாக மெழுகு இருக்கிறது. சிலருக்கு காதில் அதிகமாக மெழுகு சேரும். அவர்கள் அதனை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருப்பார்கள். சிலர் தினசரி காதில் ஏற்படும் மெழுகை ஒரு வேலையாகவே சுத்தம் செய்வார்கள்.

இது நன்மையா? தீமையா? எப்படிச் சுத்தம் செய்வது?

தினசரி நாம் காதில் சுரக்கும் மெழுகை சுத்தம் செய்வதனால் மட்டும் மெழுகு குறையாது. அதற்காக காதை சுத்தம் செய்யாமல் இருப்பதனாலும் பிரச்னைகள் உருவாகும். மெழுகை சுத்தம் செய்யாமல் இருப்பவர்களுக்கு, என்றைக்காவது ஒருநாள் முக்கியமான இடத்தில் இருக்கும் போதுதான் காதில் பயங்கரமாக ‘முணுமுணு’ என அரிப்பு கிளம்பும்.

அப்போது, கையில் எது கிடைக்கிறதோ, அதைக் கொண்டு காதை சுத்தம் செய்வார்கள். ஊக்கு, கொண்டை ஊசி, தீக்குச்சியின் கீழ்ப்பகுதி, பென்சிலின் அடிப்பகுதி என பலவற்றையும் காதில் போட்டு குடைவார்கள். இதுபோன்ற பொருட்கள் நடுக்காது வரை நுழைவதால், காயங்கள் ஏற்பட்டு தொற்றுக்கிருமிகள் பரவ வாய்ப்பு உள்ளது.

காதுக்கு எந்தப் பாதிப்பும் இன்றி பொறுமையாகவும் மென்மையாகவும் சுத்தம் செய்ய வேண்டும். தினமும் குளித்து விட்டு வெளியே வந்தவுடன், டவல் அல்லது கைக்குட்டையின் நுனியை வைத்து சுத்தம் செய்யலாம். அது குளிக்கும் போது காதினுள் செல்லும் தண்ணீரை வெளியே கொண்டு வரும். பாதுகாப்பான முறையில் தரமான பட்ஸ் கொண்டு தேவையான போது சுத்தம் செய்வதே நல்லது.

எப்போது டாக்டரை சந்திக்க வேண்டும்?காதில் வலி, சீழ் வடிவது, இரைச்சலாக இருப்பது, காது சரியாக கேட்காமல் இருப்பது போன்ற அறிகுறிகள் ஏதும் இருந்தால், உடனடியாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.


Similar Threads: