நாள்பட்ட மூச்சுக் குழாய் அடைப்பு நோய்
(Chronic obstructivepulmonary disease (COPD)
நாம் சுவாசிக்கும் காற்று, மூச்சுக் குழாய் வழியாக நுரையீரலை அடைகிறது. அங்கு, காற்றில் உள்ள ஆக்சிஜன் பிரிக்கப்பட்டு, ரத்தத்தில் கலக்கிறது. மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு, சுவாசித்தல் சிரமமாகும் பிரச்னையே, நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய். அடுத்த 20 ஆண்டுகளில் இரண்டாவது மிகப் பெரிய உயிர்க்கொல்லி நோய் இதுவாகத்தான் இருக்கும் என்று மருத்துவர்கள் கணித்துள்ளனர்.

அறிகுறிகள்:
ஆரம்பநிலையில் எந்த அறிகுறிகளும் தெரியாது. நோயின் பாதிப்பு முற்றிய நிலையில்தான் அறிகுறிகள் வெளிப்படும்

மூச்சு விடுவதில் சிரமம்

இளைப்பு (வீசிங்), நடந்தால் அல்லது மாடி ஏறினால் இளைப்பு அதிகமாகும்

நெஞ்சில் இறுக்கம்

காலையில் எழுந்திருக்கும்போது, நுரையீரலில் அதிக அளவில் சளி சேர்ந்திருப்பதால், தொண்டையில் அடைப்பு

தொடர் இருமல்

சளி வெள்ளை, மஞ்சள் அல்லது இளம் பச்சை நிறத்தில் வெளிப்படுதல்

உதடு மற்றும் நகங்கள் நீல நிறமாக மாறுதல்

அடிக்கடி நுரையீரல் நோய்த் தொற்று ஏற்படுதல்

ஆற்றல் இல்லாத உணர்வு

கடைசிக் கட்டத்தில் உடல் எடை இழப்பு

காரணம்:
இந்த நோய்க்கு, சிகரெட் புகையே முக்கியக் காரணமாக இருக்கிறது.

வளரும் நாடுகளில் சமையலுக்கு விறகு அடுப்பைப் பயன்படுத்தும் பெண்களுக்கும் இந்த நோய் வருகிறது.

மரபியல்ரீதியாகவும் இந்தப் பாதிப்பு ஏற்படலாம்.

ஆஸ்துமா நோயாளி சிகரெட் புகைக்கும்போது, அவருக்கு இந்த நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகம்.

பாதிப்பு:
நாள்பட்ட மூச்சுக் குழாய் அடைப்பு நோய் வந்தவர்களுக்கு ஏற்படும் மற்ற பாதிப்புகள்
காற்று கிடைக்காமல் நுரையீரல் பெரிதாவது
நுரையீரல் நோய்த் தொற்று
உயர் ரத்த அழுத்தம்
இதய நோய்கள்
நுரையீரல் புற்றுநோய்
மன அழுத்தம்
கண்டறிய...
ஸ்பைரோமெட்ரி பரிசோதனை மூலம் நுரையீரலின் செயல்திறன் கண்டறியப்படும். இதன் மூலம் நுரையீரலுக்கு எவ்வளவு காற்று செல்கிறது, என்ன வேகத்தில் செல்கிறது என்பதைக் கண்டறியலாம். தவிர, நெஞ்சக எக்ஸ்ரே, சி.டி ஸ்கேன் மூலமாகவும் கண்டறியலாம்.
தவிர்க்க:
மற்ற நோய்களைப்போல் அல்லாமல், இது ஏன் ஏற்படுகிறது என்பது தெளிவாகத் தெரியும். எனவே, சிகரெட் புகைப்பதை நிறுத்த வேண்டும்.
ஒருவர் புகைத்துவிடுகின்ற புகையை சுவாசிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
புகை நிறைந்த சூழலைத் தவிர்க்க வேண்டும்.
வேலை செய்யும் இடத்தில் புகை சூழலைத் தவிர்க்க முடியாதவர்கள், உரிய தடுப்பு நடவடிக்கை எடுத்துக்கொள்வது அவசியம்.
விறகு அடுப்பைத் தவிர்க்க வேண்டும்.
அடுப்புப் புகை, சமையல் அறையில் தங்காமல் வெளியேறும் வசதி வேண்டும்.
காலையில் மூச்சுப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
இந்த நோயைக் குணப்படுத்த முடியாது. ஆரம்பநிலையில் கண்டறிந்தால், பாதிப்பு ஏற்படுவதைக் கட்டுப்படுத்தலாம். நோய் மேலும் வளரவிடாமல் தடுக்க, இன்ஹேலர் பரிந்துரைக்கப்படும். சத்தான உணவு, நோய் எதிர்ப்புச் சக்தி தரும் உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம்.

Similar Threads: