Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree97Likes

Heart Care- இதயத்தை காப்போம்


Discussions on "Heart Care- இதயத்தை காப்போம்" in "General Health Problems" forum.


  1. #21
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    அமைதியான ஆட்கொல்லியை முறியடிக்கலாம்




    அமைதியான ஆட்கொல்லி நோயைப் பற்றி தெரியுமா? அமைதியாக இருந்துகொண்டு திடீரென ஒருவரை ஆபத்தான நிலைக்குத் தள்ளிவிடக்கூடிய நோய் இது. சில பெரிய நோய்களுக்கெல்லாம் இந்த நோய்தான் கதவைத் திறந்துவிடும். அதுதான் உயர் ரத்த அழுத்த நோய் அல்லது ரத்தக்கொதிப்பு.

    மாரடைப்பு, பக்க வாதம், மூளை ரத்தக் குழாய் வெடிப்பு, அறிவுத்திறன் குறைபாடு, சிறுநீரகம் செயலிழத்தல் உள்ளிட்ட பெரிய நோய்களுக்குச் சிவப்பு கம்பளம் விரிக்கும் இந்த உயர் ரத்த அழுத்த நோயை எப்படித் தடுப்பது? நோய் வந்தவர்கள் எப்படிக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது? முதலில் நோயைச் சரியாகப் புரிந்துகொள்வதுதான் சிறந்த வழி.

    எப்படி வருகிறது?

    # மனித உடலில் உள்ள ரத்தக் குழாய்கள் வழியாக ரத்தம் ஓடுகிறது. அப்படி ரத்தம் இதயத்துக்கு வரும்போது குறிப்பிட்ட வேகத்தில் வரும்.

    இதயத்திலிருந்து வெளியே செல்லும்போது வேறொரு வேகத்தில் செல்லும். இந்த வேகத்துக்குப் பெயர்தான் ரத்த அழுத்தம். பொதுவாக ஒருவருக்கு ரத்த அழுத்தம் 120/80 மி.மீ. என்ற பாதரச அளவில் இருந்தால், அது இயல்பானது, பிரச்சினையில்லை.

    # 120 என்பது சிஸ்டாலிக் அழுத்தம். அதாவது, இதயம் சுருங்கி ரத்தத்தை உடலுக்குத் தள்ளும்போது ஏற்படுகிற அழுத்தம்.

    # 80 என்பது டயஸ்டாலிக் அழுத்தம். அதாவது, இதயம் தன்னிடம் இருந்த ரத்தத்தை வெளியே அனுப்பிய பிறகு, உடலில் இருந்து வருகிற ரத்தத்தைப் பெற்றுக்கொள்ளும். அப்போது ஏற்படுகிற ரத்த அழுத்தம் முன்னதைவிட குறையும்.

    # ரத்தம் அழுத்தம் என்பது எல்லோருக்கும் 120/80 மி.மீ. பாதரச அளவில் இருக்காது. எனவே, 100/70 மி.மீ. முதல் 140/90 மி.மீ.வரை உள்ள ரத்த அழுத்தத்தை ‘இயல்பானது’ என்று உலகச் சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளது.

    # ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதில் சிறுநீரகங்கள், அட்ரினலின் சுரப்பிகள், மூளை, நரம்புமண்டலம் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தச் சங்கிலி அமைப்பில் சிக்கல் ஏற்பட்டால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

    என்ன செய்யலாம்?

    # ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், ரீ ஃபைன்டு ஆயில் ஆகியவற்றைக் குறைந்த அளவில் பயன்படுத்துவது நல்லது. பாமாயில் வேண்டாம்.

    # ஆவியில் வேக வைத்த உணவு வகைகள் மிகவும் ஏற்றவை. எப்பொழுதாவது கோழிக்கறி அல்லது மீன் குழம்பைச் சாப்பிடலாம்.

    # காபி, தேநீருக்குப் பதிலாகப் பழச்சாறு, லெமன் டீ, கிரீன் டீயைக் குடிக்கலாம். இவற்றில் நிறைந்துள்ள ஆண்டிஆக்ஸிடன்ட் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

    # ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு நார்ச்சத்து உணவுகள் மிகவும் ஏற்றவை. இவை ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். அத்துடன் கொழுப்பைக் குறைக்கும், நீரிழிவைக் கட்டுப்படுத்தும், எடையையும் குறைக்கும்.

    # கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற முழு தானியங்கள், தக்காளி, கொய்யா, தர்பூசணி, மாதுளை, பீன்ஸ், பட்டாணி, பயறு வகைகள், புதினா, கொத்தமல்லி ஆகியவற்றில் நார்ச்சத்து அதிகம்.

    # பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் ஆகிய தாதுகள் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்பதால் பால், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, வாழைப்பழம், சோயாபீன்ஸ், உளுந்து, கிழங்குகள், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பருப்புக் கீரை, முருங்கைக் கீரை, இளநீர் ஆகியவற்றைத் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

    # ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்குப் பூண்டு மிகவும் ஏற்றது. பூண்டில் உள்ள சத்துகள் ரத்தக் குழாயை விரிவடையச் செய்கின்றன. தமனிகளில் படியும் கால்சியம் தாதுக்களையும் தடுக்கின்றன.

    அறிகுறிகள்
    # தலை சுற்றும்போது மட்டும், உயர் ரத்த அழுத்தம் இருக்குமோ என்று பலரும் சந்தேகப்படுவார்கள். அது மட்டுமல்ல தலைவலி, மயக்கம், வாந்தி, மூக்கில் ரத்தக்கசிவு, நடக்கும்போது மூச்சு வாங்குதல், நெஞ்சு வலி, காலில் வீக்கம், களைப்பு, படபடப்பு ஆகியவையும் உயர் ரத்த அழுத்தத்துக்கான அறிகுறிகள்தான்.

    # குடும்பப் பின்னணியில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களும், 30 வயதைக் கடந்தவர்களும் தொடர்ந்து உயர் ரத்த அழுத்த அளவை கண்காணித்துவர வேண்டும்.

    # உயர் ரத்த அழுத்தம் இருப்பதை ஆரம்பத்திலேயே தெரிந்துகொண்டால் மாத்திரை இல்லாமல் உணவுப் பழக்கம் மூலம் சமாளிக்க முடியும்.

    # அதேநேரம், இதயம், மூளை, சிறு நீரகம், கண் எனப் பிற உறுப்புகளைப் பாதிக்கும் தன்மை உயர் ரத்த அழுத்தத்துக்கு இருப்பதால், முறையான சிகிச்சை அவசியம்.

    ஆரோக்கியத்துக்கான பயிற்சிகள்

    # ரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கத் தினசரி 40 நிமிடங்கள் வேகமாக நடக்க வேண்டும். வாரத்துக்கு மொத்தமாக ஒன்றரை மணி நேர நடைப்பயிற்சியாவது தேவை.

    # தினமும் இரவில் குறைந்தபட்சம் 6 மணி நேரத்துக்குக் குறையாமல் தூக்கம் அவசியம். மனதுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்வதில் ஈடுபடலாம். மன அழுத்தம் கூடாது. பதற்றத்தையும் கோபத்தையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.

    # மூச்சுப் பயிற்சி, யோகா போன்ற தியானம் சார்ந்த பயிற்சிகளைத் தினசரி செய்ய வேண்டும். இந்தப் பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைக்கும்.
    தவிர்க்க வேண்டியவை

    # உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு எதிரியே சமையலில் பயன்படுத்தப்படும் உப்புதான். தினமும் குறைந்தபட்சமாக 5 கிராம் உப்பு பயன்படுத்தினாலே போதும். உப்பு அதிகம் நிறைந்த ஊறுகாய், கருவாடு, அப்பளம், வடகம் போன்ற உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

    # பாப்கார்ன், முந்திரிப் பருப்பு, புளித்த மோர் போன்ற நொறுக்குத்தீனிகளையும், பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவு வகைகள், துரித உணவு, செயற்கை வண்ண உணவு வகைகளையும் ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

    # கொழுப்புச் சத்து அதிகமுள்ள இறைச்சி வகைகள், முட்டையின் மஞ்சள்கரு, தயிர், நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம், கேக், இனிப்பு, சாக்லெட் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.

    # எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவு வகைகளும் ஆகாது.

    # உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பைப் புகைப் பழக்கம் அதிகரிக்கும். எனவே, புகை பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

    # மது அருந்துவதையும் தவிர்க்க வேண்டும். மது அருந்தும் ஒருவருடைய ரத்த அழுத்தம், மது அருந்தாதவரைவிட இரு மடங்கு அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.


    Sponsored Links
    Last edited by chan; 17th May 2015 at 04:38 PM.
    jv_66 and Dangu like this.

  2. #22
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு தேவை?

    கௌசல்யா நாதன்


    உலக ரத்தக் கொதிப்பு நாள் மே 17 |

    ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்னும் பழமொழியைச் சொல்லிச் சொல்லி, சாப்பிடும் எல்லாப் பண்டங்களிலும் உப்பைச் சேர்த்துவிடுகிறோம். ஆனால், ``உப்பைத் தின்னவன் தண்ணிய குடிப்பான்; தப்பை செஞ்சவன் தண்டனை பெறுவான்’’ என்றொரு பழமொழியும் இருக்கிறது. உடலில் உப்பின் அளவு கொஞ்சம் அதிகரித்தாலும் பிரச்சினைதான்.
    நம் உடலில் உப்பின் அளவு கூடுவதாலும் குறைவதாலும் பல்வேறு விளைவுகள் ஏற்படுகின்றன. இது குறித்துச் சென்னையைச் சேர்ந்த உடல் மூப்பு கட்டுப்பாட்டு (Anti Aging) நிபுணர் டாக்டர் கௌசல்யா நாதன் விளக்குகிறார்:

    எங்கே இருக்கிறது?

    அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், கீரைகள் எல்லாவற்றிலுமே இயற்கையான உப்பு வகையில் ஒன்றான சோடியம் குளோரைடு (சமையல் உப்பு) கலந்திருக்கிறது. இது போதாதென்று ரெடிமேட் தோசை மாவு போன்றவற்றில் பேக்கிங் சோடாவைப் போடுகிறார்கள். பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளான பர்கர், பீட்ஸா போன்றவற்றிலும் அதிக உப்பைச் சேர்க்கிறார்கள். இது உடலுக்குத் தீங்கை விளைவிக்கும்.

    மோனோ சோடியம் குளூட்டமேட், சோடியம் நைட்ரேட், சோடியம் சாக்கரின், சோடியம் பைகார்பனேட், சோடியம் பென்சாயேட் போன்றவை உப்பின் பல வகைகள். இதில் ஏதாவது ஒன்று, நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களிலும் சாஸ்களிலும் நிரம்ப இருக்கிறது.

    அதிக உப்பைக் கொண்ட வடாம், வத்தல், மோர் மிளகாய் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. அயோடின் கலந்த டேபிள் சால்ட்டைவிட, சாப்பாட்டில் கல் உப்பைப் பயன்படுத்துவதே சிறந்தது.

    பிரச்சினைகள்
    உடலில் உப்பு அதிகம் சேர்வதால் சிறுநீரகக் கற்கள் உருவாகும். நீரிழிவு நோய்க்குக் காரணமாகும். உயர் ரத்த அழுத்தத்துக்கு உப்பே முழு முதல் காரணம்.

    நான்கு பேர் இருக்கும் ஒரு குடும்பத்துக்கு ஒரு நாளைக்குத் தேவையான அதிகபட்ச உப்பின் தேவை 4 டீஸ்பூன்தான். ஆனால், ஒவ்வொரு உணவிலும் நான்கு டீஸ்பூன் உப்பைக் கொட்டினால், அதனால் எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படும் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள்.

    மனிதன் ஆரோக்கியமாக வாழ, ஒரு நாளைக்கு 2 கிராம் அளவுக்கு மேல் உப்பு தேவையில்லை. உப்பைக் குறைக்கக் குறைக்க அதற்கேற்ப உங்களுடைய படபடப்பும் குறைவதை உணரலாம்.
    கட்டுப்படுத்தலாம்

    பழங்கள், காய்கறிகளில் இயல்பிலேயே அதிகமாக இருக்கும் பொட்டாசியம் சத்து உடலில் உப்பு சேர்வதைக் கட்டுப்படுத்துகிறது. அதனால், இவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். இதிலிருந்து பெறப்படும் வைட்டமின் - பி, சிறுநீரகச் செயல்பாட்டைச் சீராக்கி, ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் இருப்பதற்கு உதவும்.

    உப்பின் அதிகப்படியான பயன்பாடு, உடலுக்குப் பாதிப்பைத் தருவதைப் போன்றே, அயோடின் சத்து குறைபாட்டாலும் சில வகையான பாதிப்புகள் மனிதர் களுக்கு ஏற்படும். இதில் முக்கிய மானது, முன் கழுத்துக் கழலை நோய். புத்திக்கூர்மை இல்லாமல் மந்தமாக இருக்கும் நிலைக்கும், உடலில் போதுமான அளவுக்கு அயோடின் இல்லாததே காரணம்.

    தினமும் 30 நிமிடங்கள் வேகமாக நடப்பது, ஓட்டப் பயிற்சி, நீச்சல் போன்றவற்றைச் செய்வதன்மூலம் உடலில் உப்பு தங்காமல் பார்த்துக்கொள்ளலாம். வியர்வையின் மூலமாக உப்பு அதிகம் வெளியேறுகிறது. சிறுநீரகத்துக்கு வேலைப் பளுவும் குறைகிறது. இந்த நடைமுறைகளைக் கடைப்பிடித்தால், உடலில் உப்பு ஏற்படுத்தும் பிரச்சினைகளையும் கட்டுப்படுத்தலாம்.

    Last edited by chan; 17th May 2015 at 04:42 PM.
    jv_66, kamatchi devi and Dangu like this.

  3. #23
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    உங்களுக்கு 'பிரஷர்' இருக்கிறதா? மே 17 சர்வதேச உயர்ரத்த அழுத்த விழிப்புணர்வு தினம்


    உங்களுக்கு முப்பது வயது ஆகிவிட்டதா? உங்கள் அப்பா, அம்மா, அண்ணன், தங்கை யாருக்காவது ரத்தக் கொதிப்பு உள்ளதா? நீங்கள் வீட்டிலும் அலுவலகத்திலும் பரபரப்பாகப் பணி செய்பவரா? புகைபிடிப்பவரா? மதுப் பழக்கம் உண்டா? உடல் பருமன் உள்ளதா? ரத்தத்தில் கொழுப்பு அதிகமா? சர்க்கரை நோய் இருக்கிறதா?மனதில் அமைதி இல்லையா? எதற்கெடுத்தாலும் எரிச்சல்படுகிறீர்களா? அடிக்கடி கோபம் வருகிறதா? இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு 'ஆம்' என்று பதில் சொன்னாலும் இன்றைக்கே டாக்டரிடம் சென்று உங்கள் ரத்த அழுத்தத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.

    சரியான ரத்த அழுத்தம்:
    ஒரு சராசரி நபருக்கு 120/80 மி.மீ.பாதரச அளவு என்பது மிகவும் சரியான ரத்த அழுத்தம் ஆனால் இது அனைவருக்குமே சொல்லி வைத்தது போல் 120/80 என்று இருக்காது. ஒரே வயது தான் என்றாலும் ஆளுக்கு ஆள் உடல் எடை உயரம் போன்றவை வேறுபடுவது போல ரத்த அழுத்தமும் சற்று வேறுபடலாம். ஆகவேதான் உலக சுகாதார நிறுவனம் ஒரு நபருக்கு 100/70 மி.மீ. முதல் 140/90 மி.மீ.வரை உள்ள ரத்த அழுத்தத்தை 'சரியான ரத்த அழுத்தம்' என்று வரையறை செய்துள்ளது.

    உயர்ரத்த அழுத்தம் எது?
    ஒருவருக்கு ரத்த அழுத்தம் 140/90 க்கு மேல் இருந்தால் அவருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளதாகக்கணிக்கிறார்கள் மருத்துவர்கள். பரம்பரை, உடல்பருமன், முதுமை, முறையற்ற உணவு முறை, உடற்பயிற்சி இல்லாதது, மன அழுத்தம், புகைபிடித்தல், மது அருந்துதல், சிறுநீரகப் பாதிப்பு, சர்க்கரை நோய், அட்ரீனல் தைராய்டு கோளாறு போன்ற பல காரணங்களால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. என்றாலும் இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கைச் சூழலில் நாம் பின்பற்றும் மேற்கத்திய உணவுப் பழக்கமும் மன அழுத்தமுமே இதற்கு முக்கியக் காரணங்கள். விரைவு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கை உணவுகள் எனக் கொழுப்பு மிகுந்த உணவுகளைச் சாப்பிடுவதால் இளமையிலேயே உடல் பருமன் வந்து அவதிப்படுகிறவர்கள் நம்மிடம் அதிகம். இது உயர்ரத்த அழுத்த நோய்க்குப் பாதை அமைக்கிறது. இன்றைக்கு பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது மன அழுத்தம். இது உடலில் ரத்த அழுத்தத்தை நிர்வாகிக்கிற பலகாரணிகளைப் பாதிக்கிறது. இதன் விளைவால் இளமையிலேயே ரத்த அழுத்தம் அதிகரித்துவிடுகிறது.

    அறிகுறிகள் என்ன?
    தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம், சோர்வு, மூக்கில் ரத்தக் கசிவு ஆகியவை இந்த நோய்க்குரிய அறிகுறிகள். ஆனால் பெரும்பாலோருக்கு இந்த அறிகுறிகள் எதுவும் வெளியில் தெரியாது. இவர்கள் தான் மிகுந்த ஆபத்தானவர்கள். இந்த நோயினால் இதயம், சிறுநீரகம்,மூளை, கண்கள் பாதிக்கப்படும் போது சில அறிகுறிகள் தோன்றும். அவற்றுக்காக மருத்துவரிடம் செல்வார்கள். அப்போது உயர் ரத்த அழுத்த நோய் இருப்பது தெரியவரும்.

    பாதிப்புகள் என்ன?
    இந்த நோயைச் சரியாகக் கவனிக்காத நிலையில் இதயம் வீங்கிவிடும். மாரடைப்பு, பக்கவாதம் வந்து சேரும். பார்வை பாதிக்கப்படும். சிறிது சிறிதாகச் சிறுநீரகங்கள் கெட்டுப் போகும். இந்த ஆபத்துகளை எல்லாம் தவிர்க்க வேண்டுமென்றால் 30 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மாதம் ஒரு முறை ரத்த அழுத்தம் பார்த்துக் கொள்ளவேண்டும். ரத்தக் கொதிப்புக்கு முதல் எதிரி சமையல் உப்பு. தென்னிந்தியாவில் தான் உப்பு மிகுந்த உணவை உண்ணும் பழக்கம் அதிகமாக உள்ளது. தினமும் 20 கிராம் வரை உப்பை உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். நாளொன்றுக்கு 5 கிராம் உப்பு போதுமானது. உப்பு நிறைந்த உணவுப் பொருள்களான ஊறுகாய் கருவாடு, அப்பளம், வடாம், சிப்ஸ், பாப்கார்ன், முந்திரிப் பருப்பு, புளித்த மோர் போன்றவற்றை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.

    கொழுப்பு ஆகாது:
    கொழுப்புச் சத்து அதிகமுள்ள இறைச்சி, முட்டை, தயிர், நெய், வெண்ணெய், பாலாடை, ஐஸ்கிரீம், சாஸ் மற்றும் சாக்லேட், சோடா உப்பில் தயாரிக்கப்பட்ட உணவுகள் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. பூரி, அப்பளம், வடை, சமோசா, முறுக்கு, பஜ்ஜி, வறுவல் போன்ற எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகள் வேண்டவே வேண்டாம். தேங்காய் எண்ணெயும் பாமாயிலும் ஆகவே ஆகாது. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றைக் கூட மிகக்குறைந்த அளவில் தான் உபயோகிக்க வேண்டும். அசைவப்பிரியர்கள் வாரம் ஒருமுறை கோழிக்கறி அல்லது மீன்சாப்பிட்டுக் கொள்ளலாம்.

    நார்ச்சத்து முக்கியம்:
    நார்ச்சத்து ரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் கரைக்கும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் .உடல் எடையையும் குறைக்கும். இதனால் உயர் ரத்த அழுத்தம் மட்டுமல்ல மாரடைப்பு வருவதும் தடுக்கப்படும். கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற முழுதானியங்கள், கொய்யா, தர்ப்பூசணி, மாதுளை போன்ற பழங்கள், பீன்ஸ், பட்டாணி போன்ற பயறுகள், புதினா, கொத்த மல்லி போன்ற பச்சை இலைகள் ஆகியவற்றில் நார்ச்சத்து அதிகம். இவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ரத்த அழுத்தம் சரியாக இருக்க வேண்டுமானால் உடல் எடையைப் பராமரிக்க வேண்டியது மிக முக்கியம். தினமும் உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். குறிப்பாக 40 நிமிடங்கள் வேகமாக நடப்பது நல்லது. புகைபிடிக்காதீர்கள். மது அருந்தாதீர்கள்.

    தூக்கமும் ஓய்வும் அவசியம்:
    தினமும் குறைந்தது 6மணி நேரம் தூக்கம் அவசியம். வாரம் ஒரு நாள் ஓய்வு அவசியம். ஓய்வு என்பது உடலுக்கு மட்டுமல்ல; உள்ளத்துக்கும் தான். ஆகவே வார இறுதியைக் குடும்பத்துடன் கொண்டாடுங்கள். தினமும் யோகாசனம், தியானம் செய்வதை வழக்கப்படுத்திக் கொண்டால் மன அமைதி கிடைக்கும். மனதுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்தால், மனம் லேசாகி மன அழுத்தம் குறையும். அலுவலக நேரங்களில் தேவையற்ற பரபரப்பைக் குறைத்துக் கொள்வது நல்லது. அடிக்கடி கோபப்படுவதாலும், உணர்ச்சிவசப்படுவதாலும், சாதிக்கப் போவது ஒன்றுமில்லை. கோபத்தைக் குறைத்து உணர்வுகளைத் தளர்த்தி மனதை லேசாக்கிக் கொள்ளப்பழகிக் கொள்ளுங்கள்.
    - டாக்டர்கு. கணேசன், பொதுநலமருத்துவர் ராஜபாளையம்


    Last edited by chan; 18th May 2015 at 07:55 PM.
    jv_66 and Dangu like this.

  4. #24
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    ஹார்ட் அட்டாக்!
    `ஹார்ட் அட்டாக்' எனும் மாரடைப்பு ஏற்படுவது பற்றியும், அந்த இக்கட்டான சூழலில் செய்துகொள்ள வேண்டிய சுயமுதலுதவி குறித்தும் இங்கே நிறைய கேள்விகள் இருக்கின்றன நம்மில் பலரிடமும். இவற்றுக்கான பதில்களாக நிறைய தகவல்கள் இங்கே உலவுகின்றன, குறிப்பாக 'வாட்ஸ்அப்’-ல்! மாரடைப்பு பற்றிய அடிப்படைத் தகவல்களையும், ஃபார்வேர்டு மெசேஜ்களின் உண்மைத் தன்மையும் பற்றி சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதய நோய் மருத்துவ நிபுணர் தியாகராஜ மூர்த்தி.

    நெஞ்சு வலியும் மாரடைப்பும் ஒன்றா?

    நம் இதயம் ஒரு தசை. நிமிடத்துக்கு 70 - 80 முறை துடிக்கும் இந்த தசைப் பகுதிக்கு ரத்தத்தைக் கடத்தும் மூன்று முக்கிய ரத்தக் குழாய்களில் சிதைவு ஏற்பட்டால், ரத்தக் கட்டி உருவானால் அல்லது இன்னும் சில காரணங்களால் இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுவதுதான், மாரடைப்பு.

    நெஞ்சு வலியும் மாரடைப்பும் ஒன்றல்ல. தசைப் பிடிப்பு... நெஞ்சு எலும்பு, உணவுக் குழாயில் பிரச்னை போன்ற பல காரணங்களால் நெஞ்சு வலி ஏற்படலாம். அது மாரடைப்பல்ல. சாதாரண நெஞ்சு வலி, தாங்க முடிகிற அளவில் இருக்கும். மாரடைப்பின்போது நெஞ்சில் மிக அதிக வலி இருக்கும். அந்த வலி இடது கையில் பரவும்; அதிகமாக வியர்க்கும்; மூச்சடைக்கும்; மயக்கம், உச்சபட்சமாக மரணம்கூட ஏற்படும்.

    பொதுவாக, முதல் அட்டாக்கில் 10 - 20 சதவிகிதம் பேர் மருத்துவமனைக்கு வருவதற்குள்ளாகவே இறந்துவிடுகிறார்கள். அந்தளவுக்கு அது தீவிரமாக இருக்கும்.

    சைலன்ட் அட்டாக் வருமா?
    10 வருடங்களுக்கு மேல் சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு சைலன்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம். இவர்களுக்கு நரம்புகள் பாதிப்படைந்திருக்கும் என்பதால், மாரடைப்பு வந்தாலும் நெஞ்சு வலி தெரியாது. வாந்தி உணர்வு, மூச்சு விட சிரமம் மற்றும் வியர்வை போன்ற அறிகுறிகளை உணரலாம்.

    யாருக்கெல்லாம் மாரடைப்பு வரலாம்?
    பெரும்பாலும் நடுத்தர வயதினர் மற்றும் முதியவர்களையே இலக்காகக் கொண்டிருந்த மாரடைப்பு, இப்போது 20+ வயதினருக்கேகூட ஏற்படுகிறது. மரபு, சர்க்கரை நோய், புகைப்பழக்கம், மனஅழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் போன்றவை மாரடைப்பின் காரணி களாகின்றன.

    தேங்காய் எண்ணெயில் சமைத்தால் ஹார்ட் அட்டாக் வருமா?
    இது தவறான தகவல். தேங்காய் எண்ணெய், குறிப்பாக வெர்ஜின் தேங்காய் எண்ணெய் நமது உடலுக்கு நல்லதே. இதய நோயாளிகள் காய், பழங்கள் அதிகமாகவும், சாதத்தைக் குறைத்தும், எண்ணெய் உணவுகள், வெண்ணெய், நெய் போன்றவற்றைத் தவிர்த்தும் சாப்பிட வேண்டியது அவசியம். விலை குறைவாகக் கிடைக்கும் மத்தி மீனில் (Sardine) இதயத்துக்கு ஆரோக்கியம் தரும் `ஒமேகா 3’ ஆயில் இருக்கிறது என்பதால், அதற்கு முக்கியத்துவம் கொடுத்துச் சாப்பிடலாம்.

    மாரடைப்பு வந்தால் சுயமுதலுதவி?

    உதவிக்கு ஆள் இல்லாதபோது அட்டாக் வந்தால் மூச்சை இழுத்து விடவும், வேகமாக இருமவும் என்ற செய்தி வாட்ஸ்அப்-ல் பரவுகிறது. ஆனால், அது நிரூபிக்கப்படாதது. எனவே, இதுபோன்ற சுய முயற்சிகளில் ‘கோல்டன் ஹவர்’ எனும் அந்த பொன்னான நேரத்தை வீணாக்காமல், உடலில் மாற்றத்தை உணரும் நொடிகளிலேயே உடனடியாக மற்றவர்கள் உதவியை நாட வேண்டும். கையில் எப்போதும் ஆம்புலன்ஸ் நம்பர் வைத்திருப்பதுடன், சில நொடிகள்கூட தாமதப்படுத்தாமல் விரைவாக மருத்துவமனை செல்ல வேண்டும்.

    ரெட் ஒயின் இதயத்துக்கு நல்லதா?
    ஃபிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் சிவப்பு திராட்சைகள் மூலம் தயாரிக்கப்படும் ரெட் ஒயின், ஒரு கிளாஸ் வரை மட்டும் குடித்தால் இதயத்துக்கு நல்லது. ஆனால், நம்மூரில் கிடைப்பது தரமற்ற ஒயின் என்பதால் தவிர்ப்பது நல்லது.

    ஹார்ட் அட்டாக் நோயாளிகள் பையிலேயே வைத்திருக்க வேண்டிய மாத்திரைகள்?
    ASPIRIN, ATORVASTATIN, CLOPITAB - இவை இதய நோயாளிகள் கையுடன் வைத்திருக்க வேண்டிய மாத்திரைகள் என்றும், ஹார்ட் அட்டாக் வந்த நேரத்தில் உடனடியாக இவற்றைச் சாப்பிட்டால், மூன்று மணி நேரத்துக்கு ஆபத்தில்லை என்றும் ஒரு செய்தி பரவலாக இருக்கிறது. இந்த மாத்திரைகளைச் சாப்பிடுவதால் தப்பில்லை. முதல் ஒரு மணி நேரத்துக்குள் இந்த மாத்திரையை உட்கொண்டால் மேலும் ரத்தக்கட்டி உருவாவதை தடுக்கும். ஆனால், இது மட்டுமே சிகிச்சை அல்ல. முதலுதவி மட்டுமே.

    Last edited by chan; 21st May 2015 at 06:19 PM.
    jv_66 and Dangu like this.

  5. #25
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    லப்... டப்..!

    *பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு,

    அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.

    *நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்... இதயத்தைப் பற்றி கவலையேபடத் தேவையில்லை.உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.

    *மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.


    jv_66 likes this.

  6. #26
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    எதனால் மாரடைப்பு வருது?



    உலகிலேயே அதிகமாக மனிதர்கள் இறப்பதற்கு முதல் காரணம் மாரடைப்பு, ஏழை, பணக்காரன், ஆண், பெண் என்ற வித்தியாசம் ஏதுமின்றி எல்லோரையும் தாக்குகிறது இந்த “ஆட்கொல்லி” இருதய நோய். மாரடைப்பு வருவதற்கு காரணங்கள்.

    * அதிக ‘கொலஸ்ட்ரால்’ ரத்த தமனிகளில் கொழுப்புகள், ட்ரைகிளிசரைடுகள் அதிகமாக இருப்பது பரம்பரை, புகைபிடித்தல், அதிக இரத்த அழுத்தம் இன்றைய அவசர வாழ்க்கையில் ஏற்படும் மன இறுக்கம், நீரிழிவு நோய் போன்றவை.

    * இருதய நோய்களை வருமுன் காப்பது நல்லது. இதில் முக்கிய பங்கு வகிப்பது உணவு. இருதய நோயை சமாளிக்க பல வழிகளில் முனைய வேண்டும்.

    * சரியான உணவு, உடற்பயிற்சி, நோய் வந்தால் சரியான சிகிச்சை, வாழ்வுமுறைகளில் மாற்றம், மன நிலையில் அமைதி என்ற பல வழிகளில் இந்த நோயை சமாளிக்க வேண்டும்.

    * ஆயுர்வேதத்தில் இருதய நோய்களுக்கு உன்னதமான மருந்துகள் உள்ளன. இம் மருந்துகளுடன், உணவுக்கட்டுப்பாடும் சேர்ந்தால் சிகிச்சை பலனளிக்கும். முதலில் உணவுமுறைகளைப் பார்ப்போம்.

    * சாப்பிடும் உணவு எவ்வளவு கலோரிகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வயதாக வயதாக, ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு, 1500 கலோரிகள் போதுமானது. எல்லோரும் அறிந்தது உணவில் கொழுப்பை குறைப்பது நல்லது.

    * வனஸ்பதி, வெண்ணெய் இவற்றை அறவே தவிர்க்கவும். சிறிதளவு உருக்கிய நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

    * நார்ச்சத்தும், மாவுச்சத்தும் மிகுந்த கோதுமை, அரிசி, பீன்ஸ், ஒட்ஸ் மாவு, காய்கறி, பழங்கள் போன்ற உணவுகள் நல்லவை. சமையலில் ஆலிவ் எண்ணெய், தானிய எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் இவற்றை மாற்றி மாற்றி உபயோகிக்கவும்.

    * 4 பேர் உள்ள குடும்பத்திற்கு மாதம் 2 கிலோ எண்ணெய்க்கு மேல் உபயோகிக்க கூடாது. இல்லை, ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் போதுமானது.

    * உணவில் கண்டிப்பாக உப்பைக் குறைக்கவும். 2400 மி.கி. உப்பு (சோடியம்) ஒரு நாளுக்கு போதுமானது. முடிந்தால் இந்த அளவையும் குறைக்கவும்.

    உடல் எடையை அதிகரிக்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஓர் ‘வளையம்’ போல் வயிற்றை சுற்றி கொழுப்பு இருப்பவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்புகள் அதிகம். சுறுசுறுப்பாக இருங்கள்.


    Attached Thumbnails Attached Thumbnails Heart Care- இதயத்தை காப்போம்-ht1002.jpg  
    jv_66 and Dangu like this.

  7. #27
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    இதயநோய் பற்றி அறிந்து கொள்வோமா

    நமது இதயத்துக்குள் இருக்கும் வால்வுகள் தான் இதயத்தை நன்றாக செயல்பட வைக்கின்றன. இதயத்தின் மேல் பகுதியான ஏட்ரியத்தில் இருந்து கீழ்ப்பகுதியான வெண்ட்ரிக்கிளுக்கு ரத்தத்தை அனுப்பும் போது, மைட்ரல் என்கிற வால்வு சுமார் 3.5 சதுர செ.மீ. முதல் 5 செ.மீ. வரை திறக்க வேண்டும்.

    ஆனால் சிலருக்கு இது ஒரு சதுர செ.மீ. கூட திறக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும். இதைத் தான் இதய நோய் என்கிறோம். இந்த இதய நோயை ருமாட்டிக் என்ற காய்ச்சல் தான் உருவாக்குகிறது. சிறு வயதில் இதய நோய் தாக்கி இருந்தாலும் தெரிவதில்லை. 15 வயதுக்கு மேல் தான் இது தெரியவருகிறது.

    தொண்டையில் புண், கரகரப்பு ஏற்படுவது தான் இதற்கான அறிகுறிகள். பீட்டா, மாலிட்டிக் ஸ்ட்ரெப்டோ காக்கஸ் என்ற வகை நுண்கிருமிகளின் தாக்குதலின் விளைவு இது. பெரும்பாலானவர்கள் இதில் இருந்து தப்பி விடுகின்றனர். மூன்று சதவீதத்தினர் மட்டுமே தாக்குதலுக்கு ஆளாகின்றனர். ருமாட்டிக் காய்ச்சலை அலட்சியப்படுத்தினால் ஆபத்தில் கொண்டு போய் விட்டு விடும்.

    முதலில் பெரிய மூட்டுகளான முழங்கை, முழங்கால், மணிக்கட்டு, கணுக்கால் போன்ற இடங்களில் தான் மாறி மாறி வலியையும் வீக்கத்தையும் ஏற்படுத்தும். அதேநேரத்தில் இதயத்தின் மூன்று அடுக்குகளான எண்டோ கார்டியம், மையோ கார்டியம், பெரி கார்டியம் ஆகியவற்றையும் லேசாக தட்டிப் பார்க்கிறது.

    இந்த சமயத்தில் இந்த தாக்குதலின் வீரியம் குறைவாக இருப்பதால் நிறைய பேர் இதை அலட்சியப்படுத்தி விடுகிறார்கள். இதனால் ருமாட்டிக் காய்ச்சல் அடிக்கடி வந்து இதய வால்வுகளை நிரந்தரமாக பழுதாக்கி விடுகிறது. இந்த காய்ச்சலைப்பற்றி மருத்துவ உலகில் ஒரு பழமொழி இருக்கிறது. ‘மூட்டுகளை நாவால் சுவைத்து விட்டு இதயத்தை சாப்பிட்டு விடுகிறது‘ என்பது தான் அது.

    ரத்தத்தை ‘பம்ப்’ செய்து அனுப்பும் இதயத்தின் வேலையில், வால்வுகளுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. ரத்தம் ஒரே திசையில் பயணிக்க இந்த வால்வுகள் சரியான சமயங்களில் மூடி, திறக்க வேண்டும். வால்வுகள் சரியாக மூட முடியாமலோ, திறக்க முடியாமலோ போனால் ரத்த ஓட்டம் தடைபட்டு நம் உடல் இயக்கம் தடுமாறுகிறது.

    வீணான ரத்தக்கசிவும் ஏற்படுகிறது. மேலை நாடுகளில் இதய நோய் 30 முதல் 60 வயது வரை உள்ளவர்களை தாக்குகிறது. நமது நாட்டை பொறுத்தவரை 3 முதல் 15 வயது வரை உள்ளவர்களை தாக்கும். அதில் 10 வயதில் இருந்தே இதய வால்வுகள் பழுதடைய ஆரம்பித்து விடுகின்றன. 15 முதல் 25 வயதிற்குள் இதய நோயின் விளைவுகள் தெரிய ஆரம்பித்து விடுகின்றன.

    உண்மையில் வால்வுகள் பாதிக்கப்பட்டால் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம். சரியான மருத்துவ விழிப்புணர்வால் மேலை நாடுகளில் இதயநோயை முற்றிலுமாக ஒழித்துக் கட்டி விட்டார்கள். இங்கும் அதை செய்ய முடியும்.

    jv_66 and Dangu like this.

  8. #28
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    உயர் ரத்த அழுத்தம்
    அறிகுறிகளை அறிவோம்!
    யர் ரத்த அழுத்தம் எந்தவித அறிகுறியும் இன்றி அதிகரிக்கும். காய்ச்சல், அறுவைசிகிச்சை



    என்று மருத்துவமனைக்கு வரும்போதுதான் 99 சதவிகித உயர் ரத்தஅழுத்த பிரச்னை கண்டறியப்படுகிறது. 30 வயதைக் கடந்துவிட்டால், குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறையேனும் ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

    அறிகுறிகள்
    கடுமையான தலைவலி
    மயக்கம்
    பார்வைக் குறைபாடு
    நெஞ்சு வலி
    சுவாசித்தலில் பிரச்னை
    சீரற்ற இதயத் துடிப்பு
    மூக்கில் ரத்தம் வருதல்

    ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க...

    சிகரெட் - ஆல்கஹால் தவிர்க்க வேண்டும்


    உடல் எடை, சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்
    துடிப்பான வாழ்க்கைமுறையைப் பின்பற்ற வேண்டும்
    தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்
    உணவில் உப்பு அளவைக் குறைக்க வேண்டும்
    பதப்படுத்தப்பட்ட, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட
    உணவுகளைத் தவிர்க்க வேண்டும்
    மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும்

    ஒரு நாளைக்குக் குறைந்தது எட்டு மணி நேரம்
    தூங்கி எழுந்திருக்க வேண்டும்.

    காய்கறி, பழங்களை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்
    கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போதுமான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்

    சோடியம் அளவு அதிகரிக்கும்போது, ரத்த அழுத்தம் அதிகரிக்கும். பொட்டாசியம் அளவு அதிகரிக்கும்போது, கட்டுக்குள் வரும். பொட்டாசியம், காய்கறிகளில் அதிகமாக உள்ளது. ஆனால், சமைக்கும்போது பொட்டாசியம் வெளியேறிவிடுகிறது. பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

    Last edited by chan; 31st May 2015 at 02:11 PM.
    jv_66 and Dangu like this.

  9. #29
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    இதய பாதிப்பு... இதோ ஒரு நவீன சிகிச்சை!

    இதயத் தசைகளுக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டால், மாரடைப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம். உடனடியாக இவர்களுக்கு மருந்து மாத்திரை, பலூன் ஆஞ்ஜியோபிளாஸ்டி அல்லது பாதிப்பைப் பொருத்து பைபாஸ் அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படும். ஆனால், 90 சதவிகிதத்துக்கு மேல் அடைப்பு உள்ளவர்களுக்கு, இதயம் பலவீனம் ஆனவர்களுக்கு, அறுவைசிகிச்சை செய்ய முடியாத அளவுக்கு இதயம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இதயம் செயல் இழப்புத் தன்மை அதிகம் கொண்டவர்களுக்கு, இத்தகைய அறுவைசிகிச்சை செய்யப்படுவது இல்லை. எந்த நேரமும் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற நிலையில் வாழ வேண்டிய அவர்களின் உயிரைக் காக்க வந்திருக்கும் சிகிச்சைதான் 'என்ஹான்ஸ்டு எக்ஸ்டர்னல் கவுன்டர் பல்சேஷன்’ Enhanced External Counter pulsation (EECP).

    இந்தச் சிகிச்சை குறித்து அறிய, சென்னை செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மூத்த இதய அறுவைசிகிச்சை நிபுணர் சொக்கலிங்கத்தைச் சந்தித்தோம்.



    'நெஞ்சு வலி ஏற்பட முக்கியக் காரணம், இதயத்தில் உள்ள தசைகளுக்கு, போதிய அளவு ரத்த ஓட்டமும், ஆக்சிஜனும் கிடைக்காமல் போவதுதான். இதில் அதிக ஆபத்து உள்ளவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் சிகிச்சைதான், இ.இ.சி.பி. இதில் அறுவைசிகிச்சை இல்லை என்பதால், துளிக்கூட ரத்த இழப்பு இருக்காது. அறுவைசிகிச்சைக் கூடத்தில் செய்யப்படும் பைபாஸ், பலூன் ஆஞ்சியோபிளாஸ்ட்டி போன்று அல்லாமல், சாதாரணமாக, புறநோயாளியாகவே வந்து சிகிச்சை பெற்றுச் செல்லலாம்.

    இதயம் செயலிழந்தவர்கள், இதய வலி, மாரடைப்பு நோய் போன்ற பிரச்னை உள்ள நோயாளிகள், இந்த முறையால் பயனடையலாம். அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் அங்கீகாரம் பெற்றது இந்தச் சிகிச்சை. எல்லா இதய நோயாளிகளுக்கும் இந்தச் சிகிச்சை செய்யப்படுவதும் இல்லை. இதயக் குழாய் வால்வு பிரச்னை, காலில் நீர் வீக்கம், படுத்தால் மூச்சு வாங்கும் பிரச்னை, சிறுநீரகக் கோளாறு, மெல்லிய ரத்தக் குழாய்கள் போன்ற பிரச்னைகள் உள்ள நோயாளிகளுக்கு, இந்தச் சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை' என்றவர், சிகிச்சை அளிக்கப்படும் விதம் பற்றி விளக்கினார்.

    'இந்தச் சிகிச்சையின் மூலம் காலில் உள்ள ரத்தம் இதயத்துக்கு பம்ப் செய்யப்படும். சிகிச்சைக்கு வருபவர்களை, பிரத்யேகப் படுக்கையில் படுக்கவைத்து, காற்றுப்பைகளை காலின் கெண்டைச் சதை, கீழ்த் தொடை, மேல் தொடை என மூன்று இடங்களில் கட்டுவோம். இதயம் விரிவடையும் நேரத்தில், காற்றுப்பைகளில் அழுத்தம் கொடுக்கப்படும். இதனால் இதயத்துக்கு ரத்தம் எளிதில் வந்து சேருகிறது. இதயம் சுருங்கும் நேரத்தில் காற்றுப் பைகள் திறக்கப்பட்டு, அழுத்தம் குறைக்கப்படும்.

    இதனால் எளிதில் ரத்தம் வெளியேற்றப்படுகிறது. இந்தச் செயல்முறையின் மூலம் இதயத்தின் முக்கிய ரத்தக் குழாயான, 'மகா தமனி’யில் ரத்த அழுத்தம் அதிகரித்து ரத்தமானது, இதயத் தசைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் மிக அழுத்தமாகப் பாய்கிறது. இதனால் அடைப்பையும் மீறி ரத்தம் வேகமாக இதயத் தசைக்குச் செல்கிறது.


    இப்படித் தொடர்ந்து செய்யும்போது, இதயத்துக்கு ரத்தம் செல்லும் குழாயில், பல புதிய குழாய்கள் உருவாகி ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துகின்றன. நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் போன்ற பிரச்னைகள் மறைகின்றன. இந்தச் சிகிச்சையைச் செய்யும்போது, இதயத்தை ஈ.சி.ஜி. கருவி மூலம் கண்காணிக்கப்படுவதால் பாதுகாப்பானது. இந்தச் சிகிச்சையை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வீதம், 35 நாட்களுக்குச் செய்து வர வேண்டும். வாரத்துக்கு ஆறு நாட்கள் இந்தச் சிகிச்சை அளிக்கப்படும். சிகிச்சைக்குப் பிறகு ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி செய்துவந்தால், அடுத்த 20 ஆண்டுகளுக்கு இதயப் பிரச்னைகள் இன்றி வாழ முடியும்' என்றார் டாக்டர் சொக்கலிங்கம்.


    ஏழைக்கும் கிடைக்குமா இ.இ.சி.பி சிகிச்சை?
    ந்தச் சிகிச்சை முறைக்கு, ரூ. 75 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை செலவாகிறது. தற்போது தனியார் மருத்துவமனைகள் மட்டுமே இதனைச் செய்துவருகின்றன. அரசு மருத்துவமனைகளில் அவ்வளவாக இல்லை. அரசும், இந்தக் கருவிகளை அரசு மருத்துவமனைகளில் நிறுவினால் மிகக் குறைந்த செலவில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கும் இந்தச் சிகிச்சை சென்றடைய ஏதுவாக இருக்கும்.

    Last edited by chan; 31st May 2015 at 03:23 PM.
    jv_66 and Dangu like this.

  10. #30
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Heart Care- இதயத்தை காப்போம்

    எல்லா விதமான இதய நோய்க்கும் சென்னை அண்ணா நகரில் ஒரு தனியார் மருத்துவமனையில் நல்ல சிகிச்சை அளிக்கபடுகிறது.அறுவை சிகிச்சை கிடையாது. "கீலேஷன் தெரபி" மற்றும் eepc, esmr போன்ற தரமான சிகிச்சை அளிக்கபடுகிறது. ஆஸ்பிடலில் தங்க வேண்டியது இல்லை.காலை 9 மணி முதல் 5 மணிவரை மட்டுமே. இதுவும் ஒரு ஆங்கில முறை சிகிச்சை தான்.மாத்திரைகள் கட்டாயம் உண்டு. மேலு விபரம் அறிய pm பண்ணுங்கள்.

    jv_66 and chan like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter