கோடை பாதிப்பால் சிறுநீரகத் தொற்று அதிகரிப்பு

கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் அதிக அளவில் சிறுநீரகத் தொற்று நோயால் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக மருத்துவமனைக்குச் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தைப் பொருத்தவரை ஏப்ரல் மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. கோடைக் காலத்தில் வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப் போக்கு, டைபாய்டு, எலிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவும் வாய்ப்புள்ளது.

கோடை காலத்தில் நீர் மாசுபடுவதால் சிறுநீரகத் தொற்று பொதுமக்களிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சென்னை மருத்துவக் கல்லூரியின் பொது மருத்துவத் துறை தலைவர் டாக்டர் ரகுநந்தன் கூறியதாவது:

பொதுவாக மனிதர்களின் சிறுநீர் பாதையில் பாக்டீரியாக்கள் காணப்படும். அதிக அளவில் தண்ணீர் குடித்து, சிறுநீர் கழிக்கும்போது அந்த பாக்டீரியாக்கள் வெளியேறும்.

வெயில் நேரங்களில் அதிக அளவில் வியர்க்கும். இதன் காரணமாக சிறுநீர் மூலமாக வெளியேறக்கூடிய நீர் குறையும்.

சிறுநீர் குறையும்போது சிறுநீர் பாதையில் காணப்படும் பாக்டீரியாக்கள் வெளியேறாமல் நோய்த் தொற்றை ஏற்படுத்தும்.

மேலும், சிறுநீரகத் நோய்த் தொற்று, நீர்க்கடுப்பு ஆகிய பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்தப் பிரச்னைகளுக்காக அரசு மருத்துவமனைகளில் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கானோர் சிகிச்சைக்கு வருவதாக அவர் தெரிவித்தார்.

இளைஞர்கள்: மென்பொருள் துறையில் பணியாற்றுபவர்கள், வாடிக்கையாளர் சேவை மையம், பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்களும் சிறுநீரகத் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

ஏ.சி. அறைகளுக்குள் பணியாற்றுபவர்கள் அதிக அளவில் நீர் குடிப்பதில்லை. இதன் காரணமாக சிறுநீரகத் தொற்றால் அதிகம் பாதிக்கப்படுவதாக சிறுநீரக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இயற்கை மருத்துவம்:

ஆங்கில மருத்துவம் மட்டுமின்றி சித்த மருத்துவத்திலும் சிறுநீரகத் தொற்றுக்காக சிகிச்சை பெறுகின்றனர்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசினர் சித்த மருத்துவமனையில் ஒரு நாளைக்கு ஆயிரம் புறநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.

அதில், 200-க்கும் மேற்பட்டவர்கள் சிறுநீரகத் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருகின்றனர் என சித்த மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் பிச்சையாகுமார் தெரிவித்தார்.

தடுப்பது எப்படி?:
சிறுநீரகக் தொற்று, சிறுநீர்க் கடுப்பு உள்ளிட்ட பிரச்னைகளைத் தடுப்பதற்கு ஒரு நாளைக்கு குறைந்தது 2.5 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வெயில் நேரங்களில் தாகத்துக்கு குளிர்சாதனப் பெட்டியில் வைத்த நீரை அருந்தக் கூடாது. அவை உடலில் உள்ள வலிகளை அதிகரிக்கச் செய்யும். மண் பானை நீரை அருந்தலாம்.

மேலும், நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக அளவில் நீரைக் குடித்து, சிறுநீர்க் கழிப்பது நல்லது.

குழந்தைகள், முதியவர்கள், சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகள் ஆகியோர் வெயிலால் எளிதில் பாதிக்கப்பட்டு நீர்ச்சத்தை இழப்பார்கள். எனவே, கோடை காலங்களில் இவர்கள் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

Similar Threads: