முத்துப்பிள்ளை கர்ப்பம்1 முத்துப்பிள்ளை கர்ப்பம் என்றால் என்ன?
பெண்ணின் கரு முட்டையும், ஆணின் உயிரணுவும் சேர்ந்து கரு தரித்ததும், அது சாதாரண கர்ப்பமாக உருவாவது தான் இயல்பு. அப்படிக் கருத்தரித்த கருவானது, சாதாரணமாக வளராமல், நஞ்சு மட்டும் அசாதாரணமாக, குட்டிக் குட்டி நீர்க்குமிழிகள் வடிவில் வளர்ந்து, திராட்சைக் கொத்து மாதிரி கர்ப்பப்பையை நிறைத்தால், அது தான், 'முத்துப்பிள்ளை கர்ப்பம்' என்றழைக்கப்படுகிறது.

2 இதில் வகைகள் உள்ளனவா?
முத்துப்பிள்ளை கர்ப்பத்தில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று முழுமையானது; இவ்வகை கர்ப்பத்தில் கருவே இருக்காது. நஞ்சு மட்டும் அசாதாரணமாக இருக்கும். மற்றொன்று, 'பார்ஷியல்' எனப்படுகிற பகுதி; முத்துப்பிள்ளை கர்ப்பத்தில், ஒரு அசாதாரண கரு உருவாகியிருக்கும், ஆனால் அது பிழைக்காது. நஞ்சிலும் கொஞ்சம் சாதாரணமானதும், கொஞ்சம் அசாதாரணமானதுமான திசுக்கள் காணப்படும்.

3 முத்துப்பிள்ளை கர்ப்பம் ஏற்பட காரணம் என்ன?
மரபணு கோளாறு முதல் காரணம். 35 வயதுக்கு மேல் கருத்தரிப்பவர்களுக்கு முத்துப்பிள்ளை கர்ப்பம் ஏற்பட, இருமடங்கு வாய்ப்புகள் அதிகம்; அதுவே, 40 வயதுக்கு மேல், ஐந்து மடங்கு வாய்ப்புகள் அதிகம்.

4 முதல் கர்ப்பம் முத்துப்பிள்ளையாக இருந்தால், அடுத்தடுத்த கர்ப்பங்களும் முத்துப் பிள்ளையாக இருக்க வாய்ப்புண்டா?
முதலில் ஒரு முத்துப்பிள்ளை கர்ப்பம் தரித்திருந்தால், அடுத்த கர்ப்பமும் அப்படியே உருவாக, 1.2 முதல் 1.4 சதவீதம் வரை வாய்ப்புண்டு. அதுவே இரண்டாவது முறையும் முத்துப்பிள்ளை கர்ப்பம் என்றால், மூன்றாவது கர்ப்பமும் அப்படியே நிகழ, 20 சதவீதம் வாய்ப்புண்டு.

5இதன் அறிகுறிகள் என்ன?
சாதாரண கர்ப்பத்தை போலவே மாதவிலக்கு தள்ளிப்போகும்; அதைத் தொடர்ந்து வாந்தி, மயக்கம் இருக்கும். 90 முதல் 95 சதவீதப் பெண்களுக்கு ரத்தப் போக்கு ஏற்படும். அதனால் பெண்கள் ரத்தச் சோகையால் பாதிக்கப்படுவர். சிலருக்கு திராட்சை மாதிரியான குட்டித் திசுக்கள் பிறப்புறுப்பு வழியாக வெளியேறும்.

6 மேற்சொன்ன அறிகுறிகள் மட்டுமே ஏற்படுமா?
இல்லை; சில பெண்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகும். சிறுநீரில் புரதத்தின் அளவு கூடும். 'ஹைப்பர் தைராய்டு' பிரச்னை ஏற்பட்டு, அதன் அறிகுறிகளான அதிக களைப்பு, அதிக வியர்வை வெளியேறுதல் போன்றவை ஏற்படும்.

7 முத்துப்பிள்ளை கர்ப்பத்தை எவ்வாறு கண்டறிவது?
முத்துப்பிள்ளை கர்ப்பம் உள்ள பெண்களின் கர்ப்பப்பை, சாதாரண கர்ப்பத்தை விட, மிகப் பெரியதாக இருக்கும். அதாவது மாதவிலக்கு தள்ளிப்போனதில் இருந்து கணக்கிட்டால், கர்ப்பப்பை இருக்க வேண்டிய அளவைவிட, அதிகப் பெரியதாக இருக்கும். கர்ப்பம் தரித்த பின், ரத்தப் பரிசோதனையின் மூலம், ஹெச்.சி.ஜி., ஹார்மோன் அதிகரித்திருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். மேலும், 'ஸ்கேன்' செய்வதன் மூலம் உறுதி செய்யலாம்.

8 முத்துப்பிள்ளை கர்ப்பத்தால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?
முத்துப்பிள்ளை கர்ப்பத் திசுக்கள் நுரையீரல் உட்பட, எங்கு வேண்டுமானாலும் பரவும் ஆபத்துண்டு. எனவே, 'வாக்குவம்' அறுவை சிகிச்சையின் மூலம், அந்தக் கருவை வெளியே எடுப்பது தான் நல்லது. இச்சிகிச்சையின் போது, அதிக ரத்த இழப்பு ஏற்படும். கர்ப்பிணியின் வயது அதிகம் என்கிற நிலையில், எதிர்காலத்தில் கருத்தரிக்கிற எண்ணம் இல்லை என்பதை உறுதி செய்தபின், கர்ப்பப்பையையும் சேர்த்தே அகற்ற வேண்டி வரும். அதோடு தொடர் கண்காணிப்பும் அவசியம்.

9 முத்துப்பிள்ளை கர்ப்பம் புற்றுநோயாக மாறும் வாய்ப்புண்டாமே?
முத்துப்பிள்ளை கர்ப்பம் புற்றுநோயாக மாறினால், நுரையீரல், கல்லீரல், மூளை என, எங்கே வேண்டுமானாலும் பரவி, பாதிப்பை ஏற்படுத்தும்; ஆனால் பயப்படத் தேவையில்லை. கீமோதெரபியின் மூலம், இந்த புற்றுநோயை, 100 சதவீதம் குணப்படுத்த முடியும். கீமோதெரபி கொடுப்பதால் தாய்க்கோ, அடுத்துப் பிறக்கப் போகும் குழந்தைக்கோ பிரச்னை வராது.

10 அறுவை சிகிச்சைக்குப் பின் மருத்துவரின் கவனிப்பு தேவையா?
ஹெச்.சி.ஜி., அளவு சீரான அளவை எட்டும் வரை, மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஹெச்.சி.ஜி., சீரான அளவு வரும் வரை, சம்பந்தப்பட்ட பெண் கருத்தரிக்கக் கூடாது.

- எஸ்.ராஜஸ்ரீ
மகளிர் மற்றும் மகப்பேறு நிபுணர், சென்னை
Similar Threads: