கர்ப்ப காலத்தில் வீட்டை சுத்தம் செய்ய உபயோகப்படுத்தப்படும் கிளீனிங் பொருட்களால் வயிற்றில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு வரும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இதனால் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வரவும் வாய்ப்புள்ளது என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.

எல்.கே.ஜி படிக்கும் மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பெரும்பாலான குழந்தைகள் சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதற்குக் காரணம் கர்ப்பகாலத்தில் தாய்மார்கள் பயன்படுத்திய ரசாயனம் அடங்கிய சுத்தப்படுத்தும் பொருட்கள்தான் என்று ஆய்வாளர்கள் உறுதிபடுத்தினர்.

அதேசமயம் வீட்டை சுத்தமாக பளிச் என வைத்துக்கொள்ளும் புதுமணப் பெண்களுக்கு எளிதில் கரு உருவாகும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நமது வீட்டில் உள்ள மின்னணுப் பொருட்கள், கார்பெட்டுகள், ஜன்னல் திரைகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றில் சேரும் தூசியால் பெண்களின் கர்ப்பமாகும் வாய்ப்பு தடைபடும் என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளனர்.

வீட்டில் உள்ள பொருட்களின் மீது படியும் தூசியில் உள்ள, பிபிடிஇ (pbde) வேதிப் பொருட்களை சுவாசிக்கும்போது அவை நமது உடலின் கொழுப்பு செல்களில் போய் தங்கிக் கொள்கின்றன. ரத்த அளவில் பிபிடிஇ அளவு அதிகம் உள்ள பெண்களுக்கு கர்ப்பமாவது தடைபடுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதேசமயம், இந்த அளவு குறைவாக உள்ள பெண்கள் விரைவில் கர்ப்பமடைகிறார்கள்.

எனவே வீட்டை சுத்தமாக வைத்துக் கொண்டால் பிபிடிஇ அளவு பெண்களின் ரத்தத்தில் சேருவது குறைந்து, அவர்கள் தாய்மை அடைவது விரைவாக வாய்ப்புள்ளதாக இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. பிபிடிஇ அளவு குறித்த ஆய்வுகள் இதுவரை மனிதர்களிடையே பெருமளவில் நடத்தப்படவில்லை. விலங்குகளில்தான் இது அதிக அளவில் நடத்தப்பட்டுள்ளன என்கின்றனர் கலிபோர்னியா விஞ்ஞானிகள்.

Similar Threads: