பெற்றோர் ஆக விருப்பமா? இதோ விதிமுறைகள்

திருமணத்துக்குப் பிறகு கணவன், மனைவியாகக் குடும்பப் பந்தத்துக்குள் இணைவோருக்கு இயற்கை தரும் பரிசுதான் குழந்தை. அந்தப் பரிசு ஆரோக்கியமானதாக இருக்க ஒரு சில முயற்சிகளையும் நல்ல வாழ்க்கைமுறை பயிற்சிகளையும் கணவனும், மனைவியும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

தந்தையாக விரும்பும் கணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகள்

இதோ...
1. திருமணத்துக்குப் பின்பு தம் மனைவியோடு மட்டுமே பாலியல் உறவு என்ற கட்டுப்பாடு வேண்டும்.

2. அதிகளவு ரசாயனப் பொருட்களை நுகர்வதால், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புண்டு. ரசாயனப் பொருட்களோடு வேலை செய்யும்போது உஷார்.

3. கொதிக்கும் நீரில் நீந்துவது, நீராடுவது இரண்டுமே வருங்கால அப்பாக்களுக்கு அபாயம் தரவல்லது.

4. அதிக நேர உடற்பயிற்சி உடல் அயர்ச்சியையும், உயிரணுக்களில் தளர்ச்சியையும் தரும். அளவான உடற்பயிற்சியே நல்லது.

அம்மாவாக நினைக்கும் பெண்களுக்கு..

1. போதை பழக்கங்களுக்கு அடிமையாகாமல் உடலையும் கருமுட்டைகளையும் பார்த்துக்கொள்வது அவசியம்.

2. இளவயதில் திருமணத்தைத் தவிர்த்தல், முப்பத்தைந்து வயதுக்குள் தாய்மை போன்றவை ஆரோக்கியமானது.

3. அதிக வெயிட் போட்டு விடுவோமோ என பயந்து ஒரேயடியாகச் சாப்பிடாமல் anorexia வரவழைத்துக் கொள்ளக் கூடாது. இவற்றைப் பின்பற்றினாலும்கூட குழந்தை பிறக்காததற்கு இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன.
சர்க்கரை நோய்;
ரத்தக் குழாயில் ஏற்படும் சில நோய்கள்;
முதுகுத்தண்டில் ஏற்படும் காயங்கள்;
வேறு உடல் உபாதைகளுக்காகச் சாப்பிடும் மருந்து, மாத்திரைகள்;
ஆண்களுக்கு androgen ஹார்மோன்களின் அளவு குறைவு போன்றவையும் காரணங்கள்.

மனமும், உடலும் ஒத்து இல்லற வாழ்க்கையில் ஈடுபடும் அனைத்து கணவன், மனைவிகளுக்கு குழந்தைப்பேறு கண்டிப்பாகக் கிடைக்கும்.

வாங்க குழந்தைப்பேறின்மைக்கு மருத்துவமளிக்கும் நிபுணரான டாக்டர் என். பாண்டியன் சொல்லும் ஆலோசனைகளைக் கேட்போம்.

ஒரு குடும்பத்தில் திருமணமான தம்பதிக்குக் குழந்தை பிறக்கவில்லை என்றால் உடனடியாக ஒட்டுமொத்த குடும்பமும் பெண்ணைத்தான் குறைசொல்கிறது. ஆனால், குழந்தைப்பேறு ஏற்படாததற்குக் காரணம் கணவன், மனைவி இருவருமே தான். அதேபோல ஒரு தம்பதிக்குத் தொடர்ந்து பெண் குழந்தையே பிறந்து வந்தாலும், அதற்குக் காரணமும் பெண்ணல்ல. ஆணின் உயிரணுதான் அவனுக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்கிறது.

இதில் பெண்ணின் பங்கு கருவைச் சுமப்பதில் மட்டும்தான்!
குழந்தைப்பேறு இல்லாமல் இருக்கும் தம்பதிகளைக் கீழ்க்கண்டபடி பிரிக்கலாம்.

40 சதவிகிதம் பெண்களிடம் குறை; 40 சதவிகிதம் ஆண்களிடம் குறை; 10 சதவிகிதம் காரணம் புரியாமலேயே இருப்பது; 10 சதவிகிதம் இருபாலரிடமும் குறை...

ஆக, திருமணம் ஆகி சில காலம் வரை குழந்தைப்பேறு உண்டாகவில்லை என்றால் இருவருமே சேர்ந்துதான் டாக்டரிடம் செல்ல வேண்டும். மனைவி மட்டும் சென்று டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வதோ அல்லது கணவன் மட்டும் சென்று டாக்டரைப் பார்ப்பதோ சரியில்லை. முக்கியமாக ஆணின் விந்தைப் பரிசோதனை செய்வது மிக அவசியம்.

இளவயதிலேயே (இருபதுகளின் மத்தியில்) திருமணம் செய்து கொள்வது நல்லது. வயது ஏறஏற பெண்ணுக்குக் கருத்தரிக்கும் வாய்ப்புக் குறைந்து கொண்டே வரும். 30 வயதுக்கு மேல் திருமணம் செய்து ஒரு வருடத்துக்கு மேல் குழந்தை பிறக்கவில்லை எனில் உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும். முப்பத்தைந்து வயதுக்கு மேல் திருமணம் செய்து, ஆறு மாதங்களுக்கு மேல் கருத்தரிக்கவில்லை என்றால் டாக்டர் பரிசோதனை அவசியம்.

மாதவிடாய் சரியாக வராத பெண்களுக்கு, கருமுட்டை உருவாவதில் பிரச்னைகள் வரலாம். இதை மருந்து, மாத்திரை, ஊசி மூலம் சரிசெய்ய முடியும்.

இளவயது பெண்ணாக இருந்து அவர்களுக்கு, கருக்குழாயில் ஏதாவது கோளாறு, அடைப்பு ஏற்பட்டிருந்தால் அதையும்சிகிச்சையின் மூலம் சரி செய்ய முடியும்.

கரு உருவாகும் சமயத்தில் (fertility period) எப்போது என்பதை கணவன், மனைவி இருவரும் அறிந்துகொள்ள வேண்டும். ஒரு பெண்ணுக்கு 28 நாட்களுக்கொரு முறை மாதவிடாய் வருவதாக இருந்தால், சரியாக 14ம் நாள் கருமுட்டை வெளியேறும். ஆக ஒரு மாதவிடாக்கும் மற்றொரு மாதவிடாக்கும் இடைப்பட்ட 10ம் நாள் முதல் 20ம் நாள் வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் கணவன் மனைவி இணைந்தால், கரு உருவாக நல்ல வாய்ப்பு இருக்கிறது.

IUI என்ற முறையில், ஆணின் நல்ல ஆரோக்கியமான, துடிப்பான உயிரணுக்களை எடுத்து அதைப் பெண்ணின் கர்ப்பப்பைக்குள் செலுத்தி விடுவோம். இது சற்றுச் செலவு குறைவான பெரும்பாலும் பலரால் செய்து கொள்ளக்கூடிய சிகிச்சை.

மது குடிப்பது, புகைபிடிப்பது போன்றவை ஆணின் விந்தணுவைப் பாதிக்கும்.

ரொம்ப உடல் பருமனாகவோ அல்லது ரொம்ப ஒல்லியாகவோ இல்லாமல் இருப்பதும் நலம்.

சந்தோஷமான மணவாழ்க்கையை சந்தோஷமான மனத்தோடு எதிர் கொண்டு வாழ்ந்து வந்தால், குழந்தைப் பேறு என்பது அனைவருக்குமே நிச்சயம் கிடைக்கும்"

என்கிறார் டாக்டர் என். பாண்டியன்.

Similar Threads: