இன்றைய அளவில்கூட கர்ப்பிணியின் மரணத்திற்கும், கருக் குழந்தையின் மரணத்திற்கும் முக்கியக் காரணமாக விளங்கும் நோய்களுள் மிகை இரத்த அழுத்தம் முதன்மை வகிக்கிறது எனலாம்.

சாதாரணமாக இரத்த அழுத்தத்தில் சுருங்கு இரத்த அழுத்தம் 120 மி.மீ. ஆகவும், விரிவு இரத்த அழுத்தம் 80 மி.மீ. ஆகவும்தான் இருக்கும். முதல் ஆறு மாத கர்ப்பக் காலத்தில் இரத்த அழுத்தம் சற்று குறைந்து காணப்படும். சுருங்கு இரத்த அழுத்தம் 100 ஆகவும், விரிவு இரத்த அழுத்தம் 70 ஆகவும் இருக்கக்கூடும். கடைசி மூன்று மாத காலத்தில்தான் இரத்த அழுத்தத்தின் அளவு அதிகரிக்கும். 24 வாரத்திற்குப் பிறகுதான் இரத்த அழுத்தம் அதிகமாக ஆரம்பிக்கிறது.

விரிவு இரத்த அழுத்தம் 130 மி.மீட்டரைத் தாண்டினால் அதை இதயத்தால் தாங்க இயலாது. மூளையில் இரத்தக்கசிவு போன்றவை ஏற்படும்.

கர்ப்பக் காலத்தில் விரிவு அழுத்தம் 110 அல்லது 120 ஆக இருக்கும்போதே இதயப் பிரச்சனை மற்றும் மூளை இரத்தக் கசிவு ஏற்பட்டுவிடுகிறது. கர்ப்பச் சன்னி என்ற பிரச்சனை விரிவு அழுத்தம் 90 அல்லது 100 மி.மீ. இருக்கும் போது வந்துவிடுகிறது.

இந்த இரத்த அழுத்தம் ஏன் வருகிறது என்றால், பாரம்பரியம், வறுமையான சூழ்நிலை, சிறுநீரகப் பிரச்சனைகள், பனிநீர் மிகைப்பு, இரட்டைக் கோளாறுகள், எப்போதும் டென்ஷன், கவலை போன்ற காரணங்களால் வருகிறது.

கருத்தரிக்கும் முன்போ அல்லது கர்ப்பக் காலத்திலோ இரத்த அழுத்தம் இருந்திருந்தால் அது தாயையும், கருக்குழந்தையையும் கண்டிப்பாக பாதிக்கும். கர்ப்பச் சன்னி, கர்ப்பிணி மரணமடைதல் போன்ற பிரச்சனைகள் சம்பவிக்கும். திடீரென தலைச்சுற்றல், பார்வை மங்கலாகி பின் இருண்டது போன்றிருத்தல் ஆகியவை நேரிடும்.

இதைத் தலிர்க்க, கர்ப்பிணிக்கு பூரண ஓய்வு, தூக்க மருந்துகள், இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள் ஆகியவற்றை மருத்துவர்கள் பரிந்துரை செய்து தாய்-சேய் இருவரையும் காப்பாற்றுவார்.

கர்ப்பக் காலத்தில் கைகால்கள் வீக்கம், டென்ஷன் போன்றவை இருந்தால் கர்ப்பிணி எதன் மீதோ ஆசைப்பட்டு வீங்கிவிட்டதாக நினைத்துக் கொள்வது தவறு.

இரத்த அழுத்தப் பரிசோதனையை துவக்கக் காலத்திலிருந்தே தவறாமல் மேற்கொள்ள வேண்டும். பிரசவ காலத்திற்குப் பின்னரும் இரத்த அழுத்தப் பரிசோதனையை மேற்கொண்டால்தான் நோய் தொடருகிறதா என்பதை கண்டறிய இயலும். இதை மேற்கொள்ள மறந்தாலும் அல்லது அஜாக்கிரதையாக இருந்தாலும் அது உயிரைப் பறிக்கும் அளவிற்குப் போகும்.

Similar Threads: