கர்ப்ப காலத்தில் ரத்தம் உறையும் பிரச்னை

கருவில் உள்ள குழந்தை சரியான வளர்ச்சியின்றி காணப்படுவது, ஏழு, எட்டு மாதங்களிலேயே தாயின் வயிற்றிலேயே இறந்து போவது, நஞ்சு பிரிவது என கர்ப்பிணிப் பெண்கள் சந்திக்கிற பல பிரச்னைகளுக்கும், கர்ப்ப காலத்தில் உண்டாகிற ரத்தம் அதிகமாக உறைதல் தன்மையே காரணமாக இருக்கலாம் என்கிறார் மகப்பேறு மற்றும் ரத்த நோய்களுக்கான சிறப்பு மருத்துவர் மகேஸ்வரி. அதற்கான காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர்.

எங்கேயாவது அடிபட்டு ரத்தக் கசிவு ஏற்பட்டால், அது உடனே உறைந்தாக வேண்டும். அதுதான் இயல்பானது, பாதுகாப்பானதும்கூட. ஆனால், ரத்தம் ஓடிக் கொண்டிருக்கும் போதே உறைந்தால்? அது ஆபத்தின் அறிகுறி.

கர்ப்ப காலத்தில் பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு ரத்தம் உறைகிற தன்மை சற்று அதிகமாக இருக்கும். அது ஒரு சிலருக்கு அதீதமானால் ஆபத்து. பரம்பரையாக இந்தப் பிரச்னை ஒருவரைத் தாக்கலாம். அப்படியில்லாமல் சிலருக்கு முதல் முறையாகவும் பாதிக்கலாம். ஆன்ட்டி த்ராம்பின் 3 குறைபாடு, சி மற்றும் எஸ் புரதக் குறைபாடு உள்ளிட்ட வேறு சில காரணங்களும் இதன் பின்னணியில் இருக்கலாம்.

முதல் முறை கர்ப்பம் தரிக்கிற சில பெண்களுக்கு முதல் பத்தியில் சொன்ன மாதிரி கர்ப்பத்தில் சிக்கல்கள் வரும். அடுத்த முறை கர்ப்பம் தரிக்கிற போது, அவர்களது முதல் கர்ப்ப கால வரலாறுகளைக் கேட்டுப் பார்த்தால், மருத்துவர்களுக்கு சந்தேகம் வரும்.

இன்னும் சில பெண்கள் முதல் கர்ப்பம் உறுதியானதுமே மருத்துவப் பரிசோதனைக்கு வரும் போது, தன் அம்மாவுக்கோ, சித்திக்கோ, தாய்வழி பெண் உறவுகளுக்கோ உண்டான குறைப்பிரசவம், கர்ப்பத்தின் போது எகிறிய ரத்த அழுத்தம் பற்றிச் சொல்வதுண்டு.

அதன் அடிப்படையில், அவர்களை சில சிறப்பு ரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்ளச் செய்வார்கள். ரத்தம் உறையும் தன்மை கூடுதலாக இருப்பதுதான் முதல் கர்ப்பத்தில் பாதிப்புகள் வந்ததற்கும், தாய் வழிப் பெண்களின் கர்ப்ப கால சிக்கல்களுக்கும் காரணம் என்பது உறுதியானால், அடுத்தக்கட்டமாக அவர்களை ஹை ரிஸ்க் பேஷன்ட்டுகளாக பாவித்து, அதிகபட்ச கவனத்துடன் சிகிச்சையளிப்பார்கள். இவர்களுக்கு ரத்தம் உறைவதைத் தடுக்கும் ஊசிகளை தினமும் போட வேண்டியிருக்கும்.

கர்ப்பம் உறுதியானது முதல், பிரசவத்துக்கு 2 நாள்கள் முன்பு வரை இந்த ஊசியைப் போட்டாக வேண்டும். இதன் மூலம் ரத்தம் உறையாமல், நல்ல முறையில் கரு வளர்ந்து, ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். எனவே உங்களுக்கோ, உங்கள் தாய்வழிச் சொந்தங்களுக்கோ மேற்சொன்ன அனுபவங்கள் இருப்பின், தயங்காமல் மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள்... என்கிறார் டாக்டர் மகேஸ்வரி.

Similar Threads: