பனிக்குட நீர் பற்றாக்குறையால் சிசுவுக்கு ஏற்படும் பாதிப்பு

கர்ப்பத்தின் போது கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தைக்கும் கர்ப்பப்பைக்கும் இடையே ஒரு நீர்ப்படலம் இருக்கும். குழந்தையைச் சுற்றியிருக்கும் இந்த நீரை Amnotic fluid என்கிறோம். இது குழந்தையின் இயல்பான சுவாசத்துக்கும் பாதுகாப்புக்கும் உதவும். ஊட்டச்சத்துகள் நிறைந்த அந்த நீரானது சிலருக்கு குறைவாகவும் சிலருக்கு அதிகமாகவும் இருக்கும்.

இது குறையும் போது அது குழந்தைக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும். பனிக்குட நீர் குறைவதற்கு 2 காரணங்கள்... குழந்தையிடம் உள்ள பிரச்சனைகளால் இந்த நீர் பற்றாக்குறை ஏற்படலாம். தாயிடம் உள்ள குறையாலும் ஏற்படலாம். குரோமோசோம் குறைபாட்டின் காரணமாக சில குழந்தைகளுக்கு இப்பிரச்சனை ஏற்படும். யூரினரி ட்ராக்ட் அடைப்புக்காரணமாகவும் (Posterior urethral valve) இந்தப் பிரச்சனை ஏற்படும்.

(யூரினரி ட்ராக்ட் அடைப்பு ஆண் குழந்தைகளுக்கே ஏற்படும்.) அடுத்து நஞ்சுக்கொடி மூலம் குழந்தைக்கு ரத்த ஓட்டம் குறையும் போதும் குழந்தையின் கிட்னி வளர்ச்சி குறைபாட்டின் காரணமாகவும் ஏற்படும் மிஹிநிஸி பிரச்னையாலும் பனிக்குட நீர் குறைந்து போகும். தாயிடமிருந்து ஏற்படும் பிரச்னைகளில் கர்ப்பப்பையில் ஏற்படும் நோய்தொற்று ஒரு முக்கியக் காரணம்.

கர்ப்பிணிக்கு ஏற்படும் ரத்த அழுத்தம், சிறுநீரகப் பிரச்னைகள் போன்றவையும் காரணமாகலாம். நஞ்சுக்கொடியானது முறையான வகையில் அமையாமல் ஏடாகூடமாக கர்ப்பப்பையில் ஒட்டி இருந்தாலும் பனிக்குட நீரின் அளவு மாறுபடும். பிரசவ தேதி தாண்டிப் போகும் போதும் இயல்பாக பனிக்குட நீர் குறைய ஆரம்பிக்கும்.

வயிற்றில் குழந்தையின் அசைவு தெரியவில்லை என்று வருவார்கள். அதுதான் இதற்கான பெரிய அடையாளம். குழந்தையைச் சுற்றி நாலா பக்கமும் இருக்கும் இந்த பனிக்குட நீர், குறைந்தது 2 செ.மீ. அளவிலாவது இருக்க வேண்டும். அதை விடவும் குறையும் போது குழந்தை சுற்றி வராமல் கர்ப்பப்பையினுள் ஒரே இடத்தில் ஒரே நிலையில் நின்று விடும்.

இதனால்தான் பிரசவத்தின் போது குழந்தை தலைகீழாக இருப்பதாகச் சொல்வார்கள். சில நேரங்களில் குறுக்கு நெடுக்காகவும் நின்று போகும். தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக அந்த நஞ்சுக்கொடியானது (Umblical cord) கர்ப்பப்பையோடு ஒட்டிக் கொண்டு விடும். இதனால் குழந்தைக்கு போகவேண்டிய ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் போவதால் குழந்தையின் மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காது.

அதனால் குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படலாம். நுரையீரல் வளர்ச்சியிலும் குறை ஏற்படலாம். பிரசவத்துக்கு முன்னும் பின்னும் குழந்தைக்கு மூச்சுத்திணறல் போன்ற நிறைய சிக்கல்களும் ஏற்படும். ஒரே நிலையில் இருப்பதால் Club foot எனப்படும் குழந்தைக்கு வளைந்த நிலை பாதங்கள் ஏற்படலாம்.

நஞ்சுக்கொடியின் அழுத்தத்தின் காரணமாக குழந்தையின் முகத்திலும் மாறுதல்கள் ஏற்படலாம். இன்னும் நீர் வற்றும் போது குழந்தையின்உயிருக்கே கூட பாதிப்பு ஏற்படலாம் என்பதால்தான், பனிக்குட நீர் மிகவும் குறைந்து காணப்படும் நிலையை எமர்ஜென்ஸி சூழ்நிலை என்கிறோம். சிலருக்கு கர்ப்பப்பை ரொம்ப சிறியதாக இருப்பதைப் பார்த்துக் கூட பனிக்குட நீர் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதைக் கண்டறியலாம்.

கர்ப்பத்தின் ஆரம்ப கால ஸ்கேன்களில் தோன்றும் மாறுபாட்டால், ஒருவேளை பனிக்குட நீர் குறைபாடு ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்டால் குரோமோசோமல் டெஸ்ட் செய்து பார்ப்பார்கள். எதனால் இப்பிரச்சனை ஏற்படுகிறது? இதை சரிசெய்ய முடியுமா? குழந்தையின் நிலை எவ்வாறு இருக்கிறது? இவற்றைப் பொறுத்தே அந்த கர்ப்பத்தைநீட்டிப்பதா வேண்டாமா என ஆலோசனை செய்யப்படும்.

குழந்தை மோசமான நிலையை தாண்டிவிடும் பட்சத்தில் ஆறாம் மாதத்தில் குழந்தையின்அனாடமியை பரிசோதித்துப் பார்க்க வேண்டும். தண்ணீரின் அளவு எவ்வளவு இருக்கிறது? நஞ்சுக்கொடியில் ரத்த ஓட்டம் சீராக இருக்கிறதா? குழந்தையின் மூளைக்குத் தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்கிறதா? இவற்றையெல்லாம் கடைசி 3 மாதங்களில் பரிசோதிப்பார்கள் (Doppler study). தண்ணீர் குறைவாக இருக்குமானால் கர்ப்பிணி நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

நிறைய ஓய்வு எடுக்க வேண்டும். புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். கால் வீங்கி இருந்தால், கீழே தொங்கப்போடாமல் நீட்டி வைத்துக்கொள்ளலாம். தாய்க்கு ரத்த அழுத்தம் இருந்தால் அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தையின் நுரையீரல் முறையான வளர்ச்சி அடைந்து விட்டது என்றால் நார்மல் டெலிவரிக்கு ஏற்பாடு செய்யலாம்.

ஒருவேளை பிரசவத் தேதி தாண்டி போனாலோ, டாப்ளர் ஸ்டடியில் பிரச்சனை இருந்தாலோ, இவ்வளவு கவனிப்புக்குப் பின்னும் பனிக்குட நீர் குறைந்து கொண்டே போனாலோ குழந்தையின் இதயத் துடிப்பு சரியில்லை என்றாலோ உடனடியாக சிசேரியன் செய்ய வேண்டியிருக்கும். கர்ப்ப காலம் முழுவதும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் கடைசி நேரத்தில் பனிக்குட நீர் பாதி போன பின் மருத்துவமனைக்கு வந்தால் அதுவும் பிரச்சனைதான். அப்போது முடிந்த வரை கர்ப்பப்பைக்கு செயற்கையாக நீரை ஏற்றி (Amnio infusion) சுகப்பிரசவம் செய்ய முயற்சிப்பார்கள்.

சில நேரங்களில் குழந்தை வயிற்றுக்குள்ளே மலம் கழித்துவிடும். அப்போதும் இந்த அம்னியா இன்ஃப்யூஷன் செய்யும் போது குழந்தை அந்த மலத்தை முழுங்காமல் இருக்கும். அப்படியும் முடியாத போது சிசேரியன் தான் செய்ய வேண்டி வரும். இல்லையெனில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுவிடும். சிலர் நீர் முழுவதும் வடிந்தபின் வருவார்கள்.

அது ரொம்ப ரிஸ்க். உடனடி சிசேரியன் தேவைப்படும். இவ்வளவு பிரச்சனைக்குப் பிறகு குழந்தை பிறந்த பின், மலஜலம் ஒழுங்காகக் கழிக்கிறதா? மஞ்சள் காமாலை இருக்கிறதா? நுரையீரல் வளர்ச்சி சரியாக இருக்கிறதா? சர்க்கரையின் அளவு ஓ.கே.வா? என அனைத்தையும் பரிசோதிப்பார்கள். பனிக்குட நீர் பற்றாக்குறையால் ஏற்படும் பல பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே பார்த்தால் சரிசெய்து விட முடியும்.

ஆண் குழந்தைகளுக்கு ஏற்படும் யூரினரி ட்ராக்ட் அடைப்பை வயிற்றுக்குள்ளேயே சர்ஜரி மூலமாக நீக்கி விட முடியும். தாய்க்கு ஏற்படும் கர்ப்பப்பை நோய்த்தொற்றுக்கு ஆன்டிபயாடிக் எடுத்துக்கொண்டால் சரியாகும். தாயினால் ஏற்படும் பிரச்சனையாக இருந்தால் அடுத்த குழந்தைக்கும் இந்தப் பிரச்சனை வர வாய்ப்புண்டு.Similar Threads: