கருப்பையிலுள்ள சிசு குறித்து அறிய உதவும் நூதன "பெல்ட்'

கருப்பையில் உள்ள சிசுவின் இதயத்துடிப்பு உள்ளிட்ட ஒவ்வொரு அசைவையும் அறிய உதவும் நூதனமான "பெல்ட்' உருவாக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலைச் சேர்ந்த நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த பெல்ட்டை கருவுற்ற பெண்கள் அணிந்து கொண்டு, சிசுவின் இதயத் துடிப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கண்காணிக்கலாம்.

கருப்பையிலுள்ள சிசுவின் அசைவுகளைக் கண்காணிக்கும் நூதமான பெல்ட்டை இஸ்ரேலைச் சேர்ந்த நூவோ குழுமம் உருவாக்கியுள்ளது. இந்நிறுவனத்தின் தலைவர் ஓரன் ஓஸ் ஜெருசலேமில் கூறியதாவது:

இந்த பெல்ட்டில் இ.சி.ஜி. உள்ளிட்ட 13 நுண்ணுணர்வுக் கருவிகள் (சென்சர்) பொருத்தப்பட்டுள்ளன. கருவுற்ற பெண் இதனை தனது இடுப்பில் அணிந்து கொள்ளும்போது, சிசுவின் இதயத் துடிப்பு, அதன் அசைவுகள் உள்ளிட்டவை கண்காணிக்கப்பட்டு, அந்த தகவல்கள் சேமிக்கப்படும்.

இந்தத் தகவல்கள் கணினியில் உடனுக்குடன் ஆய்வு செய்யப்பட்டு, இறுதித் தகவல்களைத் தனது ஸ்மார்ட்போன் வழியாக அந்தப் பெண் பெற இயலும். இந்த பெல்ட்டை அணிந்து கொள்ள மருத்துவரின் ஆலோசனை தேவையில்லை. கர்ப்பிணிகளே அணிந்து கொண்டு முழுமையாகப் பயன்படுத்தலாம். இந்த நூதன பெல்ட் மூலம், சிக்கலான பிரசவப் பிரச்னைகளை முன்கூட்டியே அறிந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகள் பெற இயலும்.

மருத்துவமனை அல்லது பரிசோதனை நிலையத்துக்குப் பெண்கள் நேரில் சென்று ஆலோசனைகள் பெறுவது தவிர்க்கப்படும்.

இவ்வாண்டு இறுதியில் விற்பனைக்கு வரவுள்ள இந்த பெல்ட்டின் விலை 200 டாலராக (சுமார் ரூ. 12,000) இருக்கும்.

அடுத்ததாக, மருத்துவர்களும் சிசுவினைக் கண்காணிக்கும் வகையிலான மேம்படுத்தப்பட்ட வடிவம் உருவாக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம், சிசுவின் விவரங்களை மருத்துவர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்தே கண்காணித்து, கர்ப்பிணிகளுக்கான ஆலோசனைகளை வழங்க முடியும் என்றார்.

Similar Threads: