கண்ணுக்கு பால்?

கண்களில் தூசியோ எரிச்சலோ இருக்கும் போது கண்களில் தாய்ப்பால் விடும் பழக்கம் இன்னும் இருந்து வருகிறது. இது சரியா? கண் மருத்துவர் நிர்ஹா ராவ்... இந்தப் பழக்கம் நகரங்களில் குறைந்து வருகிறது என்றாலும், சில கிராமங்களில் காண முடிகிறது. கிராமங்களில் வயல்வெளிகளில் வேலை செய்யும்போது அவசர மருந்தாக இதனை பயன்படுத்துவர். பெரும்பாலும் குழந்தைகளுக்கு கண்களில் தூசி படும்போதே இப்பழக்கத்தை மேற்கொள்கின்றனர். பெரியவர்களுக்கும் எப்போதாவது பயன்படுத்துவது உண்டு.

ஆனால், இது முற்றிலும் தவறான ஒரு பழக்கம். தாய்ப்பாலில் மருந்தின் மூலக்கூறுகள் எதுவுமில்லை. கண்ணை குணப்படுத்தும் ஆன்டிபயாடிக் எதுவும் அதிலில்லை. தாய்ப்பால் சுரக்கும் முதல் சில மணி நேரங்களில் வரும் சீம்பாலில் கொஞ்சம் ஆன்டிபயாடிக் இருக்கும். அதுவும் கண்ணுக்கானது அல்ல. குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுப்பதற்கானதே அது.

தாய்ப்பால் விடுவது, சில நேரங்களில் கண்ணுக்குப் பாதிப்பைக்கூட ஏற்படுத்தி விடக்கூடும். தூசியினால் உறுத்தல் ஏற்படுகிறது என்று நினைத்திருப்பார்கள். அது வேறு ஒரு  பிரச்னையாகக்கூட இருக்கக்கூடும். அதனால் கண்ணில் ஏதாவது உறுத்தல், எரிச்சல் போன்றவை இருந்தால் கண் மருத்துவரைப் பார்த்து, அவர் அறிவுறுத்தியபடி சொட்டு மருந்து விட வேண்டியது அவசியம்.


Similar Threads: