ராதா, ஹேர் டிரஸ்ஸிங் நிபுணர்ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்வது, 19 ஆம் நூற்றாண்டிலிருந்தே நடைமுறையில் இருந்து வரும் வழக்கம். மேலை நாடுகளில் பெரும்பாலான பெண்களுக்கு சுருள் முடி இருந்தது. சுருள் முடியை ஸ்ட்ரெய்ட்டனிங் செய்வதன் மூலம் கூந்தல் நீளம் அதிகரித்து, தோற்றத்தையும் அழகாகக் காட்டும் என்பதால் அவர்கள் இதை விரும்புகின்றனர்். தலை முடியை, ஏற்கனவே கலரிங் அல்லது ஸ்ட்ரெய்ட்டனிங் செய்யப்பட்ட தலைமுடி (sensidised hair) (இதை உணர்வுத் திறன் அதிகம் உள்ள முடி என்றும் சொல்லலாம்), இயற்கையான தலைமுடி (Natural hair), சுருள் முடி (curl hair) என மூன்று வகையாகப் பிரிக்கலாம். இந்த மூன்று வகை தலைமுடிகளுக்கும் ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்துகொள்வதற்கு வெவ்வேறு கிரீம்கள் இருக்கின்றன. அவற்றைத்தான் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் எடுத்துக்கொள்வதற்கான தேவை இருக்கிறதா, இதன் பின்விளைவுகளை முடி தாங்குமா, இந்த சிகிச்சைக்கென உள்ள கிரீம்கள் நம் தலைமுடிக்கு ஒத்துவருமா, என்பவற்றை முதலில் யோசித்து, சோதனை செய்த பிறகு தலையைக் கொடுப்பது நல்லது. ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்யப்படும் முறை: முதலில் தலைமுடியை நன்றாகத் தண்ணீரில் அலசிக் காயவைத்து, பிரத்யேகமான கிரீம்களைத் தடவ வேண்டும். அதன் பிறகு, தலையில் இருக்கும் முடிகளைப் பகுதி பகுதியாகப் பிரித்து அயன் செய்யப்படும். சுருள் முடி இருப்பவர்களுக்கு அயனிங் செய்யும்போது இன்ச் பை இன்ச் கவனித்து செய்ய வேண்டும். பிறகு, 40 நிமிடங்கள் கழித்து மாய்ஸ்ச்சரைஸர் தடவப்படும். இதே செய்முறையைத் தொடர்ந்து மேலும் இரண்டுமுறை செய்ய வேண்டும். ஒரு முறை ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்துகொள்ளக் குறைந்தது நான்கு மணி நேரம் ஆகும். ஆறு செ.மீக்கு மேலே முடி வளர்ந்தவர்களுக்கு மட்டுமே இது மேற்கொள்ளப்படுகிறது.கவனிக்கவேண்டியவை:
ஒரு முறை ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்துகொண்டவர்கள், 8 மாதம் முதல் ஒரு வருடத்துக்குப் பிறகுதான் மீண்டும் செய்துகொள்ள வேண்டும். தலையின் அடிப்பகுதியில் இருந்து 2 செ.மீ நீளம் வரை கிரீம்களைத் தடவக் கூடாது. குறிப்பாக தலையின் மேற்புறம் கிரீம் படவே கூடாது. தகுதியான பிராண்டட் பொருட்களைப் பயன்படுத்தும் அனுபவமிக்க பார்லர்களில் மட்டுமே ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்துகொள்ள வேண்டும். விலை குறைவு என்பதற்காக, தரமற்ற பொருட்களை உபயோகப்படுத்தும் அழகு நிலையங்களில் செய்துகொண்டால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். தோலில் அலர்ஜியும் ஏற்படலாம். பியூட்டீஷியன்கள், தகுதிவாய்ந்த ஹேர் டிரஸ்ஸர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் எங்கு செய்துகொள்கிறீர்களோ தொடர்ந்து அந்த ஸ்பாவுக்கு சென்று, ஆலோசனை பெறவேண்டும். அவர்கள் பரிந்துரைக்கும் கிரீம்
களை மட்டும் தடவி பராமரிப்பதன் மூலம் முடி நிலைத்தன்மையுடன் அதிக நாட்களுக்கு நீடிக்கும்.

முடி உடைந்து வலுவிழக்கலாம்!
மாயா வேதமூர்த்தி, தோல் மருத்துவர்: பொதுவாக நமது உடலில் முளைக்கும் முடிகள் வளைந்துதான் இருக்கும். முடியை நேராக நிமிர்த்துவதற்கு முடியில் இருக்கும் ஹைட்ரஜன் பாண்ட்களை உடைத்தால்தான் சுருள் முடியை நேராக்க முடியும். இந்த முறைகளில் பயன்
படுத்தப்படும் கிரீம்களில் தயோகிளைக்கோலைட் இருக்கிறது. இதுவே, முடியில் இருக்கும் ஹைட்ரஜன் பாண்ட்களை உடைத்து முடியை நேராக்க உதவுகிறது. இவ்வாறு ஹைட்ரஜன் இணைப்புகளை செயற்கையான கிரீம்களைக் கொண்டு உடைக்கும்போது வலுவான முடி இலகுவாக மாறிவிடுகிறது. ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்துகொண்ட பலருக்கும் சில நாட்களிலேயே முடி உடைந்து கீழே விழுவதைக் காணலாம். ஏனெனில் இவர்களின் தலைமுடியில் இருக்கும் உறுதித்தன்மை நீங்கிவிடுகிறது எனவே வெயில் நேரங்களில் வெளியே சென்றாலோ, வெந்நீரில் குளித்தாலோகூட முடி உடைய ஆரம்பித்துவிடும். எனவே அழகுக்காக ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் தேவைதானா என்பதை மீண்டும் மீண்டும் யோசித்த பிறகே முடிவெடுங்கள்.
ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்துகொள்பவர்களின் கவனத்துக்கு:
1. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்தச் சிகிச்சையை எடுத்துக் கொள்ளவேண்டும்.
2. இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்பவர்கள் மென்மையான ஷாம்பூக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கட்டாயம் கண்டிஷனர் போட வேண்டும்.
3. ஒரு முறை ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்துகொண்ட பிறகு, முடி மிக மென்மையாக மாறிவிடும். எனவே, வெளியே செல்லும்போது சூரிய ஒளி படாதவாறு கேப் அணிந்து செல்ல வேண்டும். தலை குளிக்க, வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தக் கூடாது.

Similar Threads: