என்ன தான் முடி உதிர்வது பொதுவான பிரச்சனையாக இருந்தாலும், அதனை சாதாரணமாக நினைத்துவிட்டுவிட்டால், வழுக்கைத் தலையால் கஷ்டப்பட வேண்டியிருக்கும். ஒரு நாளைக்கு 100 முடி உதிர்வது சாதாரணம் தான். ஆனால் அதற்கு அதிகமாக உதிர்ந்தால், அதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதனை சரிசெய்ய முயல வேண்டும்.

இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்கங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு, உங்கள் அழகான தலைமுடியையும் தான் பாதிக்கிறது. எனவே உங்கள் தலைமுடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அந்த விஷயங்கள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். இங்கு இளமையிலேயே வழுக்கைத் தலை ஏற்படுவதற்கான சில முக்கிய காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன
தவறான ஷாம்பு இன்றைய இளம் தலைமுறையினர் நல்ல வாசனைமிக்க ஷாம்புக்களைத் தான் அதிகம் தேர்ந்தெடுத்து பயன்படுத்துகின்றனர். யாரேனும் ஒருவர் ஏதோ ஒரு ஷாம்பு நன்றாக உள்ளது என்று சொன்னால், உடனே அதனை வாங்கிப் பயன்படுத்துவர். இப்படி கண்ட கண்ட ஷாம்புக்களை மாற்றி மாற்றி பயன்படுத்தி வந்தால், இதனால் முடி உதிர்வது அதிகரிக்கத் தான் செய்யும். எனவே முடிந்த அளவு ஷாம்பு பயன்படுத்துவதைத் தவிர்த்து, சீகைக்காய் வாங்கிப் பயன்படுத்த ஆரம்பியுங்கள்.

சூடான நீர் குளியல் தலைக்கு மிகவும் சூடான தண்ணீரைப் பயன்படுத்தி வந்தால், குளிக்கும் போதே மயிர்கால்கள் வலிமையிழந்து கையோடு முடி வருவதைக் காண்பீர்கள். அதிலும் இப்படியே தலைக்கு சுடு தண்ணீரைப் பயன்படுத்தி வந்தால், தலையில் உள்ள இயற்கை எண்ணெய் நீக்கப்பட்டு, முடி அதிகம் கொட்டுவதோடு, முடி வறட்சி அதிகரித்து, முடி பொலிவிழந்து காணப்படும்.

போர் தண்ணீர் போர் தண்ணீரை தலைக்கு அதிகமாக பயன்படுத்தி வந்தால், மயிர்கால்கள் அழிவிற்கு உள்ளாகும். மேலும் போர் தண்ணீர் ஸ்கால்ப்பை பாதித்து, அதனால் முடியின் வேரை தளரச் செய்து முடி அதிகம் உதிர வழிவகுக்கும். எனவே முடிந்த அளவு போர் தண்ணீரை தலைக்குப் பயன்படுத்துவரைத் தவிர்த்திடுங்கள்.

சிகை அலங்காரப் பொருட்கள் இன்றைய இளம் தலைமுறையினர் தங்களின் முடியை அழகாக வெளிக்காட்ட ஹேர் ஜெல், கலரிங் போன்ற சிகை அலங்காரப் பொருட்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இப்படி அதிகப்படியான கெமிக்கல் கலந்த சிகை அலங்காரப் பொருட்களைப் பயன்படுத்தினால், முடியின் வேர் கடுமையாக பாதிக்கப்பட்டு, முடி உதிர்வது அதிகரித்து, நாளடைவில் வழுக்கை தலையை ஏற்படுத்திவிடும்.
சூரியக்கதிர்கள் சூரியக்கதிர்களால் சருமத்திற்கு மட்டும் பாதிப்பில்லை, முடிக்கும் தான். எனவே எப்போதும் வெளியே செல்லும் போது, சூரியக்கதிர்கள் நேரடியாக தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பைத் தாக்காதவாறு, தக்க பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொண்டு, பின் செல்லுங்கள். எனவே தினமும் தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் எண்ணெய் தடவுங்கள்.

மருந்துகள் தற்போது இளமையிலேயே முதுமையில் தாக்கும் நோய்கள் வந்துவிடுவதால், அந்த பிரச்சனைகளுக்கு எடுக்கப்படும் மருந்து மாத்திரைகளால் முடி அதிகம் உதிரும். பெண்கள் பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை அதிக அளவில் எடுத்து வந்தால், அவர்களுக்கும் முடி அதிகம் உதிர்ந்து, வழுக்கைத் தலை ஏற்படும் வாய்ப்புள்ளது.
மன அழுத்தம் அமைதியாக இருந்து ஆளைக் கொல்லும் மன அழுத்தம், இன்றைய இளம் தலைமுறையினரிடம் அதிகம் உள்ளது. இதற்கு வேலைப்பளு தான் காரணம். மன அழுத்தத்தினால் உடல் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, தலைமுடி உதிர்வதும் அதிகரிக்கும். அதனால் தான் மிகப்பெரிய கம்பெனிகளில் வேலை செய்வோரின் தலை வழுக்கையாக உள்ளது. எனவே மன அழுத்தத்தைக் குறைக்க தினமும் யோகா, தியானம் போன்ற மனதை அமைதியடையச் செய்யும் செயல்களில் ஈடுபடுங்கள்.

Similar Threads: