பள்ளிச் சிறுவர்களைக் குறி வைக்கும் போதைப் பொருட்கள்!


நம்ம ஊர்ல போதை ன்னா அது வெறும் மது மட்டும்தான்னு நினைக்கிறாங்க. புகை, புகையிலையை உடல்நலம் கெடுக்கற விஷயமா மட்டுமே பார்க்கறாங்க; அதன் போதைக்கு அடிமையாகி வாழ்வைத் தொலைப்பவர்கள் பற்றிப் பெரிதாகப் பேசறதே இல்லை. மதுவை படிப்படியா நிறுத்த ஆரம்பிச்சிருக்குற கேரளா, ‘பள்ளிக்கூடங்களைச் சுற்றி 400 மீட்டர் சுற்றளவுக்குள்ளே புகையிலைப் பொருட்கள் விற்கக் கூடாது’ன்னும் தடை விதிச்சிருக்கு. ஆனா இங்கே... புதுசு புதுசா புகையிலை போதைகள் பள்ளிக் குழந்தைகளைக் குறி வச்சே வருது.

புகையிலை நிறுவனங்கள் வருங்கால ‘கஸ்டமர்களை’ பள்ளிதோறும் உருவாக்கிட்டிருக்கு!’’ - ஆதங்கம் பொங்குகிறார் அலெக்ஸ் சிரில். போதைக் கட்டுப்பாட்டுக்கான தமிழக மக்கள் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் இவர்.‘‘சமீபகாலமா நம்ம ஊர் பள்ளிக்கூடங்களைச் சுத்தி ‘கூல் லிப்’னு ஒரு பொருள் அமோகமா விற்பனை ஆகுது. சின்னச் சின்ன புகையிலை போதைப் பொருள் அடங்கின பொட்டலங்கள் இந்த பாக்கெட்டுக்குள்ள இருக்கும். 10 முதல் 15 பொட்டலங்கள் இருக்குற பாக்கெட் 12 ரூபாயிலிருந்து 15 ரூபாய்க்கு விற்கப்படுது.

இதை உதட்டுக்குள்ளேயோ அல்லது நாக்குக்கு அடியிலோ வச்சிக்கிட்டா போதை ஏறும். இதில் வாசனை கிடையாது, வாய் சிவக்காது, பக்கத்துல வந்தா கூட யாராலயும் கண்டுபிடிக்க முடியாது. இதனால டீச்சருக்குக் கூடத் தெரியாம பசங்க பல பேர் இதைப் பயன்படுத்துறாங்க. சிகரெட்ல இருக்குற மாதிரியே நிக்கோட்டின் கலந்த புகையிலை வஸ்துதான் இது. அதனால இதை ஒருதரம் பயன்படுத்தினவங்க விடவே முடியாத அளவுக்கு அடிமையாவாங்க!’’ என்கிற அலெக்ஸ், இதற்குப் பின்னால் பெரும் சதியும் லாப வெறியும் இருப்பதாகச் சொல்கிறார்.

‘‘பள்ளிக் குழந்தைகள்கிட்ட புகையிலை விளம்பரத்தைச் செய்யவும் புகை அடிமைகளா அவங்களை உருவாக்கவும் இங்கே மிகப் பெரிய அளவில் டீலிங் நடக்குது. இந்தியாவில் புகையிலை வியாபாரத்தில் நம்பர் ஒன் நிறுவனம் ஐ.டி.சி.தான். இங்கே விற்குற சிகரெட்டுகள்ல பெரும்பாலான பிராண்ட் இவங்களோடதுதான். ஆனா, அவங்க இப்போ மற்ற நுகர்வுப் பொருட்கள் தயாரிப்புலயும் கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டாங்க. முக்கியமா குழந்தைகள் விரும்புற பொருட்கள். சிப்ஸ் பாக்கெட், நூடுல்ஸ், பிஸ்கெட், ஏன்... குழந்தைகளுக்கான நோட்டுப் புத்தகங்களைக் கூட அந்த நிறுவனம் தயாரிக்குது. தன்னோட நிறுவனப் பேரையும் சின்னத்தையும் திரும்பத் திரும்ப விளம்பரங்கள்ல சொல்லி, குழந்தைகள் மனசுல ஒரு பிராண்ட் வேல்யூவை உருவாக்குறாங்க.

இது மட்டுமில்ல... சிகரெட்டுகளைத் தயாரிக்கிற இதே ஐ.டி.சி நிறுவனம், சிகரெட் பழக்கத்தை மறக்குறதுக்காக ஒருவித மருந்தையும் தயாரிக்குது. சிகரெட் தயாரிப்புல சுமார் 4000க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் பயன்படுத்தப்படுது. ஆனாலும், அதில் இருக்குற நிக்கோட்டின்ங்கற பொருள்தான் ‘திரும்பத் திரும்ப இதை வாங்கிப் பயன்படுத்தணும்’ங்கிற அடிமைத்தனத்தை ஏற்படுத்துது. சிகரெட் பழக்கத்தை மறக்கடிக்கிற இந்த மாதிரி மருந்துகளும் அந்த நிக்கோட்டினைக் கொடுத்துடுறதால, மக்கள் சிகரெட்டை மறந்து இதுக்கு அடிமையாவாங்க. இதுதான் இந்த மாதிரி மருந்துகளுக்குப் பின்னால இருக்குற உளவியல்.

இந்தியாவில் ஏகப்பட்ட மருந்துக் கம்பெனிகள் இப்படிப்பட்ட புகை மறக்கடிக்கிற மருந்துகளைத் தயாரிக்கிறாங்க. அதெல்லாம் ஃபார்மஸிகள்லதான் கிடைக்கும். ஆனா, ஐ.டி.சி சூயிங்கம் வடிவுல தயாரிக்கிற இந்த மருந்து சாதாரண கடைகள்லயே கிடைக்குது. எங்களோட ஆய்வுல இந்த சூயிங்கங்களுக்கும் பள்ளி மாணவர்கள் நிறைய பேர் அடிமையாகியிருக்காங்கனு தெரிய வந்திருக்கு. இன்னைக்கு இதை வாங்கிப் பயன்படுத்துற சிறுவர்கள்தான் வளர்ந்த பிறகு மற்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாவாங்க. ஆக, இதெல்லாம் ஸ்டார்ட்டர்ஸ் மாதிரி!’’ என்கிறார் அலெக்ஸ் கவலையுடன்.

சரி, இதை எப்படித்தான் தடுப்பது?‘‘குட்கா, பான் மசாலாவுக்கு நம்ம ஊர்ல தடை இருக்கு. ஆனா, அது எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுதுனு நமக்கெல்லாம் தெரியும். கடைகள்ல சரம் சரமா தொங்கவிட்டு விற்றவர்கள், இப்போ உள்ளே மறைச்சு வச்சு அதிக விலைக்கு விக்கறாங்க. அவ்வளவுதான்!

பஞ்சாப்ல தயாராகுற ‘கூல் லிப்’ போதையும் அதே ரூட்லதான் தங்கு தடையில்லாம இங்கே கிடைக்குது. சொல்லப் போனா அங்கே இந்த போதைக்கு தடை இருக்கு. தயாராகுற இடத்துல எதையும் தடுத்து நிறுத்தாம சும்மா கண் துடைப்புக்கு சில கடைகள்ல மட்டும் ரெய்டு நடத்தி போதை ஒழிப்புனு காட்டிடறாங்க. ‘புகையிலை நிறுவனங்களுக்கும் அரசியலுக்கும் தொடர்பே இருக்கக் கூடாது’னு இந்தியாவில் சட்டம் இருக்கு. ஆனாலும் அவர்கள் கொடுக்கும் கோடிகளில்தான் இங்கே அரசியலே நடக்கிறது.

இப்படிப்பட்ட நிறுவனங்கள் தாங்கள் சம்பாதிக்கும் லாபத்திலிருந்து சுமார் 5 முதல் 10 சதவீதத்தை சமூக சேவைக்காக ஒதுக்கணும்னு சட்டம் கொண்டு வந்தாங்க. ஆனா, அதையும் சாதிக்க முடியலை. குறைந்தபட்சம் பள்ளிகள் பக்கத்துல இந்த மாதிரி வஸ்துக்கள் கிடைக்காம செய்யணும்ங்கிறதுதான் எங்க கோரிக்கை.

கடைக்காரர்களும், காவல்துறையும், சுற்றியிருக்குற பொதுமக்களும், ‘நம்ம பிள்ளைகளை இது சீரழிக்குது’ என்ற உண்மையைப் புரிஞ்சி செயலாற்றணும். கேரளாவைப் போல 400 மீட்டர் தூரம் வேண்டாம்... இந்திய சட்டத்தின்படி 100 மீட்டர் தூரத்திலாவது இந்த வகை புகையிலை போதைப் பொருட்களை கிடைக்காம பார்த்துக்கிட்டா வருங்காலத் தமிழகம் மட்டுமல்ல... இந்தியாவே காப்பாற்றப்படும்!’’ என்கிறார் அலெக்ஸ்.

நெருப்பில்லாமல் புகையாது... யோசிங்க மக்களே!


Similar Threads: