குண்டான குழந்தையா கொஞ்சம் உஷார்!

தற்காலப் பெற்றோர்கள் அதிகமாகக் கவலைப்படுவது, தங்களது குழந்தைகளின் பருத்த உடலை எண்ணித்தான். குழந்தைகள் நலச் சிறப்பு மருத்துவர்களிடம் பெரும்பாலான பெற்றோர்கள் செல்வது ஒரே கேள்வியோடுதான், "என் குழந்தை ஏன் திடீர்னு குண்டாயிட்டான்/ள். அவன்/ள் உடல் இளைக்க நாங்கள் என்ன செய்யவேண்டும்' என்பதுதான். குண்டான் குழந்தை என்றால் ஏன் பெற்றோர்கள் இவ்வளவு கவலைப்படுகிறார்கள்? என்ற கேள்வியோடு குழந்தைகள் நல மருத்துவர் லதா சந்திரசேகரனைத் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது,
முன்பெல்லாம், என் குழந்தை ஏன் ஒல்லியாகவே இருக்கிறது என்ற கவலையோடுதான் பெற்றோர்கள் வருவார்கள். அக்குழந்தை ஒல்லியாக இருந்ததற்கான காரணம், malnourishment அல்லது under nutrition.

அதாவது போதிய சத்து நிறைந்த உணவு பொருளைச் சாப்பிடாமல் இருப்பது அல்லது குறைவாகச் சாப்பிடுவது. இப்பொழுது உள்ள குழந்தைகளின் மிகப் பெரிய பிரச்னை இந்த obesity தான். அதாவது குண்டாக இருப்பது. இதற்கு என்ன காரணங்கள் என்று பார்த்தோமானால், junk foods-ஐ குழந்தைகளுக்கு கொடுப்பது, பெற்றோர்கள் இருவருமே வேலைக்குச் செல்வதால், பல வீடுகளில் லஞ்ச் பாக்ஸ்களில் நூடூல்ஸ்களையும், குழந்தைகள் பள்ளி முடிந்து வீடு வந்ததும் சமோசா, சிப்ஸ் போன்றவற்றையும் கொடுத்து அதையே ஓர் உணவு பழக்கமாக ஆக்கிவிடுகிறார்கள்.

அடுத்த காரணம், டி.வி.யைப் பார்த்துக் கொண்டே ஏதோ ஒன்றைச் சாப்பிட்டுக் கொண்டே இருப்பது. வெளியில் சென்று விளையாடுவதற்கு நேரமும் இல்லை, இடவசதியும் இல்லை என்ற காரணம் சொல்லிக் கொண்டு கம்ப்யூட்டருடனும், டி.வி.யுடனும் தங்களது பொன்மாலைப் பொழுதைக் கழிக்கும் குழந்கைள் நிச்சயம் ரொம்ப சீக்கிரமே குண்டாகிவிடுகிறார்கள்.

குழந்தைகள் குண்டாகாமல் சரியான உடல் பருமனோடு இருக்க வேண்டும் என்றால், அதற்கு பெற்றோர்கள் ஒரு நல்ல ரோல் மாடலாக இருக்க வேண்டும். தினமும் பெற்றோர்கள் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்து வந்தால், அதைப் பார்த்து குழந்தைகளும் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்பார்கள். நல்ல பொழுதை எல்லாம் டி.வி.யின் முன்னாலும், கம்ப்யூட்டரின் முன்னாலும் உட்கார்ந்து கொண்டு தங்கள் ஆரோக்கியத்தைத் தொலைப்பதைவிட உடற்பயிற்சி செய்வது ஒரு நல்ல பொழுதுபோக்கு என்ற எண்ணம் குழந்தைகள் மனத்தில் எழ, பெற்றோர்கள் வழிகாட்ட வேண்டும்.

சிறு வயதிலேயே உடல் பருமனானால், அக்குழந்தைக்கு தைராய்டு சுரப்பி கம்மியாக சுரக்கும் (ஹைப்போ தைராய்டிஸம்), பெண் குழந்தைகளுக்கு poly cystic ovaries வருவதற்கு வாய்ப்பு அதிகமாகும். இதை எல்லாம் நான் பயமுறுத்துவதற்காகச் சொல்லவில்லை. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் சொல்கிறேன் என்ற டாக்டர் லதா, தினம் சைக்ளிங், நடைப்பயிற்சி, ஓடி ஆடி விளையாடுவது, junk foodsகளைச் சாப்பிடாமல் இருப்பது, ஐஸ்க்ரீம், சாக்லெட்டுகளை அதிகம் சாப்பிடாமல் இருப்பது, நிறைய காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது என இருந்து வந்தால் உடல் பருமன் என்ற பேச்சுக்கே இடமிருக்காது அல்லவா? என்கிறார்.

நளினி சம்பத்குமார்
நன்றி : கல்கி

Similar Threads: