குழந்தைகளை பாதிக்கும் டென்ஷன்.. தடுக்கும் வழிகள்


டென்ஷன் காரணமாக பெரியவர்கள் மட்டுமல்ல, குழந்தைகளும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். அவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தை புரிந்து கொண்டு சிகிச்சை எடுக்காமல் விட்டால் அது அவர்களது வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். எதற்கும் அடம் பிடிக்கும் குழந்தைகள், கேட்டது கிடைக்காவிட்டால் மனஅழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். 6, 7 வயதிலேயே, நான் டென்ஷனா இருக்கேன் என்று சொல்லி மிரள வைக்கிறார்கள். இதற்கு தீர்வு காண்பது எப்படி? குழந்தைகளை மனஅழுத்தத்தில் இருந்து பாதுகாப்பது எப்படி? பதில் சொல்கிறார் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் இலியாஸ் பாஷா.
எந்த விஷயமும் குழந்தைகள் மனதில் பசுமரத்து ஆணி போலப் பதிந்து விடுகிறது.

எனவே குழந்தைகள் மீது பெற்றோர் அதிக கோபம், தங்கள் டென்ஷனை காட்ட கூடாது. அவர்கள் மனதில் பாசிட்டிவான விஷயங்கள் பதிவாக வேண்டும். தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களில் இருந்தே பலவற்றையும் குழந்தைகள் கற்றுக்கொள்கின்றன. இதனால் பெற்றோர் டென்ஷனை தவிர்ப்பது அவசியம். குழந்தைகளின் மனம் மென்மையானது. விரும்பிய விஷயம் நடக்காத போது மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். தாங்கள் சொல்வதை குழந்தை அப்படியே கேட்க வேண்டும் என பெற்றோர் நினைப்பது தவறு. அடித்து துன்புறுத்துதல், குழந்தைகளிடம் பாரபட்சம் காட்டுதல், பள்ளியில் அதிக பாடச்சுமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குழந்தைகளை உளவியல் சிக்கலுக்கு ஆளாக்குகிறது. இதன் விளைவாக சில குழந்தைகள் வழக்கத்துக்கு மாறாக அமைதியாகி விடுகின்றனர்.

சில குழந்தைகளிடம் அடம் பிடித்தல், எதிர்த்து பேசுதல், பெரியவர்களை மதிக்காமல் நடத்தல் போன்ற மாற்றங்களைப் பார்க்க முடியும். அடுத்த கட்டமாக திருடுதல், பொய் சொல்லுதல் மற்றும் கொலை போன்ற குற்ற செயல்களில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது. உளவியல் சிக்கல் காரணமாக குழந்தைகளின் கற்றல் திறன் பாதிக்கப்படும். சரியாக சாப்பிடாத காரணத்தால் சத்து குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் மற்றும் சோர்வும் காணப்படும். தூக்கம் வராமல் தவித்தல், கெட்ட கனவுகள், படுக்கையில் சிறு நீர் கழித்தல் ஆகியவையும் உண்டாகும். இவை மனஅழுத்தம், பதற்றத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்தும். பிரச்னை பெரிதாகும் போது மாத்திரைகளின் பயன்பாடு அவசியமாகி விடும். குழந்தைகளின் நடவடிக்கைளை கவனிப்பது பெற்றோர்களின் பொறுப்பு. குழந்தைகளை புரிந்து கொண்டு நடப்பது சிறந்தது என்கிறார் டாக்டர் இலியாஸ் பாஷா.

பாதுகாப்பு முறை

டென்ஷனிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் முறைகள் பற்றி விளக்குகிறார் உளவியல் நிபுணர் தேவிப்பிரியா. குழந்தையின் தன்மையைக் கண்டறிவது முதல்படி. எது பிடிக்கும், எதில் ஆர்வம், எவ்வளவு நேரம் விளையாட நினைக்கிறது என்பதை பெற்றோர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ற பாடத்திட்டம் உள்ள பள்ளியை தேர்வு செய்து படிக்க வைக்க வேண்டும். குழந்தைகளின் உணர்வுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். அவர்கள் சொல்வதை காதுகொடுத்து கேட்க வேண்டியது அவசியம். அவர்களுக்கு பெற்றோர் மீது நம்பிக்கை ஏற்படும் விதமாக நடந்து கொள்ள வேண்டும். குழந்தைகளிடையே பாரபட்சம் காட்டாமல், அவர்களது விருப்பத்தை நிறைவேற்றுவது அவசியம். விளையாடுவதில் விருப்பம் உள்ள குழந்தைக்கு அதற்கான நேரம் ஒதுக்கி தர வேண்டும்.

பெற்றோர்தான் அவர்களின் ரோல் மாடல். அவர்கள் தங்களுக்குள் பிரச்னை வரும் போது குழந்தைகளையே நீதிபதியாக்கி தீர்வு கேட்கலாம். நமது பிள்ளைகளை எந்தளவு மதிக்கிறோம் என்பதை உணர்த்த இது ஒரு வழி. சுதந்திரமான சூழல் வீட்டில் நிலவினால் அவர்களும் தங்களது விருப்பம், பிரச்னைகளை தயக்கம் இன்றி பெற்றோரிடம் சொல்வார்கள். இந்த முறையில் குழந்தைகளுக்கு ஏற்படும் சின்ன சின்ன டென்ஷன்களை எளிதில் சரி செய்து விடலாம். பெற்றோர் தங்களது விருப்பத்தை குழந்தைகள் மீது திணிப்பது குறைவு. வீட்டிலும், பள்ளியிலும் மன அழுத்தத்தை சந்திப்பதன் காரணமாக அவர்கள் கற்றல் திறன் குறைகிறது. எனவே முறையான கவுன்சலிங் மற்றும் நடத்தை மாற்றங்கள் மட்டுமே இதற்கு சரியான தீர்வாக அமையும் என்கிறார் தேவிப்பிரியா.

ரெசிபி

ஹெல்தி சமோசா: கோதுமை பிரட் 10 துண்டுகள் எடுத்துக் கொள்ளவும். கடலைபருப்பு, பாசிபருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவை தலா இரண்டு டேபிள் ஸ்பூன் அளவுக்கு எடுத்து வேகவைத்து மசித்துக் கொள்ளவும். ஒரு உருளைக் கிழங்கையும் தனியாக வேகவைத்துக் கொள்ளவும். பிரட்டை தண்ணீரில் நனைத்து பிழிந்து உப்பு சேர்த்து சப்பாத்தி போல தேய்த்துக் கொள்ளவும். வேக வைத்த பருப்பு வகைகள், உருளைக் கிழங்கு மசித்து அத்துடன் சீரகம், பெருங்காயத் தூள், பூண்டுத் துறுவல், சிவப்பு மிளகாய் சிறு துண்டுகளாக்கி சேர்க்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் இரண்டு கப் மற்றும் உப்பு சேர்ந்து பிரட் தவிர அனைத்தையும் கலந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் வைத்து காய்ந்த பின்னர் பிரட் சப்பாத்தியின் நடுவில் பூரணத்தை வைத்து சமோசா போல மடித்து பொரித்து எடுக்கவும். இதில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து உள்ளது.

லெமன் சப்போட்டா ட்ரிங்க்: சப்போட்டா 3, வாழைப்பழம் 1 ஆகியவற்றை மிக்சியில் அடித்துக் கொள்ளவும். இத்துடன் தேவையான அளவு தண்ணீர், பைனாப்பிள் எசன்ஸ் கொஞ்சம், எலுமிச்சை சாறு ஒரு துளி, தேவையான அளவு சர்க்கரை சேர்த்து ஜூஸ் போல தயாரிக்கவும். இதில் தாதுக்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதை சாப்பிடும் போது பசி தீரும். வயிறு நிறைந்து டென்ஷன் வெகுவாக குறையும்.

கீரைப்பணியாரம்: பசலைக் கீரையை ஆய்ந்து 5 நிமிடம் வேக வைத்து மிக்சியில் உப்பு சேர்த்து அடித்துக் கொள்ளவும். அரிசி மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கேரட் துருவல், பூண்டு மூன்று பல், துருவிய பாதாம் சிறிது ஆகியவற்றுடன் கீரையும் சேர்த்து அரிசி மாவில் கலந்து கொள்ளவும். கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி சேர்க்கவும். இதனை பணியாரக் கல்லில் எண்ணெய் விட்டு ஊற்றி எடுக்கலாம். இந்தப் பணியாரம் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன் டென்ஷனை தடுக்கும்.

டயட்

குழந்தைகளின் டென்ஷனை குறைக்க எப்படி டயட் பின்பற்றுவது என்று சொல்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. வீட்டின் சூழலை குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி மாற்றுவது அவசியம். டென்ஷன் காரணமாக சாப்பாடே பிடிக்காமல் போகும். இதனால் சத்து குறைபாடு மற்றும் எதிர்ப்பு சக்தியின்மை, சோர்வு ஆகியவை ஏற்படும். பலகீனமாக காணப்படுவார்கள். சமைக்கும் போது அவர்களிடம் கேட்டு பிடித்த உணவு வகையை செய்து கொடுக்கலாம். அவர்களது சந்தோஷத்துக்கு நாம் மதிப்பளிக்கிறோம் என்ற உணர்வு உருவாகும். பிறகு உடல்நலனை சுட்டிக் காட்டி இந்தப் பிரச்னைக்கு இந்த உணவில் தீர்வு உண்டு என்று புரிய வைக்கலாம். இதன்மூலம் பிடிக்காத உணவை கூட சாப்பிட முயற்சிப்பார்கள். குழந்தைகள் உணவில் காரத்தை குறைக்கவும்.

பால் மற்றும் பால்பொருட்கள் சர்க்கரை கலந்து கொடுப்பது, இனிப்பு வகைகள் சாப்பிட தரலாம். இதே போல் சாப்ட் ட்ரிங்ஸ், சாலட் வகைகள், பாதாம், பிஸ்தா சேர்த்த ஐஸ்கிரீம் வகைகள் ஆகியவற்றை கொடுக்கலாம். தினமும் ஒரு கீரை வகை, பழச்சாறுகள் மூலம் உடலுக்கு தேவையான தாது சத்துக்கள் கிடைக்கும். மன நிலைக்கு ஏற்ப மூளையில் ஏற்படும் மாற்றத்தால் ஒருவகை அமிலம் சுரக்கிறது. இதன் காரணமாகவே கோபம், டென்ஷன் போன்றவை வருகிறது. இதை தவிர்க்க கோபத்துக்கான அறிகுறிகள் தென்படும் போதே இனிப்பு மற்றும் குளிர்ச்சியான பழச்சாறு, ஐஸ்கிரீம் சாப்பிடலாம். இதன்மூலம் கோபத்தால் ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம் என்கிறார் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

டென்ஷன் காரணமாக ஏற்படும் வயிற்று வலிக்கு அகத்திக்கீரை வேக வைத்த தண்ணீரில் தேன் கலந்து குடித்தால் குணமாகும்.

அதிமதுரம், சீரகம் இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் டென்ஷனால் உண்டாகும் தலைவலியை தடுக்கலாம்.

அமுக்காராவை பொடி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

அரைக்கீரையை சிறு பருப்புடன் சேர்த்து தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டால் உடலில் ரத்த உற்பத்தி அதிகரித்து ரத்த சோகை மறையும். நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

அறுவதா இலையை அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நன்றாக பசி எடுக்கும்.

ஆல்பகோடா பழம் 2, சீரகம் 20 இரண்டையும் வெந்நீரில் ஊற வைத்து அதிகாலையில் குடித்து வந்தால் அஜீரண கோளாறு சரியாகும்.

டென்ஷனால் உணவுகளை தவிர்ப்பவர்கள் பலவீனமாக இருப்பார்கள். அவர்கள் ஆவாரம் பிசின், பாதாம் பிசின், கருவேலம் பிசின் மூன்றையும் நெய் சேர்த்து வறுத்துப் பொடி செய்து, தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் தெம்படையும்.

குழந்தைகள் அடிக்கடி படுக்கையில் சிறுநீர் கழிப்பதை தடுக்க ஆவாரம் பூ, நாவல் கொட்டை, சிறு குறிஞ்சான் மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து தினமும் சாப்பிட கொடுக்கலாம்

இஞ்சியுடன் ஏலக்காயை சேர்த்து அரைத்து விழுதாக்கி, சுண்டைக்காய் அளவு தினமும் சாப்பிட்டு வந்தால் நன்கு பசி எடுக்கும்.

இஞ்சி சாற்றில் சம அளவு எலுமிச்சை சாறு கலந்து, சிறிது உப்பு சேர்த்துக் குடித்தால் அஜீரணக் கோளாறுகள் சரியாகும்.

இஞ்சிச் சாற்றில் தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்று வலி குணமாகும்.

Similar Threads: