வைட்டமின் டி பரிசோதனை


நாம் அதிகம் அறிந்திராத - ஆனால், அவசியமான ஒரு பரிசோதனை வைட்டமின் டி தொடர்பானது. இப்பரிசோதனையை எப்படி செய்கிறார்கள், வைட்டமின் டியின் அவசியம் என்ன என்பது குறித்து எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மருத்துவர் சி.டி.அழகப்பன் விளக்கமளிக்கிறார்.

வைட்டமின் டியின் முக்கியத்துவம் என்ன?

“மூளையின் சிறப்பான செயல்பாட்டுக்கும் இதயத்தின் நலனுக்கும், திசுக்களின் வளர்ச்சிக்கும் சுறுசுறுப்பான செயல்பாட்டுக்கும் வைட்டமின் டி அவசியம். உடலுக்குப் போதுமான கால்சியம் கிடைக்கவும் வைட்டமின் டி தேவை. உணவில் இருக்கும் கால்சியம் சத்தை ரத்தத்துக்கு எடுத்துச் சென்று, அதன்மூலம் எலும்புகளுக்குக் கால்சியத்தை கொண்டு செல்லும் வாகனம் போல வைட்டமின் டி செயல்படுகிறது. அதனால்தான் கால்சியம் மாத்திரைகள் கூட வைட்டமின் டியுடன் சேர்ந்தே வருகின்றன”.


பற்றாக்குறையால் என்னென்ன பிரச்னை?“கால்சியம் பற்றாக்குறை உண்டாகும். இதன் மூலம் குழந்தைகளுக்கு எலும்பு நேராக வளராமல், கோணலாகி விடும் ரிக்கெட்ஸ் பிரச்னை ஏற்படும். பெரியவர்களுக்கு எலும்பு பலவீனம் ஆகும் ஆஸ்டியோ மலேசியா பிரச்னை ஏற்படும். எந்த வேலையும் செய்ய முடியாத அளவு சிலர் களைப்பை உணர்வார்கள். இவர்களுக்கு வைட்டமின் டியும் கால்சியமும் கொடுத்தால் சரி செய்துவிடலாம்”.

வைட்டமின் டி பெற என்ன வழி?

“இந்தியர்களின் சருமம் மற்றும் உடலின் நிறம் அடர்த்தியாக இருப்பதால் சூரிய ஒளியில் இருந்து போதுமான வைட்டமின் டியை பெற முடிவதில்லை. சூரிய ஒளி 2 முதல் 3 மணி நேரம் நம் உடலில் பட்டால்தான் போதுமான வைட்டமின் டி கிடைக்கும். நாள் ஒன்றுக்கு பெரியவர்களுக்கு 2000 யூனிட்டும், குழந்தைகளுக்கு 1000 யூனிட்டும் வைட்டமின் டி தேவை.

உணவின் மூலமும் போதுமான வைட்டமின் டி கிடைப்பதில்லை. ஒரு நாளில் 6 டம்ளர் பால் குடித்தால்தான் தேவையான 1000 யூனிட் கிடைக்கும். மீன் என்றாலும் நிறைய சாப்பிட வேண்டியிருக்கும். சில வகை மீன்களில் மட்டும்தான் வைட்டமின் டி இருக்கிறது. அதனால், மாத்திரைகளாக எடுத்துக் கொள்வதில் தவறில்லை. இதனால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது”.

பற்றாக்குறையை எப்படிக் கண்டுபிடிப்பார்கள்?

‘‘வைட்டமின் டி அளவை நானோ கிராமாக அளக்கிறோம். சராசரியாக 30 முதல் 70 நானோ கிராம் வரை ஒருவருக்கு வைட்டமின் டி இருக்க வேண்டும். 30 நானோ கிராமுக்கும் குறைந்தால், அது பற்றாக்குறை. வைட்டமின்டி தேவைப்படும் குழந்தைகள் 1000 யூனிட் மாத்திரையை ஒரு வாரத்தில் சாப்பிடலாம். வயது வந்தவர்கள் 2000 யூனிட் அளவுள்ள ஒரு மாத்திரையை சாப்பிடலாம்.

10 நானோ கிராமுக்கு கீழ் இருந்தால் அது சிகிச்சைக்கு உட்பட்ட பற்றாக்குறை. இவர்களுக்கு வாரத்துக்கு 60 ஆயிரம் யூனிட் கால்சியம் தேவை. இந்த 60 ஆயிரம் யூனிட் அளவும் ஒரு மாத்திரையிலேயே அடங்கியிருக்கும். 8 வாரங்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு, வாரம் ஒரு மாத்திரை என்பதை மாதம் ஒரு மாத்திரையாக எடுத்துக் கொண்டால் போதும். மென்று சாப்பிடுவது போலவும் டானிக் போல திரவ வடிவிலும் வைட்டமின் டி உண்டு”.

யாருக்குப் பரிசோதனை அவசியம்?

“வைட்டமின் டி குறைபாடு எந்த வயதிலும், யாருக்கும் வரலாம். குறிப்பாக, சிலருக்கு உடலில் இனம்புரியாத வலி இருக்கும். என்ன பரிசோதனை செய்து பார்த்தாலும் காரணம் கண்டுபிடிக்க முடியாது. இவர்கள் வைட்டமின் டி பரிசோதனையை செய்துகொள்ளலாம். முதுகுவலிக்கு இருக்கும் பல காரணங்களில் வைட்டமின் டி பற்றாக்குறையும் ஒன்று. முதுகுவலி கொண்டவர்களும் வைட்டமின் டி பரிசோதனை செய்துகொள்வது நல்லது...’’

கட்டணம் எவ்வளவு?

‘‘ரத்தப் பரிசோதனையிலேயே வைட்டமின் டி பற்றாக்குறையைக் கண்டுபிடித்துவிடலாம். இதற்குக் கட்டணம் சராசரியாக 1000 முதல் 1,500 வரை. மாஸ்டர் ஹெல்த் செக்கப்பில் வைட்டமின் டியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்!’’


Similar Threads: