டெட்டனஸ் நோய்க்கு குட்பை!

டாக்டர் கு.கணேசன்

‘உடலில் காயம் ஏற்பட்டால், உடனே தடுப்பூசி போட்டுக்கோ’ என்று பலரும் நமக்கு இலவச ஆலோசனை சொல்வார்கள். அது எதற்குத் தெரியுமா? டெட்டனஸ்’ (Tetanus) என்ற நோய் வராமல் தடுப்பதற்குத்தான். பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் தாக்க வல்லது டெட்டனஸ் நோய். இந்த நோய்க்கு இழுப்புநோய், வில்வாத ஜன்னி, வாய்ப்பூட்டு நோய், ரணவாத ஜன்னி, நரம்பிசிவு நோய் என்று பல பெயர்கள் உண்டு. என்றாலும், ஓரளவு படிப்பறிவு உள்ளவர்களிடம் ‘டெட்டனஸ்’ என்ற பெயரே பிரபலம்.

‘கிளாஸ்ட்ரிடியம் டெட்டனி’ எனும் பாக்டீரியாக் கிருமியால் வருகிறது டெட்டனஸ் நோய். இது மனித மலம், விலங்குகளின் சாணம், துருப்பிடித்த உலோகப் பொருள்கள் போன்றவற்றில் உயிர் வாழும். இங்கு இது முழு கிருமியாக வெகுகாலம் உயிர்வாழ முடியாது. சூரிய ஒளி, அதிக வெப்பம், அதிக குளிர்ச்சி, பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றால் அழிந்துவிடும். எனவே, இவை எதுவும் தன்னை அழித்துவிடாதபடி தன் மேல் ஒரு பாதுகாப்பு உறையை உற்பத்தி செய்து ‘டெட்டனஸ் சிதல்களாக’ (Tetanus spores) உருமாறிக்கொண்டு வெகுகாலம் உயிர்வாழ்கிறது.

இந்தக் கிருமி காற்று மற்றும் ஈக்கள் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குப் பரவுகிறது. உடலில் ஏற்கனவே உள்ள திறந்த காயத்தின் வழியாக இது உடலுக்குள் நுழைவது ஒரு பொதுவான வழி. இது தவிர முள், துருப்பிடித்த ஆணி, கம்பி, ஊக்கு போன்றவை குத்தும்போது அவற்றின் வழியாகவும் உடலுக்குள் நுழைந்துவிடும். தொற்று நீக்கம் செய்யாமல் போடப்படும் ஊசிகள், சுத்தம் பராமரிக்கப்படாமல் செய்யப்படும் கருச் சிதைவுகள், கவனக்குறைவாகச் செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் போன்றவற்றின் மூலமும் இந்தக் கிருமி உடலுக்குள் புகுந்துகொள்ளும். நகச்சுற்று, சொறி, சிரங்கு, தீக்காயம், செவியில் சீழ் வடிதல், தொப்புள்கொடி புண், செருப்புக்கடி, சூடுபோடுதல், பச்சை குத்துதல் போன்றவை இந்தக் கிருமியின் வேறு சில நுழைவாயில்கள். காயத்தில் அல்லது புண்ணில் புகுந்துகொண்ட கிருமிகள் அங்குள்ள திசுக்களை அழிக்கும். சீழ் பிடிக்க வைக்கும். அப்போது புறநச்சுப் பொருள் (Exotoxin) ஒன்றை வெளிவிடும். இதுதான் ஆபத்தானது. இது மூளைக்குச் சென்று நரம்புத் திசுக்களை அழிக்கும். இதனால் உடலில் தசை இயக்கங்கள் பாதிக்கப்படும்.இந்த நோய் வந்துவிட்டால் வாயைத் திறக்க முடியாது. கழுத்தை அசைக்க முடியாது. திடீரென்று முதுகு வில் போல் வளையும். வயிறு மரப்பலகை போல் இறுகி விடும். கை, கால் தசைகள் விறைத்துக் கொள்ளும். நோயாளியின் உடலில் வெளிச்சம் பட்டால் உடனே வலிப்பு வரும். சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். இவற்றைத் தொடர்ந்து உயிரிழப்பும் ஏற்படும். டெட்டனஸ் நோயாளியை மருத்துவமனையில் அனுமதித்துத்தான் சிகிச்சை தர வேண்டும். வெளிச்சம் அதிகமில்லாத, அமைதியான தனி அறையில் இவர்களுக்கு சிகிச்சை தரப்
படும். தசை இறுக்கத்தைக் குறைக்கும் மருந்துகளும் உறக்க மருந்துகளும் தரப்படும். டெட்டனஸ் கிருமிகளை அழிப்பதற்கான பெனிசிலின் போன்ற ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளும் தரப்படும். இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது ‘ஆன்டி டெட்டனஸ் சீரம்’ (Anti Tetanus Serum - ATS) என்ற நச்சு முறிவு மருந்துதான். இது டெட்டனஸ் கிருமிகள் உடலில் உற்பத்தி செய்திருக்கின்ற புற நச்சுப்பொருளின் வீரியத்தைக் குறைத்து நோயின் பாதிப்பிலிருந்து நோயாளியை விடுவித்து உயிரைக் காக்கிறது.

இந்த மருந்தைக் கண்டுபிடித்ததில் ஜெர்மனியைச் சேர்ந்த நான்கு பேருக்கு பங்கு உண்டு. எமில் வான் பெரிங், எரிச் வெர்னிச், கிட்டாசாட்டோ, பால் எர்லிச். இவர்கள் ராபர்ட் காக் பரிசோதனைக்கூடத்தில் பணியாற்றியபோது 1890ல் இந்த மருந்தைக் கண்டுபிடித்தனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், உலக அளவில் மருந்துகளைக் கொண்டு கிருமிகளை அழிக்கும் முறைகளைக் கண்டுபிடிப்பதில்தான் எல்லா ஆராய்ச்சியாளர்களும் ஆர்வம் காட்டினர். ஆனால் பெரிங் மட்டும் ரத்தத்தில் உள்ள ‘சீரம்’ எனும் திரவத்தைக் கொண்டு ஒரு நோயைக் குணப்படுத்த முடியுமா என்ற ஆராய்ச்சியில் இறங்கினார். 1890 வரை ஜெர்மனியில் ஆண்டுதோறும் தொண்டை அடைப்பான் மற்றும் டெட்டனஸ் நோய்களால் லட்சக்கணக்கான மக்கள் இறந்துவந்தனர். எனவே இந்த நோய்களுக்கான மருந்தைக் கண்டுபிடிக்க ஆசைப்பட்டார் பெரிங்.

டெட்டனஸ் மற்றும் தொண்டை அடைப்பான் கிருமி களைக் கொன்று, அவற்றை வீரியம் இழக்கச்செய்து, மிகச் சிறிதளவில் அதை முயல், எலி, சீமைப் பெருச்சாளி போன்றவற்றுக்குச் செலுத்தினார். இவற்றின் ரத்தத்தில் இருக்கும் சீரம் தெளிநீரில் இந்த நோய்களுக்கான எதிர் அணுக்கள் உற்பத்தியானதைக் கண்டுகொண்ட அவர், அந்த சீரத்தைப் பிரித்தெடுத்துக் கொண்டார். பின்பு, இந்த இருவகைக் கிருமிகளை சற்று அதிக அளவில் வேறு புதிய விலங்குகளுக்குச் செலுத்தினார். இவற்றுக்குச் செலுத்தப்பட்ட கிருமிகளுக்கு ஏற்ப தொண்டை அடைப்பான் அல்லது டெட்டனஸ் நோய்கள் வந்துவிட்டன. உடனே தான் ஏற்கனவே சேகரித்து வைத்திருந்த எதிர் அணுக்கள் கொண்ட சீரத்தை இவற்றுக்குச் செலுத்தினார். சில வாரங்களில் அந்த விலங்குகளுக்கு நோய் குணமானது. எனவே, உலகில் ‘ஆன்டி சீரம் சிகிச்சை’ (Anti serum therapy) எனும் புதிய சிகிச்சை முறைக்கு அடி போட்டவர் என்ற பெருமையை பெரிங் பெற்றார். இந்தக் கண்டுபிடிப்பில் அவருடைய நண்பர்கள் எரிச் வெர்னிச் மற்றும் கிட்டாசாட்டோ பெரிதும் உதவினர்.

1891ல் இது மனிதப் பயன்பாட்டுக்கு வந்தது. என்றாலும், இந்த ரத்த சீரத்தை சுத்தப்படுத்தி தயாரிப்பதிலும் தரக்கட்டுப்பாடு செய்வதிலும் சில சிரமங்கள் ஏற்பட்டன. இதற்கு வழி தெரியாமல் பெரிங் திணறிக்கொண்டிருந்தபோது பால் எர்லிச் இவருக்கு உதவ முன்வந்தார். செம்மறியாடு மற்றும் குதிரைகளின் ரத்த சீரத்தில் இந்த நோய்களுக்கான எதிர் அணுக்களை உற்பத்தி செய்து மருந்து தயாரித்தார். இதைத் தொடர்ந்து 1908ம் ஆண்டில் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இன்றைக்கும் இந்த மருந்துதான் டெட்டனஸ் நோய்க்கு குட்பை சொல்லும் மகத்தான மருந்தாகச் செயல்படுகிறது.


Similar Threads: