ஒற்றைத் தலைவலி மூளைக்கட்டியின் அறிகுறியா?


தலையினுள் சம்மட்டியால் அடிப்பது போல இருக்கிறதா? ஒரு பக்கமாக வலிக்கிறதா? கண்ணை மூடிக்கொண்டு இருந்தால் போதும் என்றிருக்கிறதா?
`ஆமாப்பா, ஆமாம்’ என்பது கேட்கிறது. அப்படியானால் உங்களுக்கு வந்திருப்பது `மைக்ரேன்’ என்று சொல்லக்கூடிய ஒற்றைத் தலைவலிதான்!


இந்த வலி வந்துவிட்டால், விதவிதமான வலிநிவாரண மாத்திரைகளைப் போட்டுக் கொண்டும், வலி போக்கும் களிம்புகளைத் தடவியவாறு நெற்றியில் துணியை இறுகக் கட்டிக்கொண்டு அவதிப்படுவீர்கள்.

ஒற்றைத் தலைவலி செயல்படவிடாமல் உங்களை முடக்கி விடும். சிலமணி நேரம் அல்லது சிலநாள்வரை கூட நீடிக்கும். இப்படி அபாயகரமானதாக விளங்கும் இந்தத் தலைவலி வரக் காரணம், அறிகுறிகள், எச்சரிக்கை அறிகுறிகள், சிகிச்சை முறைகள் போன்றவற்றைப் பற்றி, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சவுண்டப்பன் விரிவாகப் பேசுகிறார்..


‘‘ஒருவருக்கு அடிக்கடி ஒற்றைத் தலைவலி வந்தால், அது மூளையில் ஏற்படும் கட்டியின் அறிகுறியாக இருக்கலாம். ஆண்களைவிட பெண்களே இந்தத் தலைவலியால் 4 மடங்கு அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, நூற்றுக்கு 20 பெண்களுக்கு தலைவலி வருகிறது. இயற்கையாக பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தின் காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு இவ்வகைத் தலைவலி அதிகமாக வருகிறது. பொதுவாக, 20 வயதில் இருந்து 50 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் ஒற்றைத் தலைவலியால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

ஒற்றைத் தலைவலி ஏற்படும் முன் பலவிதமான அறிகுறிகள் தோன்றும். முக்கியமாக தலையின் ஒரு பக்கத்தில் வலி அதிகமாக ஏற்படும். நேரம் செல்லச் செல்ல அந்த வலியின் தன்மை அதிகரித்துக் கொண்டே இருக்கும். ஒரு மணிநேரம் முதல் 6 மணி நேரம் வரை இந்த தலைவலி நீடிக்கலாம். அல்லது மருந்து சாப்பிட்ட பின் சரியாகலாம். ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்களில் சிலருக்கு வாந்தி ஏற்படலாம். ஒற்றைத் தலைவலி தலையின் இரண்டு பக்கமும் மாறிமாறியும் வரலாம்.

அதிக வாசனையால் உண்டாகும் ஒவ்வாமை, உணவு வகைகள் காரணமாக ஏற்படும் ஒவ்வாமை, அடிக்கடி மாறும் பருவநிலை, கண்கூசும் வெளிச்சம், அதிக ஒலி ஆகியவை ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக வெளிச்சம், அதிக சத்தம் இல்லாத அமைதியான சூழ்நிலையையே விரும்புவார்கள். இவர்கள் சூடான உணவு வகைகளைச் சாப்பிட்டபிறகு, குளிர்ந்த நீர், குளிர்பானங்கள், வாழைப்பழம், சாக்லெட், ஐஸ்கிரீம் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

எச்சரிக்கும் வகையில் சில அறிகுறிகள் உடலில் தென்படும். ஏற்கனவே உள்ள தலைவலியில் சில மாற்றங்கள் தெரியும். அதிக நேரம் நீடிப்பது, வலி அதிகமாக இருத்தல், புதிதாக நரம்பில் ஏற்படும் பாதிப்புகளே (வலிப்பு, முகம் கோணுதல், கை மற்றும் கால்கள் செயலிழத்தல்...) எச்சரிக்கை அறிகுறிகளாகும்.

இந்த அறிகுறிகள் ஏற்பட்டால், மூளையில் உருவான கட்டியாலோ, வேறு ஏதேனும் பிரச்னைகளும் காரணமாக இருக்கலாம். நாமே வலி நிவாரணிகளைப் போட்டுக் கொள்ளாமல், மருத்துவரை அணுகி வலிக்கான காரணத்தை அறிந்து தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

நமக்கு ஏற்பட்டு இருப்பது ஒற்றைத் தலைவலியா? அல்லது மற்ற காரணங்களால் வரும் தலைவலியா? இந்த விஷயத்தை முதலில் கவனிக்க
வேண்டும். பார்வைக் குறைபாடு, காதுகளில் உண்டாகும் தொற்று, சைனஸ் பிரச்னை, பல்வலி ஆகிய காரணங்களாலும் ஒற்றைத் தலைவலி வரலாம். மூல காரணத்தைச் சரிசெய்வதன் மூலமே இந்தத் தலைவலியைக் குணப்படுத்த முடியும். ‘தலைவலிதானே, ஒரு மாத்திரை போட்டால் சரியாகி விடும்’ என்று மெத்தனமாக இருந்துவிட்டு, பின்னர் பெரிய ஆபத்தை விலைக்கு வாங்கிக் கொள்ளாதீர்கள்!’’

ஆண்களைவிட பெண்களே இந்தத் தலைவலியால் 4 மடங்கு அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.‘தலைவலிதானே, ஒரு மாத்திரை போட்டால் சரியாகி விடும்’ என்று மெத்தனமாக இருந்துவிட்டு, பின்னர் பெரிய ஆபத்தை விலைக்கு வாங்கிக் கொள்ளாதீர்கள்!