வாயே நோயை சொல்லும்!
நம் ஆரோக்கியத்தின் கண்ணாடியாக இருப்பது வாய்தான். நம் உடலில் உள்ள பல பிரச்னைகளை வாய் காட்டி கொடுத்துவிடும். வாய் மற்றும் பற்களில் ஏற்படும் பிரச்னைகள் நம் உடலிலும் சில மாற்றங்களையோ பாதிப்புகளையோ ஏற்படுத்தும் என்கிற பல் மருத்துவர் சிவராமன், பற்களில் ஏற்படும் பிரச்னைகள், அதன் தீர்வுகள் குறித்தும் விளக்குகிறார்.

நாம் சாப்பிட்டு முடித்தபின் கண்ணுக்குத் தெரியாத உணவுத்துகள்கள் பல் இடுக்குகளில் சிக்கிக் கொள்ளும். அதில் சின்னச் சின்ன பிளேக்குகள் உருவாகி பாக்டீரியாக்கள்
வளரத் தொடங்கும். 24 மணி நேரத்துக்குள் பிரஷ் செய்யும் போது, அதை சரிசெய்து விடலாம். அப்படி சுத்தம் செய்யாத பட்சத்தில், சுண்ணாம்பு போன்ற கடினமான பொருள் அங்கே படிய ஆரம்பிக்கும். அதனை Tartar அல்லது Calculas என்பர். அதனை பிரஷ் செய்வதால் நீக்க முடியாது.

பல் மருத்துவரிடம் சென்றுதான் சுத்தம் செய்ய முடியும். அப்படி சுத்தம் செய்யாமல் அலட்சியமாக விட்டால் அந்த Tartar பல் ஈறுகளை உறுத்திக்கொண்டே இருக்கும். பாக்டீரியா தாக்குதல்களால் ஈறுகள் சிவந்து வீங்கும். பல் துலக்கினால் ரத்தம் வரும். வாய் துர்நாற்றம் அடிக்கும். இதனை Gingivitis என்கிறோம்.

இந்த நிலையிலும் மருத்துவரிடம் செல்லாவிடில் அந்த Tartar நிறைய பிளேக்குகளை உருவாக்கிவிடும். இதனால் பல்லை சுற்றியுள்ள தசை நார்களும் (பெரிடான்டியம்), பல் எலும்புகளும் கடுமை யான பாதிப்புக்குள்ளாகும். இதையே பெரிடான்டிட்டிஸ் (Predontitis) என்கிறோம்.

இந்த பெரிடான்டிட்டிஸ் நிலைமையானது பல் எலும்புகளை அரிக்க ஆரம்பிக்கும். இதனால் ஈறுகளில் வலி இருக்கும். பற்களுக்கு இடையே இடைவெளி விழும். ஒரு சிலருக்கு அங்கே சீழ் வரும். வாயில் ஒருவிதமான விரும்பத்தகாத சுவை இருக்கும். இதனால் பற்கள் விழுவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

பல்லை சுத்தமாக வைத்துக் கொள்ளாதவர்களுக்கு மட்டுமல்ல... பெண்களுக்கு சுரப்பிகளின் மாறுபாடு ஏற்படும் காலகட்டங்களான பருவம் அடையும் போதும், கர்ப்பத்தின் போதும், மொனோபாஸின் போதும் ஈறுகளில் பிரச்னை அதிகமாக இருக்கும்.

புகைப் பிடிப்பவர்கள், நீரிழிவுக்காரர்கள், பருமன் அதிகம் உள்ளவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள் மற்றும் மரபு ரீதியாக பிரச்னை இருப்பவர்களுக்கும் ஈறு பிரச்னை அதிகரிக்கும். நீரிழிவு நோய், இதய நோய் போன்ற பல பிரச்னைகளுக்கும் பெரிடான்டிட்டிஸ் காரணமாகக்கூடும்.நீரிழிவு நோய்...பல் ஈறுகளில் பிரச்னை என்று வரும் போதுதான் பலருக்கு சர்க்கரை நோய் இருப்பதே கண்டுபிடிக்கப்படுகிறது. ஈறுபிரச்னையும் சர்க்கரை நோயும் இருவழிப் பாதைகள் போல. அதாவது... ஈறு பிரச்னையால் பலருக்கு சர்க்கரை நோய் வருவதைப் போல, பலருக்கு சர்க்கரை நோயால் பல் ஈறுகளில் பிரச்னை வருகிறது.

சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு பொதுவாக எதிர்ப்புசக்தி குறைவாக இருக்கும். அதனால் அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படும். அதனால் பல்லிலும் பிரச்னை ஏற்படும். அது சீக்கிரத்தில் ஆறாது. சர்க்கரை நோயை முறையாக பராமரிக்காத பட்சத்தில் பெரிடான்டிட்டிஸ் ஏற்படும்.இதைச் சரிசெய்யாத பட்சத்தில், கணையத்தில் இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை பெரிடான்டிட்டிஸ் பாதிக்கும். உடலில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும். நீரிழிவு
ஏற்கனவே இருப்பவர்களுக்கு சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

அதனால் சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி பல் மருத்துவரிடம் சென்று முறையாக பல்லை பராமரிப்பது மிகவும் அவசியம். இதயக் கோளாறுகள்... பல்லைச் சுற்றியுள்ள பிரச்னை கள் இதய நோய் ஆபத்தை அதிகரிக்கின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதய நோய்கள் வருவதற்கான காரணங்களில் மிக முக்கியமானது பெரிடான்டிட்டிஸ்.

இதில் உள்ள மைக்ரோ ஆர்கானிசம் ரத்தத்தின் அடர்த்தியை அதிகரிக்கிறது. ரத்தக்குழாயை தடிமனாக்குகிறது. சில நேரங்களில் ரத்தக்குழாயில் கொழுப்பை அதிகரிக்கிறது. இதனால் ரத்தத்தின் வேகம் தடைபடுகிறது. அப்படி மெதுவாக நகர்ந்து செல்லும் போது ஓர் இடத்தில் அதற்கு மேல் நகர முடியாதபடி நின்று விடும்.

அதனால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் வரும் அபாயம் ஏற்படுகிறது. குறைப்பிரசவம்கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் இந்த ஈறு பாதிப்புகள் குறைப் பிரசவத்தை ஏற்படுத்தக்கூடும். பெரிடான்டிட்டிஸை ஆரம்பத்திலே சரிசெய்யாத பட்சத்தில், பல எதிர் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். கர்ப்ப காலத்தில் இப்பிரச்னை இருந்தால் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்.

சிகிச்சைஆரம்ப கட்டத்தில் பிளேக்குகள் மற்றும் Tartarஐ சுத்தம் செய்து விட்டாலே, பெரிடான்டிட்டிஸ் ஏற்படுவதைத் தடுத்துவிடலாம். பெரிடான்டிட்டிஸ் ஏற்பட்ட பிறகு ஸ்கேலிங் மற்றும் வேர் சிகிச்சை செய்யலாம். இதெல்லாம் ஆரம்பகட்ட சிகிச்சைகள்தான். அதற்குப் பிறகு அல்ட்ரா சோனிக் கருவிகள் பயன்படுத்தப்படும். வாய் கொப்புளிக்க மருந்துகள் அளிக்கப்படும். இவற்றினால் எல்லாம் சரிசெய்ய இயலாத போது அடுத்தகட்ட சிகிச்சைகள் பயன்படுத்தப்படும். அவை...
ப்ளாப் அறுவை சிகிச்சைவேர் ஆழத்தில் இருக்கும் டார்டாரை நீக்க அல்லது குறைக்க இச்சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.

போன் அண்ட் டிஷ்யூ கிராஃப்ட்பாதிக்கப்பட்ட எலும்புகள் நீக்கப்பட்டு அந்த இடத்தில் செயற்கை (சிந்தெடிக்) எலும்புகள் பொருத்தப்படும்.கைடட் டிஷ்யூ ஜெனரேஷன்ஈறுகளுக்கும் எலும்புகளுக்குமிடையே வலை போன்றதொரு பொருள் வைக்கப்படும். இது மேலும் அந்த இடத்தில் சதை வளர்வதை தடுக்கும்.

சாஃப்ட் டிஷ்யூ கிராஃப்ட்வாயின் மற்றொரு பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட சதைப்பகுதியையோ, செயற்கை சதையையோ வெளியில் தெரியும் எலும்புகளை மறைக்க அந்த இடத்தில் வைப்பார்கள்.

பிரச்னைகளின் வீரியத்தைப் பொறுத்து சிகிச்சை முறைகள் மாறுபடும். இந்தப் பிரச்னையை சரிசெய்ய நோயாளிகளின் ஒத்துழைப்பும் அவசியம். புகைப்பழக்கத்தை கைவிட வேண்டி இருக்கும். தடுக்கும் முறைகள்முறையான பல் பராமரிப்பு முக்கியம். காலை, இரவு என இரு வேளை சரியான முறையில் பல் துலக்குவது, சாப்பிட்ட பின் வாய் கொப்புளிப்பது, புகைப் பழக்கத்தை தவிர்ப்பது, சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைப்பது ஆகியவற்றோடு, 6 மாதங்களுக்கு ஒரு முறை சிறந்த பல் மருத்துவரிடம் பற்களைப் பரிசோதிப்பது போன்றவை பெரிடான்டிட்டிஸ் வராமல் தடுக்கும். கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ஈறு பாதிப்புகள் குறைப் பிரசவத்தை ஏற்படுத்தக்கூடும்.

Similar Threads: