தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் மருந்து!


டாக்டர் கு.கணேசன்

தலைமுடி அடர்த்தியாக வளர வேண்டும்; ‘கரு கரு’வென்று இருக்க வேண்டும் என்று விரும்பாதவர்கள் உண்டா? அதிலும் தலையிலிருந்து ஒரு சில முடிகள் உதிர்ந்துவிட்டாலே வாழ்க்கையில் இழக்கக் கூடாததை இழந்து விட்ட மாதிரி கவலைப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். முடியின் வளர்ச்சியில் பரம்பரைத் தன்மை, புரதச் சத்து, இரும்புச் சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் என்று பல காரணிகள் பங்குகொள்கின்றன. இவற்றில் பயாட்டின் எனும் சத்துப்பொருளுக்கு ரொம்பவே பங்கு உண்டு.

அது என்ன பயாட்டின்?

பி 7 வைட்டமினுக்கு ‘பயாட்டின்’ என்று பெயர். இது தண்ணீரில் கரையக் கூடிய வைட்டமின் வகை. ஆகவே, இந்த வைட்டமின் உள்ள உணவை, மாத்திரையை அல்லது மருந்தைச் சாப்பிட்ட எட்டு மணி நேரத்தில் இது சிறுநீரில் வெளியேறிவிடும். இதனால், உடலின் தேவைக்கு இந்த வைட்டமின் உள்ள உணவுகளை நாம் தினமும் சாப்பிட வேண்டியது அவசியம். அரிசி, கம்பு, சோளம், கொள்ளு, முளைகட்டிய பயறுகள், கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, உளுந்தம்பருப்பு, சோயா, நிலக்கடலை, கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணி, முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, பால், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, உருளைக்கிழங்கு, சோயாபீன்ஸ், வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, தக்காளி, தர்ப்பூசணி. பீட்ரூட், காளான், காலிஃபிளவர், முட்டைக்கோஸ், கீரைகள், ஆட்டிறைச்சி, வேக வைத்த முட்டை, மீன் முதலியவற்றில் பி 7 வைட்டமின் அதிகமுள்ளது.

கார்போஹைட்ரேட்டிலிருந்து கிளைக்கோஜனைத் தயாரிப்பதற்கும் இரும்புச் சத்தும் புரதச் சத்தும் இணைந்து ‘ஹீமோகுளோபின்’ உற்பத்தியாவதற்கும் பி 7 வைட்டமின் மிகவும் அத்தியாவசியம். இதன் மூலம் இந்த வைட்டமின் ரத்த உற்பத்திக்கு உதவுகிறது; ரத்தசோகை வராமல் தடுக்கிறது.
புரதச் சத்திலிருந்து அமினோ அமிலங்களைத் தயாரிக்கவும், கொழுப்புச் சத்திலிருந்து கொழுப்பு அமிலங்களைத் தயாரிக்கவும் இது அவசியம். தவிரவும் உடலில் தசை வளர்ச்சிக்கும் தோல் வளர்ச்சிக்கும் இது துணை புரிகிறது. மேலும், தலைமுடியின் வளர்ச்சி சரியாக இருக்கவும், அதன் கனம் குறைந்துவிடாமல் இருக்கவும், முடியின் நிறம் கருகருவென்று காணப்படவும் பல நொதிகள் தேவைப்படுகின்றன. அந்த நொதிகளைச் சரியான அளவில் தயாரித்துக் கொடுத்து, தலைமுடியின் ஆரோக்கியத்தைக் காப்பாற்றுவதில் பயாட்டின் அதிக பங்கெடுத்துக்கொள்கிறது. நகம் நலமாக வளரவும் இது உதவுகிறது. அண்ணப்பிளவு, உதட்டுப்பிளவு போன்ற பிறவி ஊனங்கள் ஏற்படாமல் தடுப்பதும் இதுதான். தினமும் நமக்கு 30லிருந்து 45 ைமக்ரோ கிராம் வரைஇது தேவைப்படுகிறது.

உடலில் இந்த வைட்டமின் பற்றாக்குறை ஏற்படும்போது கடுமையான தசைவலி உண்டாகும். அடிக்கடி தசைப் பிடிப்பு உண்டாகும். பசி குறையும். உணவு சாப்பிட ஆர்வம் இருக்காது. குமட்டல், வாந்தி வரும். உடல் எளிதில் களைப்படைந்துவிடும். ரத்தசோகை ஏற்படும். தலைமுடி கொத்துக் கொத்தாக உதிரும். நகத்தில் வெள்ளைக்கோடுகள் விழும். நாக்கிலும் தொண்டையிலும் குழிப்புண்கள் தோன்றும். உணவு சாப்பிடும்போது நாக்கு எரியும். தோலில் சிவப்பு நிற அழற்சிப் புண்கள் உண்டாகும். அவற்றில் நீர் வடியும். சிலருக்குத் தோல் உலர்ந்து வெடிப்புகள் விழும். ‘எக்சீமா’ (Eczema) எனும் ஒவ்வாமைத் தோல் நோய் வரும். இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு தருவதற்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பது பயாட்டின் மாத்திரையைத்தான் . 1916ம் ஆண்டில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பேட்மேன் (W.G.Bateman) எனும் விஞ்ஞானிதான் இதைக் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பில் ஒரு சுவாரசியமும் உண்டு.

ஜெர்மன் நாட்டில் 1900ம் ஆண்டுவாக்கில், கோழிக் குஞ்சு களுக்கும் எலிகளுக்கும் திடீர் திடீரென்று தோலில் அழற்சி நோய்கள் உண்டாயின. இதனால் உணவுச் சந்தையில் கோழி இறைச்சிக்குப் பஞ்சம் ஏற்பட்டது. இந்த நோய்க்குக் காரணம் கண்டுபிடிக்க பல விஞ்ஞானிகள் முயற்சித்தனர். இவர்களில் பேட்மேன் என்பவருக்கு மட்டும் ‘இது உணவுச் சத்துக்குறைவு நோய்’ என்று புரிந்தது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட கோழிக் குஞ்சுகளுக்கும் எலிகளுக்கும் பல சத்துணவுகளைக் கொடுத்துப் பார்த்தார். இறுதியில் வேகவைத்த கோழி முட்டைகளைக் கொடுத்ததும் இந்த நோய்கள் குணமாயின. இதனால் முட்டையின் மஞ்சள்கருவில் இருக்கும் ஒரு சத்துப்பொருள்தான் கோழிக் குஞ்சுகளுக்கும் எலிகளுக்கும் ஏற்படுகின்ற தோல் அழற்சி நோய்களைக் குணப்படுத்துகிறது என்று அவர் உறுதி செய்தார்.

ஜெர்மன் மொழியில் ‘Haut’ என்றால் ‘தோல்’ என்று பொருள். ஆகவே, அந்த வார்த்தையின் முதல் எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, பேட்மேன் இதற்கு ‘வைட்டமின்-H’ என்று பெயரிட்டார். நோய்வாய்ப்பட்ட கோழிக்குஞ்சுகளுக்கு முட்டை கொடுத்து நோயைக் குணப்படுத்துவதற்குச் செலவு அதிகமாகும் என்பதால், இந்த வைட்டமினைத் தனியாகப் பிரிக்கமுடியுமா என்று யோசித்தார். ஆனால், அவரால் அது முடியவில்லை. அவரைத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்த கோக் மற்றும் ஜோனிஸ் எனும் விஞ்ஞானிகள் 1930ம் ஆண்டில் முட்டையின் மஞ்சள் கருவிலிருந்து இந்த வைட்டமினைப் பிரித்தெடுத்து வெற்றி கண்டனர்.

காலப்போக்கில் ஆங்கில அகரவரிசையில் இருந்த எல்லா வைட்டமின்களுக்கும் புதிய பெயர்கள் சூட்டப்பட்டபோது, அதாவது வைட்டமின் - A ‘ரெட்டினால்’ என்றும், வைட்டமின் - C ‘அஸ்கார்பிக் அமிலம்’ என்றும் புதிய பெயர்களைப் பெற்றபோது, 1935ம் ஆண்டில் ‘பால் கொயார்கி’ எனும் ஹங்கேரி நாட்டு மருத்துவர் ‘H’ வைட்டமினுக்கு ‘பயாட்டின்’ என்று பெயர் சூட்டினார். இதுவே வைட்டமின் பி 7 எனவும் சொல்லப்படுகிறது. 1940ல் மனிதனின் கல்லீரலில் இந்த வைட்டமின் உள்ளது என்பதும் தெரியவந்தது. இறுதியாக, 1943ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இந்த வைட்டமினைச் செயற்கையாகவும் தயாரிக்கத் தொடங்கினர். பயாட்டின் வைட்டமின் விலங்குகளுக்கு மட்டுமன்றி மனித இனத்துக்கும் தேவையான ஒரு வைட்டமின் என்பது இருபதாம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில்தான் மருத்துவ உலகுக்குப் புரிந்தது. இன்றைக்கும் பல தோல் நோய்களுக்கும் தலைமுடி உதிர்வதைத் தடுப்பதற்கும் பயாட்டின் ஒரு மகத்தான மருந்தாகச் செயல்
படுகிறது.