மூலநோய்1. 'மூலநோய்' என்றால் என்ன? அதில் வகைகள் உள்ளனவா?
ஆசனப் பகுதியிலுள்ள ரத்தக் குழாய்கள் இயல்பு நிலைக்கு மாறாக, வீக்கம் அடைந்திருக்கும் அல்லது அந்த பகுதியில் கட்டிகள் இருப்பது போல் தோன்றும். இதுவே மூலநோய் எனப்படும். அதில் உள்மூலம், வெளிமூலம் என இரு வகைகள் உள்ளன. சரியாக சிகிச்சை மேற்கொள்ளாமல் விடப்படும் மூலநோய், ஒரு கட்டத்தில் புற்றுநோயாக மாறும் வாய்ப்புகள் அதிகம்.

2. உள்மூலம் மற்றும் வெளிமூலம் என்றால் என்ன?
ஆசனப் பகுதியின் உள்ளே உள்ள ரத்தக் குழாய்கள் வீங்கி இருந்தால், அது உள்மூலம். அதுவே, ஆசனக் குழாய்க்கு வெளியே காணப்பட்டால், வெளிமூலம்.

3. மூலநோய் வரக் காரணம் என்ன?
உணவுப் பழக்க வழக்கங்கள், வாழ்வியல் சார்ந்த பிரச்னைகள், உடல் சூடு, தொழிற்சாலையில் வேலை செய்வது போன்ற பல காரணங்களால் மூலநோய் ஏற்படுகிறது.

4. அறிகுறிகள் என்னென்ன?
1. ஆசன வாயில் (மலம் வெளியேறும் பாதையில்) அரிப்பு உண்டாதல்
2. மலச்சிக்கல் ஏற்படுதல்; மலத்துடன் ரத்தம் கலந்து வெளியேறுதல்
3. ஆசன வாயில் தொடர்ந்து உண்டாகும் வலி, எரிச்சல், அரிப்பு
4. ஆசன வாயின் உள்பகுதி வீங்கி, மலம் கழிக்க சிரமப்படுதல்
5. ஆசன வாயின் வெளிப் பகுதியில் சதை வீங்கி, உட்கார, படுக்க, மலம் கழிக்க முடியாத அளவுக்கு வலி, வேதனை சிரமத்தை உண்டாக்குதல்

5. உணவுப்பழக்க வழக்கங்கள் எப்படி காரணம் ஆகின்றன?
மூலநோய் எற்பட கட்டாயம் உணவுப் பழக்க வழக்கங்களும், ஒரு முக்கிய காரணமாகும். காரம் நிறைந்த உணவுகள், வறுத்த பொரித்த உணவுகள் மற்றும் அசைவ உணவுகளை அளவுக்கு அதிகமாக உண்ணுதல் காரணமாக, மூலநோய் ஏற்படலாம்.

6. மூலநோய் யாருக்கெல்லாம் வரும் அபாயம் உண்டு?
உணவுப் பழக்க வழக்கங்கள் மோசமாக இருந்தால், மலச்சிக்கல் ஏற்பட்டு, மூலம் உண்டாகிறது. பரம்பரையாகவும், இந்த நோய் வரலாம். மேலும், தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கு, மூலநோய் வரும் ஆபத்து, மற்றவர்களை காட்டிலும் அதிகம். 15 முதல் 60 வயது வரை, யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

7. ஆசனக் குழாயில் பிரச்னை என்றாலே, காரணம் மூலநோய் தானா?
தவறு! ஆசனக் குழாயில் வெடிப்புகள் வரலாம், சீழ் கட்டிகள் இருக்கலாம்; பவுத்ரம் இருக்கலாம். அல்லது அடிக்குடல் சம்பந்தப்பட்ட புற்றுநோயாகக்கூட இருக்கலாம். எனவே, ஆசனக் குழாயில் பிரச்னை என்றால், மருத்துவரை அணுகி, என்ன பிரச்னை என கண்டறிந்து,
சிகிச்சை எடுப்பதே சிறந்தது.

8. மூலநோயை எவ்வாறு கண்டறிவது?
பொது அறுவை சிகிச்சை நிபுணரை அணுகி, 'பிராக்டோ ஸ்கோப்' எனும் சிறு கருவியை, ஆசனக் குழாயில் செலுத்தி, என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம். அல்லது 'கொலனோ ஸ்கோப்பி' மூலம் ஆசனக் குழாயை, கேமரா வழியே பார்ப்பதன் மூலம் கட்டிகள் உள்ளனவா அல்லது அல்சரா என்று கண்டறிந்து கொள்ளலாம். அதோடு மருத்துவர், ஆசனக்குழாயில் விரல்களின் மூலம் பரிசோதித்தும் தெரியப்படுத்துவார்.

9. மூலநோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
உணவுப் பழக்க வழக்கங்களை மாற்ற வேண்டும். காரம் நிறைந்த, வறுத்த, பொரித்த உணவு மற்றும் அசைவ உணவுகளை தவிர்த்து, நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், குளிர்ச்சியான காய்கள் மற்றும் பழ வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

10. மூலநோய்க்கான சிகிச்சை முறைகள் என்னென்ன?
நான்கு சிகிச்சை முறைகள் உள்ளன. ஆரம்ப கட்டத்திலுள்ள மூலநோய்க்கு, மாத்திரைகள், களிம்புகளே போதுமானவை. வாழ்வியல் மாற்றங்கள் தான் மிகவும் அவசியம். முற்றிய மூலநோய்க்கு, கண்டிப்பாக அறுவை சிகிச்சை தான் சிறந்தது. தற்போது, 'லேசர்' முறையிலும், 'ஸ்டாப்லர்' முறையிலும் நவீன முறையில் மிக எளிதாக செய்யப்படுகிறது. மேலும், மூலநோய் முற்றிலுமாக தீர்க்கக்கூடிய பிரச்னையே.

- ர. சபரீசன்,
பொது மற்றும் நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர்.
பூந்தமல்லி, சென்னை.
96597 77666