பயண நோய் ஒரு துயரம். மோஷன் சிக்னெஸ் (Motion sickness) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்நோயால் அவதிப்படும் உலகின் கோடானுகோடி பேரைக் கேட்டால் இப்படித்தான் கூறுவார்கள்.ஓடும் வாகனத்தில் பயணிக்கும்போது அதன் ஓட்டத்தால் ( motion) ஏற்படும் குமட்டல் நோய்க்கான காரணம் இதுவரை மர்மமாகவே உள்ளது. மருத்துவம்கூட இதற்கான தீர்வை இன்னும் எட்டிப் பிடிக்கவில்லை.இந்தப் பாதிப்பால் அவதிப்படுபவர்களை கையில் எலுமிச்சம்பழம் வைத்துக்கொள்ளச் சொல்வதுண்டு. இஞ்சி மிட்டாய் போன்றவையும் மருந்தாகப் பயன்படுகின்றன. ஆனால் இதெல்லாம் கொஞ்ச நேரத்துக்குத்தான். பயண நோயை அப்போதைக்கு ஒத்திப்போடலாம், அவ்வளவுதான்.ஒருவேளை பயணம் நெடுநேரம் தொடர்ந்தாலோ அல்லது திருப்பதி, ஊட்டி மலைச்சாலைகளைப் போல சுற்றிச் சுற்றிச் சென்றாலோ பயண நோயின் தாக்கம் எல்லை மீறிவிடும்.பலருக்கு ஒருவகையான அசவுகரியம் ஏற்படும். ஆனால் நிறையப் பேருக்கு பயண நோய் உண்டாக்கும் தலைச்சுற்றல், வாந்தி, கடும் வயிற்றுப் பிரட்டல், அதீத வியர்வை என ஏதோ உயிர் போகும் அவசரம் உருவாகிவிட்டதைப் போல ஆகிவிடும்.மருத்துவக் காரணங்கள்நம் இரு காதுகளிலும் சில திரவங்கள் உள்ளன. அவை சீ-சா பலகையைப் போல சமமாக நிற்க வேண்டும். கொஞ்சம் சமநிலை மாறிவிட்டாலும் போதும். பயண நிலைமை தடுமாறி பயண நோய் உருவாகிவிடும்.நாம் பயண நகர்தலில் இருக்கும்போது, குழப்பமான சமிக்ஞைகள் மூளையில் இருந்து விடுபடுகின்றன. இவை நேராக கண்களையும் காதுகளையும் வந்தடைய, குழம்பும் இந்த இரு உறுப்புகளும் குமட்டலை தீர்வாகத் தந்துவிடுகின்றன. இதற்கு வெஸ்டிபுலார் (vestibular) இயக்கம் என்று மருத்துவப் பெயர்க்காரணம் உள்ளது.காதுகள், கண்கள் ஆகிய இரண்டின் சமநிலை தடுமாறும்போது அதைச் சீராக்கும் மருந்துகள் அறியப்படாததால், பயண நோய்க்கும் தீர்வு இல்லாமலேயே உள்ளது.ஆக, மூளையில் இருந்துவரும் சேதிகளை காதுகளும் கண்களும் அசாதாரணமாக விளங்கிக்கொள்வதே பயண நோய்க்குப் பிரதான காரணம் என்பதால், நரம்பியல் நிபுணர்கள் களத்தில் குதித்தார்கள்.காதுக்கும் கண்ணுக்கும் மூளையில் இருந்து வரும் சேதிகள் குழப்பாமல் ஆக்கிவிட்டால், கடுமையான மயக்கங்களை விளைவிக்கும் பயண நோய்க்கு நல்ல தீர்வு கிடைத்துவிடும் என்ற கோணத்தில் நரம்பியல் நிபுணர்கள் உழைத்தார்கள். அதன் விளைவாக தற்போது இந்நோய்க்கு அருமையான சிகிச்சை முறை கிடைத் திருக்கிறது.புத்தம்புது நவீன சிகிச்சைலண்டன் இம்பீரியல் கல்லூரி ஆய்வுக்குழு, பயண நோய்க்கு மருத்துவ தீர்வைத் தந்துள்ளது.மிகக் குறைந்த அளவிலான மின்சாரம், இந்தச் சிகிச்சைக்கான பலம். தலையை மூடியுள்ள முடியுடன் கூடிய தோல் பகுதிக்கு ஸ்கால்ப் (scalp) என்று பெயர். அதாவது, கேசத் துவாரங்கள். இவை தலை முழுவதும் நூற்றுக்கணக்கில் உள்ளன. இவற்றுக்குள் மிகக் குறைந்த மின்சாரம் ஏற்றப்பட்டது.காது மற்றும் கண்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் வெஸ்டிபுலார் இயக்கத்தை, தலையின் கேசத் துவாரங்கள் வழியாக அனுப்பப்படும் மின்சாரம் அமுக்கி மட்டுப்படுத்தி விடுகிறது. இக்குழப்ப இயக்கத்தைத் தலைதூக்க விடாமல் அழுத்தி மறைத்துவிடுகிறது.இதனால், பயணத்தின்போது உண்டாகும் மயக்கக் கலக்கம் நிறையவே குறைந்துவிடுகிறது. பயண நோயைத் தாங்கும் வலிமை பயணிகளுக்குக் கிடைக்கிறது.

பரிசோதனையில் வெற்றி
இந்தச் சிகிச்சை முறையை சோதித்துப் பார்க்க விரும்பிய நிபுணர்கள், பயண நோய் கடுமையாக உள்ள சில நோயாளிகளை வரவழைத்தார்கள். அவர்களுக்கு கணக்கிடப்பட்ட குறைந்த அளவு மின்சாரம் பதினைந்து நிமிடங்கள் தரப்பட்டது. தலையின் முடிக்கற்றைத் துவாரங்களில் அது செலுத்தப்பட்டது.பிறகு அவர்கள் அனைவரும், சுற்றிச் சுற்றி வரும் நாற்காலிகளில் உட்காரவைக்கப்பட்டார்கள். பொருட்காட்சிகளில் விதவிதமாய்ச் சுற்றும் ராட்டினங்களைப் போல வலம் இடமும், மேலும் கீழுமாய் சுற்றும் நாற்காலிகள் அவை.விமானத்திலும், காரிலும், கப்பலிலும், மயக்கமும் குமட்டலும் ஒரு பெரும் போராட்டமாகும்.மலைப் பிரதேச பயணங்களை மேற்கொள்ளும்போது ஏற்படும் கிறுகிறு திருப்பங்களை இந்த நாற்காலிகள் உண்டாக்கின.நாற்காலிகளில் பயணித்த நோயாளிகள் அனைவருக்குமே மயக்கம் ஏற்படவில்லை. மலைப்பாதைகளில் வாகனம் ஏற ஆரம்பித்ததுமே குமட்டல் ஏற்படும் என்று சொன்ன நோயாளிகள்கூட, எவ்விதமான பிரச்சினையையும் சொல்லவில்லை.பயண நோய் அதிகம் இல்லாத நபர்களின் மீதும் இந்தப் புது நரம்பியல் சிகிச்சை பரிசோதிக்கப்பட்டது.இவர்களுக்கு நல்ல தீர்வு கிடைத்தது என்கிறார்கள் இம்பீரியல் குழுவினர். கொஞ்சநஞ்சம் இருந்த குமட்டலும் முழுவதுமாகக் காணாமல் போய்விட, அருமையாக பயணத்தைக் கொண்டாட முடிந்தது என்கிறார்கள் இவர்கள்.

கூடுதல் அனுகூலம்
பயண நோயில், பயணத்துக்குப் பிறகு நீளும் குமட்டல்கள், ஒரு பெரிய இம்சையாகும்.வாகனத்தில் இருந்து இறங்கியபிறகும் அந்த நபர்கள் தடுமாறிக்கொண்டே இருப்பார்கள். கண்ணைத் திறக்க முடியாது. நீர் கூட அருந்த முடியாது. சுமார் மூன்று மணி நேரம் கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப் பயணத்தை மேற்கொள்ளும் நோயாளிகள் சராசரி நிலையை அடைய இரண்டு நாட்கள் கூடப் பிடிக்கும்.அதற்குள் உல்லாசப் பயணமே முடிந்து விடும்.சிறு அளவு மின்சாரத்தை தலைக்குள் அனுப்பும் இந்தச் சிகிச்சையால், பயணத்துக்குப் பிறகும் தொடரும் மயக்க வாந்திகள் வெகு சீக்கிரத்தில் குணமாகிவிடுகின்றன.உதாரணத்துக்கு, 15 நிமிட மின்சார சிகிச்சைக்குப் பிறகு சுழல் நாற்காலியில் உட்காரும் நபர்கள், மயக்கம் வரும்வரை இறக்கப்படவில்லை. மயக்கம் தலைதூக்க ஆரம்பித்ததும் இறக்கப்பட்டார்கள்.இவர்களுக்கு, இறங்கியபிறகும் நீளும் மயக்கம், அதிக நேரம் தொடரவில்லை. உடனடியாய் சராசரி நிலைமையை அடைந்துவிட்டார்கள் இவர்கள்.ஆகவே இரண்டு பரிசோதனைகளும், பயணத்தின்போதும், பயணம் முடிந்தபிறகும் பயண நோயைக் குணமாக்கும் வெற்றியைத் தந்துள்ளன.இத்தனை நூற்றாண்டுகளாக மக்கள் அனுபவித்து வரும் பயண நோய்க்கு எவ்விதப் பக்கவிளைவுகளும் இல்லாத ஒரு சிறப்பான புது சிகிச்சை முறை கிடைத்துள்ளதைப் பார்க்கும்போது எங்களுக்குப் பெரும் உற்சாகமாக உள்ளது என்கிறார் மைக்கேல் கிரெஸ்டி. இவர்தான் இந்த ஆய்வுக்குழுவில் முக்கிய உறுப்பினர்.இது ஒரு புத்தம்புது கண்டுபிடிப்பு. இதுவரை காணாத மைல்கல் சாதனை.இன்னும் ஐந்து வருடங்களில், நான் மலைப் பயணம் போகப் போகிறேன் எனவே மயக்க வாந்தியைத் தடுக்கும் மின்சார உபகரணம் தாருங்கள் என்று மருந்துக் கடைகளில் வாங்கிப் பயனடையும்படி இந்த மின்சார- நரம்பியல் சாதனை உச்சத்தைத் தொடத்தான் போகிறது என்கிறார், இந்தக் கண்டுபிடிப்புக் குழுவின் மற்றொரு முக்கிய உறுப்பினரான காதிர்.தீராத மனித நோய்களுக்கு நிவாரணம் தரும் எந்த ஒரு கண்டுபிடிப்புக்கும் இங்கே ரத்தினக் கம்பள வரவேற்பு உண்டுதானே!

Similar Threads: