பிறவிக் குறைபாட்டு நோய்கள் என்றால் என்ன1 பிறவிக் குறைபாட்டு நோய்கள் என்றால் என்ன?
பிறக்கும் போதே குழந்தையின், உடல் கட்டமைப்பில் குறைவு இருந்தால், கருவிலிருக்கும் போது உறுப்புகள் முழு வளர்ச்சியடையாமல் இருந்தால், அதுதான் பிறவிக் குறைபாட்டு நோய்.

2 அந்த நோய்கள் ஏன் ஏற்படுகின்றன?
ஐம்பது சதவீத பிறவிக் குறைபாடுகளுக்கு நிச்சயமான ஒரு காரணத்தை கூறமுடியாது. சமூக, பொருளாதார காரணிகள் மறைமுகமான காரணமாக அமைகின்றன. தாயிடம் காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாடு, பிறவிக்குறைபாட்டை உருவாக்கும் ரசாயனங்களின் தாக்கம், உணவில் அதிகமாக இருத்தல் போன்றவையும், முக்கிய காரணங்களாகின்றன.

3 உறவுமுறை திருமணங்களால் பிறவிக் குறைபாடுகள் ஏற்படுமா?
ரத்த உறவு முறைக்குள் நடக்கும் திருமணங்களால், குரோமோசோம்களில் குறைபாடு ஏற்பட்டு, குழந்தைகளுக்கு சில வகை பரம்பரை குறைபாட்டு நோய்கள் ஏற்படலாம்.

4 கர்ப்ப காலத்தில், தாய்க்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டாலும் பிறவிக் குறைபாடுகள் வருமா?
கர்ப்ப காலத்தில் இரும்பு, அயோடின் போலிக் அமிலம் ஆகிய சத்துக்கள் தாயின் உடலில் குறைந்தாலும், பிறவிக் குறைபாட்டு குழந்தைகள் பிறக்கலாம். 'மெனிங்கோமைலோசில்' என்ற நரம்பு மண்டல பாதிப்பால் கூட, பிறவிக் குறைபாடு ஏற்படலாம்.

5 வேறு காரணங்களும் இருக்கின்றனவா?
சூழல் மாசடைதல் சூழலில் காணப்படும் பூச்சி நாசினிகள், ரசாயனப் பொருட்களால் நீர் மாசடைதல், கர்ப்ப காலத்தில் மது அருந்துதல், புகைப்பிடித்தல், சில வகையான மருந்துகளையும், அதிக வீரியமுள்ள மாத்திரைகளையும் உட்கொள்ளுதல் மற்றும் கர்ப்பத்தின் போது கதிரியக்கத் தாக்கத்திற்கு உள்ளாதல் போன்ற காரணங்களாலும் பிறவிக் குறைபாடுகள் உருவாகலாம்.

6 பிறவிக் குறைபாடுகளை எவ்வாறு தவிர்க்கலாம்?
பிறவிக் குறைபாடு களுக்கான காரணிகள், ஒரு பெண்ணுக்கு ஏற்படாமல் தவிர்த்தால், அனேக பிறவி குறைபாடுகள் குழந்தைக்கு ஏற்படாமல் தவிர்க்க முடியும். ரசாயனங்கள், மருந்துப் பொருட்கள், கதிர்வீச்சு தாக்கம், கிருமித் தொற்றுகள் கர்ப்பிணிகளை பாதிக்கும். அவற்றில் இருந்து கர்ப்பிணிகளை பாதுகாக்க வேண்டும். அவ்வாறே ரத்த உறவு முறை திருமணங்களைத் தவிர்த்தலும், வயது அதிகமான பெண்கள் கர்ப்பமாதலை தவிர்த்தலும் நல்லது.

7பிறவிக் குறைபாடுகளை எவ்வாறு கண்டறியலாம்?
கர்ப்பமாவதற்கு முன்னர், ஒரு குடும்பத்தில் வேறு யாரும் பாதிக்கப்பட்டிருப்பின், பெற்றோருடைய ரத்தத்தைச் சோதிப்பதன் மூலம், அவர்களுக்கு பிறக்க போகும் குழந்தைக்கு, அவ்வாறான குறைபாடுகள் ஏற்படுமா என, கண்டறியலாம். உதாரணமாக 'தலசீமியா' எனும் குருதிச்சோகை நோய்க்கான காரணிகளாக பெற்றோர் இருப்பின், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு அந்த நோய் இருப்பதற்கான வாய்ப்பு, நான்கில் ஒரு பங்கு உண்டு.

8 கர்ப்ப காலத்தில் எப்படி கண்டறிவது?
கர்ப்ப காலத்தில், பிறவிக் குறைபாடுகள் ஏற்படக்கூடிய காரணிகள் காணப்பட்டால், தாயின் ரத்தத்தையோ, நச்சுக்கொடியின் துண்டையோ, கர்ப்பப் பையிலுள்ள, 'அம்னியோடிக்' திரவத்தையோ சோதிப்பதன் மூலமும், கர்ப்பத்தை, 'ஸ்கேன்' பண்ணுவதன் மூலமும் பல பிறவிக்குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறியலாம்.

9 பிறவிக் குறைபாடுகளுக்கான சிகிச்சைகள் என்ன?
இன்றைய நவீன மருத்துவ வசதிகள் மூலம், பலவகையான பிறவிக் குறைபாட்டு நோய்களுக்கு சிகிச்சை பெற முடியும். உதாரணமாக இதய சிகிச்சைகள், அங்க சீரமைப்பு சிகிச்சைகள், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை போன்ற நோய்களை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம், குழந்தைக்கும் அதிக பாதிப்புகள் வரும் முன், உரிய சிகிச்சைகளை வழங்க முடியும்.

10 முதல் குழந்தை பிறவிக்குறைபாட்டுடன் பிறந்து இறந்துவிட்டால், இரண்டாவது குழந்தையும் அவ்வாறு பிறக்குமா?
முதல் குழந்தை பிறவிக்குறைபாட்டுடன் பிறந்து இறந்தால், அந்த குழந்தைக்கு சரியான முறையில், பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதில் ஏதாவது பிரச்னை இருந்தால், இரண்டாவதாக பிறக்கும் குழந்தைக்கு பிரச்னை ஏற்படாதவாறு தடுப்பு முறைகளை பின்பற்றலாம்.

மா.வெங்கடேசன், குழந்தைகள் நல நிபுணர், சென்னை.
98402 43833


Similar Threads: