பஜ்ஜி வடை ஆயில் நியூஸ்பேப்பர்!


வேண்டாம் இனி!

நகைச்சுவை நடிகர் விவேக் ஒரு திரைப்படத்தில், ‘வடை பஜ்ஜிய வாங்கி அதை நியூஸ்பேப்பர்ல வைச்சு ஒரு கசக்கு கசக்கி சாப்பிடறவன் தான்டா தமிழன்’ என்பார். அதில் உள்ள அபாயத்தை அறியாமலே பலரும் அப்படிச் செய்கிறோம். தின்பண்ட எண்ணெயை செய்தித்தாளில் உறிஞ்சுவதால் நம் உடலில் ஏற்படும் தீமைகள் பற்றி பொதுநல மருத்துவர் டாக்டர் கலைமதி நமக்கு விளக்கமளிக்கிறார்.

“ரோட்டோரக் கடைகளிலும் பலகாரக் கடைகளிலும் ஒரு கம்பியில் செய்தித்தாளை வெட்டி கொத்தாக மாட்டி வைத்திருப்பதை பார்த்திருப்போம். சாப்பிட்டு கை கழுவுபவர்கள் துடைப்பதற்காக இதை அங்கே வைத்திருப்பார்கள். சாப்பிட்டு முடித்தோ, சாப்பிடுவதற்கு முன்போ இப்படி செய்வதால் செய்தித்தாள் பிரின்ட் செய்ய பயன்படுத்தப்படும் இங்க்கில் உள்ள கிராபைட் நம் உடலினுள் செல்ல வாய்ப்பிருக்கிறது.

செய்தித்தாள் உலர்ந்திருந்தால் பிரச்னை இல்லை. ஆனால், ஈரமோ, எண்ணெயோ படும்போது தீமை விளைகிறது. கை துடைக்க பயன்படுத்துவதே ஆபத்து எனும் போது, சிலர் பஜ்ஜி, வடை போன்றவற்றில் உள்ள அதிகப்படி எண்ணெயை செய்தித்தாளில் அழுத்தி எடுத்துச் சாப்பிடுவார்கள். இது மிகவும் தீமையானது. உணவுக்குழாய் மூலம் நேரடியாக கிராபைட்டானது நேரடியாக உடலுக்குச் செல்லும். இது சிறுநீரகம், கல்லீரலைத் தாக்குவதோடு, எலும்பு வளர்ச்சியையும் திசுக்கள் வளர்ச்சியையும் பாதிக்கிறது.

சாதாரணமாக நம் உடலில் செல்லும் சில வகை ரசாயனங்கள் மற்றும் நச்சுகள் மலம் வழியே வெளியேறிவிடும். கிராபைட்டோ வெளியேறாமல் அப்படியே உடலினுள் தங்கிவிடுகிறது. இப்படி தங்கும் கிராபைட்டுகள் ஒன்றாகக் குவிந்து நாளடைவில் நம் உடலுக்கு அதிக அளவில் தீங்கு விளைவிக்கும். அதிக எண்ணெய் கொலஸ்ட்ரால் என்று அதை வெளியேற்றுவதற்காக கிராபைட்டை அறியாமலே விழுங்கி ஆபத்தை விலை கொடுத்து வாங்க வேண்டாம்!” என்கிறார் டாக்டர் கலைமதி.

"எண்ணெய் கொலஸ்ட்ரால் என்று அதை வெளியேற்றுவதற்காக கிராபைட்டை அறியாமலே விழுங்கி ஆபத்தை விலைகொடுத்து வாங்க வேண்டாம்!"


Similar Threads: