தெற்றுப்பல்-அழகா, ஆபத்தா?

கொஞ்சம் விதி மீறலும் அழகுதான்... நேர்த்தியாக அமைந்திருக்கும் பற்களுக்கிடையே, ஒற்றைப்பல் மட்டும் கொஞ்சம் எல்லை தாண்டினால் தெற்றுப்பல் அழகு என்று ‘சுப்ரமணியபுரம்’ ஸ்வாதி போல பெயர் வாங்கிவிடலாம். ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட பற்கள் என்றால் சம்பந்தப்பட்டவரின் தன்னம்பிக்கையே பறிபோய்விடும். குழந்தைப் பருவத்திலேயே இந்தப் பிரச்னையைத் தடுத்துவிட்டால், எதிர்காலத்தில் டூத் பேஸ்ட் விளம்பரம் செய்யும் காஜல் அகர்வால் போல ‘பளிச்’ என சிரிக்கலாம் என்பதற்கான வழிமுறைகளைச் சொல்கிறார் பல் சிகிச்சை மருத்துவரான ஆனந்தி.

‘‘குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளில் தெற்றுப்பல் பிரச்னை முக்கியமானது. இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. பெற்றோரில் அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ தாடை எலும்பு அமைப்பு சரியாக இல்லையென்றால் குழந்தைகளுக்கும் தெற்றுப்பல் வருவதற்கான வாய்ப்பு உண்டு. பால் குடிக்கப் பயன்படுத்தும் நிப்பிள், விரல் சூப்பும் பழக்கம் ஆகியவற்றாலும் தெற்றுப்பல் வரலாம். விரல் சூப்பும் பழக்கத்தை சாதாரணமாக நினைக்காமல் 18 மாதங்களுக்குள் நிறுத்திவிட வேண்டும். இல்லையென்றால், தெற்றுப்பல் பாதிப்பு ஏற்படும். சில குழந்தைகள் மூக்கடைப்பின் காரணமாக வாய் வழியாக மூச்சு விடுவார்கள்.

இதனாலும் பற்கள் வெளியே வரும். சில குழந்தைகளுக்கு மேல்தாடை பெரிதாகவும் கீழ்தாடை சிறியதாகவும் காணப்படும். இதன் காரணமாகவும் பல் வரிசையில் மாற்றம் ஏற்பட்டு, தெற்றுப்பல் ஏற்படும். தாடைப் பகுதியைவிட பற்கள் பெரிதாக இருப்பதாலும் தெற்றுப்பல் வரும். பற்களின் சராசரி எண்ணிக்கையைவிட அதிகமாக இருந்தால், இடப்பற்றாக்குறை காரணமாகவும் பற்கள் வெளியே வர ஆரம்பிக்கும்’’ என்றவரிடம், இவற்றை முன்னரே கண்டுபிடித்துவிட முடியாதா என்று கேட்டோம்.


‘‘முடி, நகம், பல் போன்ற உடல் உறுப்புகள் வளர வளரத்தான் அவற்றில் உள்ள குறைபாடுகள் வெளியே தெரியும். அதனால்தான் தெற்றுப்பல் பிரச்னையை குழந்தை வயிற்றில் இருக்கும்போதே கண்டுபிடிக்க முடிவதில்லை. 6 வயதில் இருந்து 12 வயது வரை பால் பற்கள் முளைக்கும். அவை விழுந்தபின்னர், நிரந்தர பற்கள் முளைக்க ஆரம்பிக்கும்போதுதான் தெற்றுப்பல் அறிகுறிகள் தென்படும். முதலில் முக அமைப்பில் மாறுபாடு தெரியும். அடுத்து தாடை வளர வளர தெற்றுப்பற்கள் உருவாவதற்கான வாயை சரியாக மூட முடியாத நிலை போன்ற அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.’’

சிகிச்சை எப்போது எடுத்துக் கொள்ளலாம்?

‘‘பால் பற்கள் விழுந்து நிரந்தர பற்கள் முளைக்கும்போது சொத்தைப்பற்கள் இருந்தால், அவற்றை அகற்றி விட்டு Space Maintainer பொருத்த வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் பற்கள் சரியான இடத்தில் முளைக்கும். இதனால் தெற்றுப்பல் வருவதை தடுக்கலாம். குழந்தைகளுக்கு 11 வயது முடிந்த பின்னர் சிகிச்சைகளை ஆரம்பிப்பது நல்லது.

தெற்றுப் பல்லை சரி செய்ய கழற்றி மாற்றக்கூடிய கிளிப், நிரந்தரமான கிளிப் போன்றவை உள்ளன. தெற்றுப்பல்லின் தீவிரத்தைப் பொறுத்து இவற்றில் ஏதாவது ஒரு கிளிப்பை பொருத்திக்கொள்ளலாம். வாயின் வெளியே பற்கள் துருத்திக்கொண்டு இருப்பதை சரிசெய்ய 12 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். கிளிப் போட்ட பிறகு, சாக்லெட் போன்ற கடினமான உணவுப்பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மாதத்துக்கு ஒருதடவை கிளிப்பை பரிசோதனை செய்து கொள்வதும் அவசியம். தெற்றுப்பல் பாதிப்பை சரிசெய்ய அடர்த்தியாக இருக்கும் பற்களின் வடிவத்தை சீராக்கிய பின்னர் Cap மாட்டிக்கொண்டால் எந்தப் பிரச்னையும் இருக்காது!’’

"பால் குடிக்கப் பயன்படுத்தும் நிப்பிள், விரல் சூப்பும் பழக்கம் ஆகியவற்றாலும் தெற்றுப்பல் வரலாம். விரல் சூப்பும் பழக்கத்தை சாதாரணமாக நினைக்காமல் 18 மாதங்களுக்குள் நிறுத்திவிட வேண்டும். இல்லையென்றால், தெற்றுப்பல் பாதிப்பு ஏற்படும்."


Similar Threads: