பிளீச்சிங் பவுடரை பாதுகாப்பாகபயன்படுத்துவது எப்படி?


வெள்ளத்துக்குப் பின்

சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிற்குப் பிறகு அரசின் சுகாதார நிலைய ஊழியர்கள் தெருவெங்கிலும் பிளீச்சிங் பவுடரை தூவி வருவதைப் பார்க்கிறோம். பிளீச்சிங் பவுடர் பாக்ெகட்டுகளை கொடுத்து நம் வீட்டில் உள்ள தொட்டிகளிலும் கிணற்றிலும் போடச் சொல்கிறார்கள். பிளீச்சிங் பவுடர் என்ன செய்யும்? அதை எப்படிப் பாதுகாப்பாக உபயோகிப்பது? நம் சந்தேகங்களைத் தீர்க்கிறார்... வேதியியல் பேராசிரியர் ரவி சுந்தரபாரதி.

``வெள்ளப் பெருக்கின்போது மனித உடல், விலங்குகள் போன்றவை அடித்துவரப்பட்டதோடு, சாக்கடை கழிவுநீரும் மழை நீரோடு கலந்திருந்தது. இதனால் மாசடைந்த நீரில் வைரஸ்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் போன்ற தொற்றுக்கிருமிகள் உருவாகி பல்வேறு நோய்கள் வரக் காரணமாகும். வெகுவேகமாக நோய்கள் பரவி அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிப்படையும் அபாயம் ஏற்படும் இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது அவசியமான ஒன்று. அவற்றில் ஒன்றுதான் பிளீச்சிங் பவுடர் உபயோகம்.

பிளீச்சிங் பவுடரின் ரசாயனப் பெயர் Calcium hypochlorite. வெறும் வெள்ளை பவுடருடன் கால்சியம் ஹைப்போ குளோரைடு மற்றும் குளோரின் வாயு கலந்த கலவையே இது.பிளீச்சிங் பவுடரில் கலந்துள்ள குளோரினானது தரையில் போடும்போது போட்ட அரைமணி நேரத்திற்குள்ளாகவே வாயுவாக வெளியேறி காற்றோடு கலந்துவிடுகிறது. தேங்கியுள்ள நீரில் உருவாகும் கிருமிகளை அழிப்பதோடு, காற்றில் கலக்கும் இந்த வாயு காற்றில் உள்ள கிருமிகளையும் அழித்து விடுகிறது. அதன்பின் வெறும் சுண்ணாம்பு பவுடர் மட்டுமே திட்டுகளாக தங்கி இருக்கும்.

இதனால் நமக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. வெள்ளப் பெருக்கோடு கலந்து வந்த கழிவு நீர் கீழ்நிலைத் தொட்டிகளிலும் கலந்திருக்கும். போர்வெல்லாக இருந்தாலும் சிறு துவாரங்களின் வழியாகக் கூட நீர் உள்ளே செல்ல வாய்ப்புள்ளது. எனவே, கண்டிப்பாக அவற்றில் நீரில் கரைத்து ஊற்ற வேண்டும். இதன்மூலம் தண்ணீரில் உள்ள கொசு முட்டைகள், லார்வாக்களை அழித்துவிடலாம்.

2 நாட்கள் வரை குளோரினின் வாடை இருக்குமே தவிர, அதிக அளவிலான ஆபத்து எதுவும் இல்லை. பிளீச்சிங் பவுடரை தரையில் தூவும்போதும் நீரில் கரைக்கும் போதும் நேரிடையாக கைகளை உபயோகிக்கக் கூடாது. சருமத்தில் படும்போது எரிச்சல் ஏற்பட்டு அந்த இடத்தில் சருமம் உரிந்துவிடும். எனவே, கைக்கு உறை போட்டுக் கொண்டு பாதுகாப்பாக உபயோகிப்பது நல்லது. சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் உள்ளவர்களுக்கு இதன் நெடி ஆகாது என்பதால் விலகி இருக்கலாம் அல்லது மூக்கை ஒரு துணியால் மூடிக் கொண்டு உபயோகிக்கலாம்” என்கிறார்.


Similar Threads: