சல்மான் கான் முதல் சாமான்யன் வரை தாக்கும் வினோத வலி


நடிகர் சல்மான்கான் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படும் வரை இந்த நோய் பற்றி பலருக்கும் தெரியாமல் தான் இருந்தது. `ஏதோ வினோதமான நரம்பு பிரச்னையாம்! முகத்தில் தாங்க முடியாத அளவுக்கு வலி வருமாம்!’ என்றுதான் பேசினார்களே தவிர, அதன் பெயர்கூட மக்களுக்குத் தெரியவில்லை. அதன் பெயர் டிரைஜெமினல் நியூரால்ஜியா (Trigeminal neuralgia). கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் இந்த நோயால் தாங்க முடியாத வலியை அனுபவித்ததாக சல்மான் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். எந்தச் சிகிச்சையும் பலனளிக்காமல் இறுதியாக அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை செய்து இந்த நோயில் இருந்து மீண்டார் சல்மான். சல்மானை மட்டுமல்ல... சாதாரண நபர்களையும் கூட தாக்கக்கூடிய இந்த நோய் பற்றி விளக்குகிறார் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எல்.முருகன்...

``நமது மூளையில் இருந்து 12 கிரேனியல் நரம்புகள் வருகின்றன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பணி செய்கின்றன. இதில் 5வது கிரேனியல் நரம்பு டிரைஜெமினல். இது தொடுதல் உணர்வை கட்டுப்படுத்தும் நரம்பு. வெப்பம், குளிர் இவற்றையெல்லாம் வேறுபடுத்திக் காட்டக்கூடியது. முகத்தில் ஏற்படும் வலியை உணர வைப்பதும் இந்த நரம்பின் வேலைகளில் ஒன்றுதான். இந்த டிரைஜெமினல் நரம்பில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் வரும் வலியே டிரைஜெமினல் நியூரால்ஜியா. நியூரால்ஜியா என்னும் மருத்துவ பெயரின் பொருள் நரம்பில் ஏற்படும் வலி என்பதுதான். இந்த டிரைஜெமினல் நரம்பானது V1, V2, V3 என 3 பிரிவுகளாக முகத்தில் செயல்படுகிறது. முறையே நெற்றி, கன்னம், தாடை என மூன்று இடங்களின் தொடு உணர்வையும், வலி உணர்வையும் தெரியப்படுத்தும் வேலையைச் செய்கிறது.

இந்த நோய் உள்ளவர்களுக்கு ஜில் தண்ணீர் குடிக்கும் போது அல்லது பிரஷ் பண்ணும் போது, குளிர்காற்று அடிக்கும் போது, சாப்பிடும் போது ஷாக் அடித்தது போல கன்னத்தில் இருந்து தாடை வரை வலி இருக்கும். முகத்தின் ஒருபக்கம் மட்டும் இந்த வலி ஏற்படும். சிலருக்கு நெற்றியில் இருந்து வலி ஆரம்பிக்கும். மிக அரிதாக ஒரு சிலருக்கு இருபக்கமும் வலி இருக்கும். ஒரு நிமிடம் முதல் இரு நிமிடம் நீடித்தாலும் தாங்க முடியாத அளவுக்கு வலி இருக்கும். வலி வரும் நிமிடங்களில் ‘ஆ, ஊ’ என கத்துவார்கள்.

எப்போது வரும் இந்த வலி எனக் கணிக்கவும் முடியாது. குளிர்காலத்தில் பிரச்னையின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதை பல்வலி என தவறாக நினைத்துக் கொண்டு பல்லை பிடுங்கிக் கொண்டவர்கள் கூட இருக்கிறார்கள். தலைவலி அடிக்கடி வந்து சரியாகாமல் இருந்தாலும், மேற்சொன்னவற்றில் ஏதேனும் அறிகுறிகள் இருந்தாலும் நரம்பியல் மருத்துவரை பார்த்து உடனடியாக பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

இந்த வலியுடன் வருபவர்களுக்கு முதலில் மூளையில் எதுவும் கட்டி இருக்கிறதா என்பதை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்வோம். கட்டி இருந்தாலும் முகத்தில் வலி வரும். அப்படியில்லை டிரைஜெமினல் நியூரால்ஜியாதான் என்பதை உறுதி செய்த பிறகு மருந்து, மாத்திரைகளில் வலியை சரி செய்ய முயல்வோம். மூளையிலிருந்து ரத்தக்குழாய்கள் நரம்பை அழுத்திக் கொண்டிருப்பதால் இவ்வகை வலி ஏற்படுகிறது.

சிலருக்கு எந்தத் தூண்டுதலும் இல்லாமல் கூட இவ்வகை வலி வரும். காரணம் அறிய முடியாது. இதை ஸ்கேன் செய்து கண்டுபிடித்துவிடலாம். இன்ஜெக்*ஷன் கொடுத்து சரி செய்யலாம். சரியாகாவிட்டால் Radio frequency ablation, Balloon compression போன்ற சிகிச்சை முறைகளையும் இந்த பிரச்னையை சரி செய்ய பயன்படுத்துகிறோம். Cyberknife radiation மூலம் எந்த பக்கவிளைவுகளும் இல்லாமல் வலியை சரி செய்ய முடியும்.

மேற்கண்ட சிகிச்சை முறைகள் பலனளிக்காமல் போனாலும், இப்பிரச்னைக்காக சாப்பிடும் மருந்து, மாத்திரைகளின் பக்கவிளைவுகள் அதிகமாக இருந்தாலோ, இந்த பிரச்னையை போக்க மைக்ரோவாஸ்குலார் டிகம்ப்ரஷன் (Microvascular decompression) என்னும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டு, அழுத்திக் கொண்டிருக்கும் ரத்தக் குழாய்க்கும் நரம்புக்கும் இடையே சிறிய பஞ்சு போன்ற டெப்ளானை வைத்துவிடுவோம்.

இதனால் அழுத்தமும் குறைந்து வலியும் நின்றுவிடும். முன் நெற்றி, கன்னம், தாடை இவற்றில் சாப்பிடும் போது, தண்ணீர் குடிக்கும் போது ஷாக் அடிப்பது போல வலியை உணர்ந்தாலோ, தொடர்ந்து தலைவலி இருந்தாலோ உடனடியாக நரம்பியல் நிபுணரை சந்தித்து பரிசோதனை செய்துவிடுங்கள். ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் இந்தப் பிரச்னையை எளிதாக சரி செய்துவிடலாம். வளர விட்டாலோ, வலியானது தன்னம்பிக்கையை தடை செய்து வீட்டினுள் முடக்கிப் போடும். இது சரி செய்துவிடக் கூடிய பிரச்னைதான் என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் பயப்படத் தேவையில்லை.’’

இந்த நோய் உள்ளவர்களுக்கு ஜில் தண்ணீர் குடிக்கும் போது அல்லது பிரஷ் பண்ணும் போது, குளிர்காற்று அடிக்கும் போது, சாப்பிடும் போது ஷாக் அடித்தது போல கன்னத்தில் இருந்து தாடை வரை வலி இருக்கும். இதை பல்வலி என தவறாக நினைத்துக் கொண்டு பல்லை பிடுங்கிக் கொண்டவர்கள் கூட இருக்கிறார்கள்!


Similar Threads: