இரும்புச்சத்து எங்கே போகுது?


ரத்தசோகைக்காக இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறோம். இது மலச்சிக்கலை ஏற்படுத்துவது ஏன்?

ஐயம் தீர்க்கிறார் ரத்த இயல் மருத்துவர் கார்த்திகேயன்...

``ரத்தசோகை பாதிப்பை குணப்படுத்துவதற்காக, ரத்த இயல் மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடும் இரும்புச்சத்து மாத்திரைகள் மலச்சிக்கலை ஏற்படுத்தும் என்பதில் ஓரளவு உண்மை இருக்கத்தான் செய்கிறது. அப்படி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 10 - 20 சதவிகிதம் மட்டுமே. ரத்தசோகை பாதிப்பால் அவதிப்படுபவர்களைக் குணப்படுத்துவதற்காக 25 வகை இரும்புச்சத்து மாத்திரைகள் கிடைக்கின்றன. இவற்றில், ஏதேனும் ஒன்றை ரத்த இயல் மருத்துவரின் ஆலோசனைப்படி உணவு உண்ட பின் சாப்பிட்டு வரலாம். ஒருவேளை அல்லது மூன்று வேளையும் இந்த மாத்திரைகளை எந்தவித தயக்கமும் இல்லாமல் எடுத்துக்கொள்ளலாம்.

2 மணி நேரத்துக்கு முன்பு பால், டீ குடிக்க வேண்டாம். 2 மணி நேரம் கழித்துதான் பால், டீ குடிக்க வேண்டும். ஒரு சிலருக்கு இம்மாத்திரைகளால் பேதி வரலாம். இரும்புச்சத்து மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் காரணமாக மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் மாத்திரைகளுக்குப் பதிலாக, ரத்த இயல் மருத்துவரின் ஆலோசனைப்படி இரும்புச்சத்து டானிக் குடித்து வரலாம். மலச்சிக்கல் ஏற்பட நம்முடைய உணவுப்பழக்கமும் ஒரு காரணம். மட்டன், சிக்கன், முட்டை போன்ற அசைவ உணவு வகைகளை அளவுக்கு அதிகமாக அடிக்கடி சாப்பிட்டு வருவதாலும் மலச்சிக்கல் ஏற்படலாம். இதை சரி செய்வதற்கு உணவில் பச்சை காய்கறிகள், பேரீச்சம்பழம், கீரைகள், பழங்கள் நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் நிறைய தண்ணீர் குடித்து வருவதும் மலச்சிக்கலைச் சரிசெய்ய உதவும்.

இரும்புச்சத்து மாத்திரைகளுக்குப் பதிலாக தற்போது Iron Dextran, Iron Sucrose, Iron Maltose போன்ற ஊசி வகைகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. இவற்றில் முதலாவதாக இடம்பெற்றுள்ள Iron Dextran என்பது தசையில் போடப்படும் ஊசி. இதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் அதிகம். இரண்டாவது ஊசியான Iron Sucrose நேரடியாக நரம்பில் செலுத்தப்படும் ஊசி. இந்த மருந்து நேரடியாக ரத்தத்தில் கலப்பதால் சீக்கிரம் பலன் கிடைக்கும். அலர்ஜியும் வராது.’’


Similar Threads: